3.2 வருமொழித் தகர, நகரத் திரிபுகள் மெய் ஈற்றுப் புணரியலில் நன்னூலார் நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய்கள் வருமொழியின் முதலில் உள்ள எழுத்துகளோடு புணரும்போது, அவை என்னென்ன மாற்றங்கள் பெறுகின்றன என்பதைப் பற்றி இதுவரை விளக்கிக் கூறினார். பொதுவாக நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது, நிலைமொழியின் ஈற்றில் உள்ள மெய்களே, வருமொழியின் முதல் எழுத்துக்கு ஏற்பத் திரியும். சான்று: மண் + குடம் = மட்குடம்
நிலைமொழியின் இறுதி எழுத்துக்கு ஏற்ப வருமொழியின் முதல் எழுத்தும் பிற எழுத்தாகத் திரிவது உண்டு. இவ்வாறு திரிகின்ற வருமொழி முதல் எழுத்துகள் தகர மெய்யும் நகர மெய்யும் ஆகும். வருமொழியின் முதலில் வருகின்ற இவ்விரண்டு மெய்களும், நிலைமொழியின் ஈற்றில் உள்ள ன, ல, ண, ள ஆகிய நான்கு மெய்களுக்கு முன் வரும்போது மட்டுமே திரிபடைகின்றன. இந்த வருமொழித் தகர நகரத் திரிபுகள் பற்றி நன்னூலார் கூறுவனவற்றைச் சான்றுடன் காண்போம். 1. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் தகர மெய் றகர மெய்யாகத் திரியும். சான்று: பொன் + தாமரை = பொற்றாமரை (இவற்றில் நிலைமொழி ஈற்றில் உள்ள ன-வும் ல-வும் திரிந்துள்ளன. இதற்கு உரிய விதியை முந்தைய பாடத்தில் (Co2141 பகுடி 1.2.1) படித்தோம். நினைவிருக்கிறதா?) 2. நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் நகர மெய் னகர மெய்யாகத் திரியும். சான்று: பொன் + நாடு = பொன்னாடு 3. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, ளகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் தகர மெய் டகர மெய்யாகத் திரியும். சான்று: எண் + தேர் = எண்டேர் (எட்டுத்தேர்) 3. நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர ளகர மெய்களுக்கு முன், வருமொழி முதலில் வரும் நகரமெய் ணகர மெய்யாகத் திரியும். சான்று: கண் + நீர் = கண்ணீர் மேலே கூறிய வருமொழித் தகர நகரத் திரிபுகளை நன்னூலார், னலமுன் றனவும்,
ணளமுன் டணவும், என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார். |