3.1 உயிர் முன் உயிர் புணர்தல் நிலைமொழியின் ஈற்றில் ஓர் உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலிலும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவ்விரண்டு உயிர் எழுத்துகளும் புணரும் புணர்ச்சி உயிர்முன் உயிர் புணர்தல் எனப்படும். நிலைமொழியின் ஈற்றிலும், வருமொழியின் முதலிலும் உயிர் எழுத்துகள் வருமானால், அவ்விரண்டு உயிர்களையும் அடுத்தடுத்து ஒலிக்கும்போது, இரண்டுக்கும் இடையே விட்டிசை தோன்றும். ஓர் எழுத்தை ஒலித்து, சற்று இடைவெளி விட்டு, பின்பு அதற்கு அடுத்த எழுத்தை ஒலிப்பது விட்டிசை எனப்படும். விட்டு இசைப்பது விட்டிசை. இரண்டு உயிர்களுக்கு இடையே தோன்றும் விட்டிசை, ஒலிக்கும் முயற்சியை அரிதாக்குகிறது. சான்று: மணி + அரசன் (இ முன் அ) இச்சான்றுகளை அப்படியே உள்ளபடி வாய்விட்டுச் சொல்லிப் பாருங்கள். நிலைமொழி ஈற்று உயிர்க்கும், வருமொழி முதல் உயிர்க்கும் இடையே விட்டிசை தோன்றுவதைக் காணலாம். இதற்குக் காரணம் மணி+அரசன் என்பதில், இ,அ என்னும் இரண்டு உயிர்களும் வர+இல்லை என்பதில், அ,இ என்னும் இரண்டு உயிர்களும் உடம்படாமல் (உடன்படாமல்) அல்லது ஒன்றுபடாமல் இருப்பதே ஆகும். இத்தகைய சூழலில் உடம்படாத அவ்விரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக, அவ்வுயிர்களுக்கு இடையே ய், வ் என்னும் மெய்களுள் ஏதேனும் ஒன்று வரும். சான்று : மணி + அரசன் > மணி + ய் +
அரசன் = மணியரசன் இச்சான்றுகளில் உள்ள மணியரசன், வரவில்லை என்பனவற்றை அப்படியே உள்ளபடி சொல்லிப் பாருங்கள். ஒலிக்கும் முயற்சியில் எளிமை இருப்பதை உணர்வீர்கள். உடம்படாத இரண்டு உயிர்களை உடம்படுத்துவதற்காக வருகின்ற மெய்கள் ஆதலால், நம் தமிழ் இலக்கண நூலார், ய்,வ் என்னும் மெய்களை உடம்படுமெய் என்று வழங்கினர். மொழியியலார் இவ்விரண்டு மெய்களை அரை உயிர்கள் (Semi Vowels) என்று குறிப்பிடுவர். இவை முறையே இகர உயிரையும், உகர உயிரையும் ஒத்த ஒலியை உடையதால் இவ்வாறு கூறினர். உயிர்முன் உயிர்வந்து புணரும் புணர்ச்சியில் உடம்படுமெய் வருவது பற்றி நன்னூலார் மூன்று விதிகளைக் குறிப்பிடுகிறார். அவை பின்வருமாறு: 1. நிலைமொழியின் ஈற்றில் இ,ஈ,ஐ - என்னும் மூன்று உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவ்விரண்டு உயிர் எழுத்துகளுக்கு இடையே யகர மெய்யானது உடம்படுமெய்யாக வரும். சான்று: மணி + அடித்தான் > மணி + ய்
+ அடித்தான் = மணியடித்தான் 2. நிலைமொழியின் ஈற்றில் இ,ஈ,ஐ- என்னும் மூன்று உயிர் எழுத்துகளைத் தவிர, மற்ற உயிர் எழுத்துகளில் ஏதேனும் ஒன்று நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவற்றிற்கு இடையே வகர மெய்யானது உடம்படுமெய்யாக வரும். சான்று: பல + இடங்கள் > பல + வ்
+ இடங்கள் = பலவிடங்கள் 3. நிலைமொழியின் ஈற்றில் ஏ என்னும் உயிர் எழுத்து நின்று, வருமொழியின் முதலில் ஏதேனும் ஓர் உயிர் எழுத்து வந்தால், அவற்றிற்கு இடையே யகரம், வகரம் ஆகிய இரண்டும் உடம்படுமெய்களாக வரும். சான்று: சே + அடி > சே + ய் + அடி
= சேயடி (சே-செம்மை) மேலே கூறப்பட்ட புணர்ச்சி விதிகளை நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியலில் பின்வரும் நூற்பாவில் குறிப்பிடுகிறார். இஈ ஐவழி யவ்வும், ஏனை (யவ்வும் - யகர மெய்யும்; வவ்வும் - வகர மெய்யும்; இவ்விருமையும் - இந்த யகரமெய், வகரமெய் ஆகிய இரண்டும்.) |