1.4 பதங்களின் அடிப்படையில் புணர்ச்சிப் பாகுபாடு

நிலைமொழி பகாப்பதமாகவோ, பகுபதமாகவோ இருக்கலாம். வருமொழியும் பகுபதமாகவோ, பகாப்பதமாகவோ இருக்கலாம். (பகுபதம்-பகுதி, விகுதி, இடைநிலை என்று பிரித்துப் பார்க்கக் கூடிய பதம்; பகாப்பதம்- அவ்வாறு பிரிக்க முடியாத பதம்.) எனவே ஒன்றோடொன்று புணருகின்ற பதங்களை அடிப்படையாகக் கொண்டு புணர்ச்சியை நான்கு வகையாகப் பிரிக்கலாம். அவை வருமாறு:

(1) பகாப்பதத்தின் முன் பகாப்பதம் வரல்

சான்று:

பொன் + குடம்

(2) பகுபதத்தின் முன் பகுபதம் வரல்

சான்று:

கண்ணன் + ஓடினான்

இவை இரண்டும், இருவகைப் பதங்களும் தன்னொடு தானே பொருந்தி வந்தவை ஆகும்.

(3) பகாப்பதத்தின் முன் பகுபதம் வரல

சான்று:

மணி + அடித்தான்

(4) பகுபதத்தின் முன் பகாப்பதம் வரல்

சான்று:

கண்ணன் + கால்

இவை இரண்டும், இருவகைப் பதங்களும் பிறிதொடு பிறிதுமாய்ப் பொருந்தி வந்தவை ஆகும்.

இங்கே காட்டிய சான்றுகளில் பொன், குடம், மணி, கால் ஆகியன பகாப்பதங்கள். இவற்றைப் பகுபதங்களைப் போலப் பகுதி, இடைநிலை, விகுதி என்றவாறு பிரித்துக் காண முடியாது. எனவே இவை பகாப்பதங்கள். கண்ணன், ஓடினான், அடித்தான் ஆகியன பகுபதங்கள். இவற்றை முறையே,

கண்+அன் (பகுதி + விகுதி)
ஓடு + இன் + ஆன் (பகுதி + இடைநிலை + விகுதி)
அடி + த் + த் + ஆன் (பகுதி + சந்தி + இடைநிலை + விகுதி)

என்றவாறு பிரித்துக் காண முடியும். எனவே இவை பகுபதங்கள்.