3.4 தொகுப்புரை

இதுவரை லகர, ளகர ஈற்றுப் புணர்ச்சி பற்றியும், வருமொழி தகர, நகரத் திரிபுகள் பற்றியும் நன்னூலார் கூறியனவற்றை அறிந்து கொண்டோம். உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல் ஆகியவற்றில் சொல்லப்பட்ட புணர்ச்சி விதிகளுக்கு மாறுபட்டு இடைச்சொற்கள், உரிச்சொற்கள், வடசொற்கள் ஆகியவையும், இலக்கணப் போலிச் சொற்களும், மரூஉச் சொற்களும், வேறுபட்ட சில புணர்ச்சியைப் பெற்று வருதலை ஏற்றுக் கொள்ளலாம் என்று நன்னூலார் குறிப்பிடும் விதிவிலக்கினை அறிந்து கொள்ளலாம். நன்னூலார் குறிப்பிடும் விதிவிலக்கின் வழிநின்று, புணர்ச்சி இலக்கணப்படி வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் கள் விகுதி சேர்த்து எழுதும் போது, கருத்துக்கள், எழுத்துக்கள் என வல்லினம் மிகுமாறு எழுதாமல் கருத்துகள், எழுத்துகள் என வல்லினம் மிகாமல் எழுதுவது இன்று கற்றறிந்த அறிஞர்களிடமும் நிலைத்துவிட்டது என்பதை அறிந்துகொள்ளலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
நிலைமொழியின் இறுதியில் உள்ள னகர, லகர மெய்களுக்கு முன் வரும் தகர மெய் எவ்வாறு திரியும்?
2.
பொற்றாமரை, கற்றாழை – பிரித்து எழுதுக.
3.
பொன் + நாடு, பல் + நலம் – இவற்றைச் சேர்த்து எழுதுக.
4.
நிலைமொழியின் இறுதியில் உள்ள ணகர, ளகர மெய்களுக்கு முன் வரும் நகர மெய் எவ்வாறு திரியும்?
5.
முள் + தாமரை – சேர்த்து எழுதுக.
6.
கண்ணோய் – பிரித்து எழுதுக.