2.3 பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் முன் வல்லினமும் பிறவும்

உயர்திணைக்கும், அஃறிணைக்கும் பொதுவாக வழங்கும் பெயர் பொதுப்பெயர் எனப்படும். இதனை இருதிணைப் பொதுப்பெயர் என்றும் குறிப்பிடுவர்.

சான்று :

சாத்தன், சாத்தி

இச்சொற்கள் உயர்திணையில் முறையே ஒருவனையும், ஒருத்தியையும் குறிக்கும் இயற்பெயர்களாகவும், அஃறிணையில் முறையே ஓர் எருதையும், ஒரு பசுவையும் அழைக்கும் பெயர்களாகவும் வழங்கி வந்தன. எனவே சாத்தன், சாத்தி என்பன பொதுப்பெயர்கள் என்று கூறப்படுகின்றன. இதே போல் தாய், தந்தை, ஆண், பெண், பிள்ளை போன்ற சொற்களும், நான்,யான்,யாம்,நாம் என்னும் தன்மை இடப்பெயர்களும், நீ, நீர், நீயிர், நீவிர் என்னும் முன்னிலை இடப்பெயர்களும் இருதிணைக்கும் பொதுவாக வழங்கிய பெயர்களாகும். நாம் வாழும் இக்காலத்திலும் வீட்டில் வளர்க்கும் விலங்குகள், பறவைகள், கோயில்களில் வளர்க்கும் விலங்குகள், பறவைகள் முதலியவற்றிற்கு மக்களுக்கு வைக்கும் இயற்பெயர்களை இட்டு அவற்றை அழைக்கும் வழக்கம் இருப்பதைக் காணலாம்.

உயர்திணைக்கு மட்டும் வழங்கும் பெயர் உயர்திணைப் பெயர் எனப்படும்.

சான்று :

அவன், அவள், அவர்
நம்பி, நங்கை
மகன், மகள், மக்கள்
தோன்றல், குரிசில், நாடன், ஊரன்

பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஆகிய இருவகைப் பெயர்கள் நிலைமொழியில் நின்று, அவை வல்லின எழுத்துகளையும், பிற எழுத்துகளையும் முதலாக உடைய வருமொழிகளோடு புணரும் முறை பற்றி நன்னூலார் மூன்று பொதுவிதிகளைக் கூறுகிறார். அவற்றை ஈண்டுச் சான்றுடன் காண்போம்.

  1. பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஆகியவற்றின் ஈற்றில் உள்ள மெய்கள், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் இயல்பாகும்.
  • பொதுப்பெயர் ஈற்று மெய் வல்லினம் வர இயல்பாதல்
  • சான்று:

    சாத்தன் + சிறியன் = சாத்தன் சிறியன் - அல்வழி
    சாத்தன் + சிறிது = சாத்தன் சிறிது
    பெண் + பெரியள் = பெண் பெரியள்
    நான் + சிறியேன் = நான் சிறியேன்

    இவை எழுவாய்த் தொடர்.

    சாத்தன் + கை = சாத்தன் கை - வேற்றுமை
    சாத்தன் + கொம்பு = சாத்தன் கொம்பு
    ஆண் + செவி = ஆண் செவி
    ஆண் + கால் = ஆண் கால்

    இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.

  • உயர்திணைப் பெயர் ஈற்றுமெய் வல்லினம் வர இயல்பாதல்
  • சான்று:

    அவன் + சிறியன் = அவன் சிறியன் - அல்வழி
    அவள் + பெரியள் = அவள் பெரியள்
    மகன் + தடியன் = மகன் தடியன்
    ஊரன் + கொடியன் = ஊரன் கொடியன்

    இவை எழுவாய்த் தொடர்.

    அவன் + புகழ் = அவன் புகழ் - வேற்றுமை
    அவள் + பெருமை = அவள் பெருமை
    மகன் + சிறுமை = மகன் சிறுமை
    நாடன் + கை = நாடன் கை

    இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.

    மேலே காட்டிய சான்றுகளில் நிலைமொழியாக உள்ள பொதுப்பெயர்களின் இறுதியிலும் உயர்திணைப் பெயர்களின் இறுதியிலும் உள்ள மெய்கள், வருமொழி முதலில் வல்லினம் வர, அல்வழியிலும் வேற்றுமையிலும் இயல்பாயின.

    1. பொதுப்பெயர், உயர்திணைப் பெயர்களின் ஈற்றில் நிற்கும் உயிர் எழுத்துகளின் முன்னும், யகர ரகர மெய்களின் முன்னும், வருமொழி முதலில் வருகின்ற வல்லின மெய்கள் மிகா; இயல்பாகவே ரும்.
  • பொதுப்பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்
  • சான்று:

    பிள்ளை + சிறியன் = பிள்ளை சிறியன் - அல்வழி
    பிள்ளை + சிறிது = பிள்ளை சிறிது
    நீ + பெரியை = நீ பெரியை
    நீவிர் + பெரியீர் = நீவிர் பெரியீர்

    இவை எழுவாய்த் தொடர். (நீவிர் - நீங்கள்)

    சாத்தி + கை = சாத்தி கை - வேற்றுமை
    சாத்தி + தலை = சாத்தி தலை
    தாய் + சொத்து = தாய் சொத்து
    தாய் + செவி = தாய் செவி

    இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.

  • உயர்திணைப் பெயர் முன் வருகின்ற வல்லினம் இயல்பாதல்
  • சான்று:

    நம்பி + பெரியன் = நம்பி பெரியன் - அல்வழி
    நங்கை +பெரியள் = நங்கை பெரியள்
    அவர் + தீயர் = அவர் தீயர்

    இவை எழுவாய்த் தொடர்.

    நம்பி + பெருமை = நம்பி பெருமை - வேற்றுமை
    நங்கை + புகழ் = நங்கை புகழ்
    அவர் + கதை = அவர் கதை

    இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.

    மேலே காட்டிய சான்றுகளில் நிலைமொழியாக உள்ள பொதுப்பெயர், உயர்திணைப் பெயர் ஆகியவற்றின் இறுதியில் வல்லினம் அல்வழியிலும் வேற்றுமையிலும் மிகாமல் இயல்பாதலைக் காணலாம்.

    3. உயிர் ஈற்றையும், மெய் ஈற்றையும் கொண்ட உயர்திணைப் பெயர்களுள் சில பெயர்கள் உயிர், வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற நாற்கணத்தோடு புணரும்போது, நிலைமொழி வருமொழிகள் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்களை அடையும்.

    சான்று :

    கபிலன் + பரணன் = கபிலபரணர் - அல்வழி
    வடுகன் + நாதன் = வடுகநாதன்
    அரசன் + வள்ளல் = அரசவள்ளல்
    விராடன் + அரசன் = விராடவரசன்

    (கபிலபரணர் - கபிலரும் பரணரும், உம்மைத் தொகை; வடுகநாதன் - வடுகன் ஆகிய நாதன்; அரச வள்ளல் - அரசனாகிய வள்ளல்; விராட அரசன் - விராடன் ஆகிய அரசன். இவை இருபெயரொட்டுப் பண்புத் தொகை)

    சமணர் + பள்ளி = சமணப் பள்ளி - வேற்றுமை
    பாண்டியன் + நாடு = பாண்டிய நாடு
    குமரன் + கோட்டம் = குமரக் கோட்டம்
    மக்கள் + பண்பு = மக்கட் பண்பு

    (சமணப் பள்ளி - சமணரது பள்ளி; பாண்டிய நாடு - பாண்டியனது நாடு; குமரக் கோட்டம் - குமரனது கோட்டம்; மக்கட் பண்பு - மக்களது பண்பு. இவை ஆறாம் வேற்றுமைத் தொகை.) [கோட்டம் - கோயில்]

    இங்கே அல்வழிக்கும், வேற்றுமைக்கும் காட்டிய சான்றுகளில் நிலைமொழியிலும், வருமொழியிலும் வரும் உயர்திணைப்பெயர்கள் தம்முள் புணரும்போது தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் விகாரங்கள் அடைந்துள்ளதைக் கண்டு அறிந்து கொள்ளலாம்.

    மேலே கூறிய மூன்று விதிகளையும் பின்வரும் நூற்பாவில் நன்னூலார் குறிப்பிடுகிறார்.

    பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய்
    வலிவரின் இயல்பாம்; ஆவி யரமுன்
    வன்மை மிகா; சில விகாரமாம் உயர்திணை - (நன்னூல், 159)