3.3 குற்றியலுகரத்தின் முன்னர் உயிரும் யகரமும் புணர்தல்

இப்புணர்ச்சி பற்றி நன்னூலார் கூறுவனவற்றைக் காண்பதற்கு முன்னர், குற்றியலுகரம் என்றால் என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது நலம். குற்றியலுகரத்தைப் பற்றியும், அதன் வகைகளைப் பற்றியும் ஏற்கெனவே சார்பு எழுத்துகள் என்ற பாடத்தில் படித்துள்ளோம். அவற்றை ஈண்டு மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம். மேலும் குற்றியலுகரத்தோடு தொடர்புடைய முற்றியலுகரத்தைப் பற்றியும் அறிந்து கொள்வோம். ஏனெனில் குற்றியலுகரப் புணர்ச்சிக்குக் கூறப்படும் விதிகளுள் சில, முற்றியலுகரத்திற்கும் பொருந்துவனவாக நன்னூலாரால் கூறப்பட்டுள்ளன.

குற்றியலுகரம் என்றால் என்ன? தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ, இரண்டும் அதற்கும் மேற்பட்ட எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லின மெய்கள் ஆறன்மேல் ஏறிவரும் உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவே ஒலிக்கும். இதுவே குற்றியலுகரம் எனப்படும்.

குற்றியலுகரம், தான் ஏறியிருக்கும் வல்லின மெய்க்கு (கு,சு,டு,து,பு,று ஆகிய ஆறனுள் ஒன்றனுக்கு ) அயலே (இடப்பக்கத்தில்) வரும் எழுத்தைக் கொண்டு ஆறு வகைப்படும். அவையும் அவற்றிற்கான சான்றும் வருமாறு:

    1. நெடில் தொடர்க் குற்றியலுகரம் - நாடு, காது, ஆறு
    2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் - அஃது, எஃகு
    3. உயிர்த் தொடர்க் குற்றியலுகரம் - முரசு, வயது, கிணறு
    4. வன்தொடர்க் குற்றியலுகரம் - பாட்டு, பத்து, பாக்கு
    5. மென்தொடர்க் குற்றியலுகரம் - பந்து, பஞ்சு, குரங்கு
    6. இடைத் தொடர்க் குற்றியலுகரம் - சார்பு, மார்பு, வீழ்து

இனி, முற்றியலுகரம் என்றால் என்ன என்று பார்ப்போம். தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின மெய்யின் மேல் ஏறி வருகின்ற உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து குறையாது ஒரு மாத்திரை அளவாகவே ஒலிக்கும். இது முற்றியலுகரம் எனப்படும்.

சான்று:

அது, பசு, கொடு, அறு.

மேலும் தனி நெட்டெழுத்தைத் தொடர்ந்தோ, பல எழுத்துகளைத் தொடர்ந்தோ ஒரு சொல்லின் இறுதியில் வல்லினம் அல்லாத பிற மெய்களின் மேல் ஏறி வரும் உகரமும் முற்றியலுகரம் ஆகும்.

சான்று:

சாவு, நோவு, கதவு, உறவு, நிலவு

குற்றியலுகரத்தின் முன்னர் உயிர் எழுத்துகளும், யகர மெய்யும் வந்து புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் இரண்டு விதிகளைக் கூறுகிறார். சிலவிடங்களில் முற்றியலுகரத்திற்கும் இவ்விதிகள் பொருந்தும் எனக் கூறுகிறார். அவை வருமாறு:

1.           நிலைமொழி ஈற்றில் குற்றியலுகரம் இருந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து ஒன்று வந்து சேர்ந்தால், அக்குற்றியலுகரம் தான் ஏறியிருக்கின்ற வல்லின மெய்யை விட்டு நீங்கும்.

சான்று:

நாடு + எல்லாம்
(நா (ட்+உ)+ எல்லாம்) = நாடெல்லாம்

அஃது + இல்லார் = அஃதில்லார்
முரசு + அறைந்தான் = முரசறைந்தான்
பாட்டு + இசை = பாட்டிசை
பந்து + ஆட்டம் = பந்தாட்டம்
சார்பு + எழுத்து = சார்பெழுத்து

இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழி ஈற்றில் உள்ள குற்றியலுகரம், வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது, தான் ஏறியிருந்த வல்லின மெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம்.

2.     வருமொழி முதலில் யகரமெய் வந்து சேர்ந்தால் குற்றியலுகரம் இகரமாகத் திரியும்.

சான்று:

நாடு + யாது = நாடியாது
குரங்கு + யாது = குரங்கியாது
களிற்று + யானை = களிற்றியானை

இங்கே காட்டிய சான்றுகளில், நிலைமொழியின் ஈற்றில் உள்ள குற்றியலுகரம், வருமொழி முதலில் யகரமெய் வந்து சேரும்போது இகரமாகத் திரிந்துள்ளதைக் காணலாம். இவ்வாறு திரிந்து வரும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.

குற்றியலுகரத்திற்குக் கூறப்பட்ட இவ்விரண்டு விதிகளை முற்றியலுகரமும் சிலவிடங்களில் பெற்றுவரும்.

சான்று:

சாவு + இல்லை = சாவில்லை
கதவு + எங்கே = கதவெங்கே
உறவு + இல்லை = உறவில்லை

இங்கே காட்டிய சான்றுகளில் நிலைமொழியின் ஈற்றில் உள்ள முற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வந்து சேரும்போது, தான் ஏறியிருக்கின்ற வகரமெய்யை விட்டு நீங்கியதைக் காணலாம்.

கதவு + யாது = கதவியாது

இங்கே முற்றியலுகரம் வருமொழியின் முதலில் யகரம் வர இகரமாகத் திரிந்திருப்பதைக் காணலாம்.

நூற்பா:

உயிர்வரின் உக்குறள் மெய்விட் டோடும்;
யவ்வரின் இய்யாம் முற்றும்அற் றொரோவழி. (நன்னூல் - 164)

(ஓடும் = நீங்கும்; உக்குறள், குறள் உ = குற்றியலுகரம்; மெய்விட்டோடும் - வல்லின மெய்யை விட்டு நீங்கும்; அற்று - குற்றியலுகரத்தைப்போல; முற்றும் - முற்றியலுகரமும்; ஒரோவழி = சிலவிடங்களில்.)

நன்னூலார் தாம் கூறும் இலக்கண விதிகள் சிலவற்றிற்குச் சான்றுகளை, அவ்விதிகளைக் கூறும் நூற்பாவினுள்ளேயே அமைத்துக் காட்டியிருப்பதைக் காணலாம். இந்நூற்பாவில்,

மெய்விட்டு + ஓடும் = மெய்விட்டோடும்
அற்று + ஒரோவழி = அற்றொரோவழி

என வருவனவற்றில் குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உயிர் வரும்போது, முறையே தான் ஏறியிருக்கின்ற டகர, றகர வல்லின மெய்களை விட்டு நீங்கியிருப்பதைக் காணலாம்.