5.1 சில பெயர்களோடு வேற்றுமை 
        உருபுகள் புணரும் முறைமை 
       எல்லாம் என்னும் இருதிணைப் பொதுப்பெயர், எல்லாரும் 
        என்னும் உயர்திணைப் படர்க்கைப் பெயர், எல்லீரும் என்னும் இருதிணை முன்னிலைப் 
        பொதுப்பெயர், தான், தாம், நாம் முதலான மூவிடப்பெயர்கள் ஆகியவற்றோடு வேற்றுமை 
        உருபுகள் புணரும் முறையை நன்னூலார் விளக்கிக் கூறுகிறார். மேலும் ஆ, மா, 
        கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள், அவ், இவ், உவ், என்னும் வகர ஈற்றுச் 
        சுட்டுப்பெயர்கள், ஆய்தம் இடையே வந்த அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் 
        ஆகியவற்றோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறையையும் அவர் விளக்கிக் கூறுகிறார். 
        சாரியைகளில் அத்து என்னும் சாரியை மட்டும் புணர்ச்சியில் விகாரம் அடைவதை 
        அவர் குறிப்பிடுகிறார். இவற்றை ஈண்டு ஒன்றன்கீழ் ஒன்றாகக் காண்போம்.  
      5.1.1 எல்லாம் என்னும் பெயர் 
       எல்லாம் என்பது அஃறிணைப் பன்மைப் பெயராகவும், 
        உயர்திணையில் தன்மைப் பன்மைப் பெயராகவும் வரும். எனவே இது இருதிணைப் பொதுப்பெயர் 
        எனப்படும். இப்பொதுப்பெயர் வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது, அஃறிணைப் பொருளை 
        உணர்த்த ஒரு சாரியையும், உயர்திணைப் பொருளை உணர்த்த ஒரு சாரியையும் பெறும். 
        சாரியையே இன்ன திணைப் பொருள் என்பதை அறிய உதவுகிறது. இனி இப்பொதுப்பெயரோடு 
        வேற்றுமை உருபுகள் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறுவதைக் காண்போம்.  
      
        -  எல்லாம் 
          என்னும் இருதிணைப் பொதுப்பெயர் அஃறிணையில் வரும்போது, அதனோடு ஆறு வேற்றுமை 
          உருபுகளும் வந்து புணர்ந்தால், இடையே அற்று என்னும் சாரியையும், 
          வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும். 
 
       
       சான்று: 
       எல்லாம் + ஐ > எல்லா + அற்று 
        + ஐ + உம் = எல்லாவற்றையும். 
      
        -  எல்லாம் 
          என்பது உயர்திணையில் வரும்போது, இடையே நம் என்னும் சாரியையும், 
          வேற்றுமை உருபின்மேல் உம் என்ற முற்றும்மையும் பெறும். 
 
       
       சான்று: 
       எல்லாம் + ஐ > எல்லா + நம் + 
        ஐ + உம் = எல்லா நம்மையும்  
                            
                  (எல்லா நம்மையும் – நம் எல்லாரையும்) 
      எல்லாம் என்பது இழிதிணை 
        ஆயின் 
        அற்றோடு உருபின் மேல்உம் உறுமே;  
        அன்றேல் நம்இடை அடைந்து அற்றாகும் (நன்னூல், 245) 
       (இழிதிணை - அஃறிணை; அன்றேல் – அவ்வாறு இல்லாமல் உயர்திணையில் 
        வரும்போது; அற்றாகும் – அவ்வாறே வேற்றுமை உருபின் மேல் முற்றும்மையும் 
        பெறும்.) 
      5.1.2. எல்லாரும், எல்லீரும் என்னும் 
        பெயர்கள் 
       எல்லாரும் என்பது உயர்திணைப் படர்க்கைப் பன்மைப் 
        பெயர். எல்லீரும் என்பது இருதிணைக்கும் பொதுவான முன்னிலைப் பன்மைப் பெயர். 
        இவ்விரு பெயர்களோடு வேற்றுமை உருபுகள் புணரும் முறை குறித்து நன்னூலார் திறம்படக் 
        கூறுகிறார். அதனை ஈண்டுக் காண்போம்.  
       எல்லாரும், எல்லீரும் என்னும் இரு பெயர்களோடு 
        ஆறு வேற்றுமை உருபுகளும் வந்து புணரும்போது, அப்பெயர்களின் இறுதியில் உள்ள 
        முற்றும்மைகளை நீக்கிவிட்டு, அவை இருந்த இடங்களில் முறையே தம் என்னும் 
        சாரியையும், நும் என்னும் சாரியையும் வந்து பொருந்தும். 
        அச்சாரியைகளால் நீக்கப்பட்ட முற்றும்மைகள் வேற்றுமை உருபுகளின் பின்னே வந்து 
        பொருந்தும்.  
      எல்லாரும் எல்லீரும் என்பவற்று 
        உம்மை 
        தள்ளி நிரலே தம்நும் சாரப் 
        புல்லும் உருபின் பின்னர் உம்மே (நன்னூல், 246) 
       (தள்ளி – நீக்கிவிட்டு; நிரலே – முறையே; புல்லும் 
        - பொருந்தும்) 
       சான்று: 
       1. எல்லாரும் + ஐ > எல்லார் + ஐ > எல்லார் 
        + தம் + ஐ + உம்  
                            
                            
                    = எல்லார்தம்மையும் 
         
       2. எல்லீரும் + ஐ > எல்லீர் + ஐ > எல்லீர் 
        + நும் + ஐ + உம்  
                            
                            
                    = எல்லீர்நும்மையும் 
       (எல்லீர்நும்மையும் – உங்கள் எல்லாரையும்) 
       
       இக்காலத்தில் எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்னும் சொற்கள்
        எல்லாம், எல்லாரும், எல்லீரும் எனவும், 
        அவை வேற்றுமை உருபு ஏற்கும்போது சாரியை பெற்று எல்லாநம்மையும், எல்லார்தம்மையும், 
        எல்லீர்நும்மையும் எனவும் நன்னூலார் காலத்தில் வழங்கிய சொற்கள் இன்று எவ்வாறு 
        வழங்குகின்றன என்பதைப் பற்றிச் சிறிது காண்போம். 
       நன்னூலார் காலத்தில் எல்லாம் என்ற சொல் அஃறிணைப் 
        பன்மைக்கும், உயர்திணையில் தன்மைப் பன்மைக்கும் பொதுவாக வழங்கியது. இக்காலத்தில் 
        எல்லாம் என்ற அச்சொல் அஃறிணைப் பன்மை, உயர்திணைத் தன்மைப் பன்மை, முன்னிலைப் 
        பன்மை, படர்க்கைப் பன்மை ஆகிய எல்லாவற்றிற்கும் பொதுவாக வழங்குகிறது.  
       சான்று: 
      
         
          | மாடுகள் எல்லாம் வந்தன | 
            | 
          அஃறிணைப் பன்மை | 
         
         
          | அவை எல்லாம் வந்தன  | 
         
       
        
      
         
          நாங்கள் எல்லாம் வந்தோம் 
              | 
          - உயர்திணைத் தன்மைப் பன்மை   | 
         
         
          நீங்கள் எல்லாம் வந்தீர்கள்   | 
          - முன்னிலைப் பன்மை  | 
         
       
        
      
         
          அவர்கள் எல்லாம் வந்தார்கள் 
              | 
           | 
          படர்க்கை உயர்திணைப் பன்மை  | 
         
         
          மாணவர்கள் எல்லாம் வந்தார்கள்   | 
         
       
       எல்லாம் என்பது வேற்றுமை உருபு ஏற்று, அஃறிணையில் வரும் போது, நன்னூலார் 
        காலத்தைப் போலவே இக்காலத்திலும் அற்றுச் சாரியை பெற்று எல்லாவற்றையும் என்றே 
        வழங்குகிறது. ஆனால் எல்லாம் என்ற அச்சொல் உயர்திணையில் வரும்போது எல்லா நம்மையும் 
        என்று இக்காலத்தில் வழங்குவது இல்லை. நம்மை எல்லாம் என்று வழங்குகிறது. 
       சான்று:  
       நம்மை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார் 
       இதில் வரும் நம் என்பது நாம் என்ற தன்மைப்பெயரின் உருபு ஏற்கத் திரிந்த 
        வடிவம் ஆகும். எல்லா நம்மையும் என்பதில் வரும் நம் என்பது சாரியை ஆகும். 
       நன்னூலார் காலத்தில் எல்லாரும் என்பது படர்க்கைப் 
        பன்மையில் மட்டும் வந்தது. எல்லாரும் வந்தனர் என்றால், அதில் உள்ள எல்லாரும் 
        என்பது படர்க்கையாரை மட்டும் குறிக்கும். மற்றத் தன்மையாரையோ, முன்னிலையாரையோ 
        குறிக்காது. இக்காலத்தில் எல்லாரும் என்பது உயர்திணையில் தன்மை, முன்னிலை, 
        படர்க்கை என்னும் மூவிடங்களிலும் உள்ள எல்லாரையும் குறிக்கும் பொதுச் சொல்லாக 
        வழங்குகிறது. ஆயினும் இச்சொல் அம்மூவருள் யாரைக் குறிக்கிறது என்பதை அச்சொல்லின் 
        முன் வரும் மூவிடப் பன்மைப்பெயர்கள் உணர்த்துகின்றன.  
       சான்று:  
       நாங்கள் எல்லாரும் வந்தோம்  
        நாம் எல்லாரும் வந்தோம்  
        நீங்கள் எல்லாரும் வந்தீர்கள்  
        அவர்கள் எல்லாரும் வந்தார்கள் 
       எல்லாரும் என்ற சொல் பொதுச்சொல்லாகி விடவே, முன்னிலைப் 
        பன்மையாரை மட்டும் உணர்த்தி வந்த எல்லீரும் என்ற சிறப்புச்சொல் வழக்கு இழந்துவிட்டது. 
       எல்லாம், எல்லாரும் என்னும் இவை பொதுச்சொற்களாகி 
        விட்ட நிலையில், இவை வேற்றுமை உருபு ஏற்பதிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. எல்லாரும் 
        என்ற சொல் வேற்றுமை உருபு ஏற்று எல்லாரையும் என்று வழங்கியது. வேற்றுமை உருபை 
        அடுத்தே உம் சேர்க்கப்படுகிறது. முன்வரும் சொற்களால் இடவேறுபாடு அறியப்படும். 
        முன்வரும் சொற்களும் வேற்றுமை உருபு ஏற்கத் தம் நெடுமுதல் குறுகிய வடிவங்களாக 
        உள்ளன.  
       சான்று: 
       எங்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்  
        நம் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்  
        உங்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார்  
        அவர்கள் எல்லாரையும் ஆசிரியர் வரச்சொன்னார் 
       எல்லாம் என்ற சொல் இதுபோல உருபு ஏற்பது இல்லை. 
        முன்னர் வரும் சொற்களால் அஃறிணை, உயர்திணைத் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற 
        நான்கு வேறுபாடும் அறியப்படும். அச்சொற்களோடு வேற்றுமை உருபு சேர்ந்துவரும். 
       
       சான்று: 
       மாடுகளை எல்லாம் ஓட்டி வந்தனர்  
        எங்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்  
        நம்மை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்  
        உங்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்  
        அவர்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார்  
        மாணவர்களை எல்லாம் ஆசிரியர் வரச்சொன்னார் 
      5.1.3 தான், தாம், நாம் முதலான மூவிடப் 
        பெயர்கள் 
       யான், யாம், நாம் என்பன தன்மை இடப்பெயர்கள். 
        நீ, நீர் என்பன முன்னிலை இடப்பெயர்கள். தான், தாம் என்பன படர்க்கை இடப்பெயர்கள். 
        இவை வேற்றுமை உருபுகளோடு புணரும் முறை பற்றி நன்னூலார் நான்கு விதிகளைக் 
        கூறுகிறார். 
      
        -  வேற்றுமை 
          உருபுகளோடு புணரும்போது தான், தாம், நாம் என்னும் மூன்று பெயர்களும் தமது 
          நெடுமுதல் குறுகி முறையே தன், தம், நம் என வரும். 
 
       
       சான்று: 
       தான் + ஐ = தன்னை ; தான் + ஆல் = தன்னால் 
         
        தாம் + ஐ = தம்மை ; தாம் + ஆல் = தம்மால்  
        நாம் + ஐ = நம்மை ; நாம் + ஆல் = நம்மால்  
      
        -  யான், 
          யாம், நீ, நீர் என்னும் நான்கு பெயர்களும் முறையே என், எம், நின், நும் 
          எனக் குறுகி வரும்.
 
       
       சான்று: 
       யான் + ஐ = என்னை; யான் + ஆல் = என்னால் 
         
        யாம் + ஐ = எம்மை; யாம் + ஆல் = எம்மால்  
        நீ + ஐ = நின்னை; நீ + ஆல் = நின்னால்  
        நீர் + ஐ = நும்மை; நீர் + ஆல் = நும்மால் 
      
        -  இவ்வேழு 
          பெயர்களோடு நான்காம் வேற்றுமை உருபாகிய கு வந்து புணரும்போது இடையே அகரச்சாரியை 
          வரும்.
 
       
       சான்று: 
       தான் + கு > தன் + கு > தன் + அ 
        + கு = தனக்கு  
        தாம் + கு = தமக்கு  
        நாம் + கு = நமக்கு  
        யான் + கு = எனக்கு  
        யாம் + கு = எமக்கு  
        நீ + கு = நினக்கு  
        நீர் + கு = நுமக்கு 
      
        -  நான்காம் 
          வேற்றுமை உருபாகிய கு வந்து புணரும்போது இடையே வரும் அகரச்சாரியையின் உயிர் 
          வந்தாலும், ஆறாம் வேற்றுமைக்கு உரிய அது, ஆது, அ என்னும் உருபுகளின் முதலில் 
          உயிர் வந்தவிடத்தும், அவ்வேழு பெயர்களின் குறுக்கங்களாகிய தன், தம், நம், 
          என், எம், நின், எம் என்பனவற்றின் இறுதியில் உள்ள ஒற்றுகள் இரட்டித்து 
          வாரா.
 
       
       இவை ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்’ 
        என்ற விதிப்படி என்னக்கு, என்னது, என்னாது, என்னா என ஒற்று இரட்டித்து வாரா. 
        ஒற்று இரட்டாமலே வரும்.  
       சான்று: 
       என் + கு > என் + அ + கு = எனக்கு – நான்காம் 
        வேற்றுமை  
      
         
          என் + அது = எனது  
              என் + ஆது = எனாது  
              என் + அ = என   | 
           | 
          ஆறாம் வேற்றுமை  | 
         
       
       (எனது கை, எனாது கை, என கைகள்) 
       தான்தாம் நாம்முதல் 
        குறுகும்; யான்யாம்  
        நீர் என்எம் நின்நும் ஆம், பிற 
         
        குவ்வின் அவ்வரும் நான்கு ஆறு இரட்டல (நன்னூல், 247) 
       நூற்பாவில் பிற என்றதனால் நீ என்பது உன் எனவும், 
        நீர் என்பது உம் எனவும் திரிந்து வரும். மேலும் இந்நூற்பாவில் கூறப்படாத 
        நான் என் எனவும், நீயிர், நீவிர் என்பன நும், உம் எனவும் திரிந்துவரும். 
      5.1.4 ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் 
        பெயர்கள் 
       ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள் வேற்றுமை 
        உருபுகளோடு புணரும் போது னகரச் சாரியை பொருந்தவும் பெறும். 
      ஆ மா கோ னவ் அணையவும் 
        பெறுமே (நன்னூல், 248) 
       (ஆ – பசு, மா – விலங்கு; கோ – அரசன், தலைவன்; அணையவும் 
        – பொருந்தவும்) 
       இந்நூற்பாவில் அணையவும் (பொருந்தவும்) 
        என்பதில் உள்ள உம்மையால், சாரியை அணையாமலிருக்கவும் பெறும் என்பது பெறப்படும். 
        எனவே இம்மூன்று பெயர்களும் வேற்றுமை உருபுகளோடு புணரும்போது னகரச் சாரியை 
        பெற்றும், பெறாதும் விகற்பமாக வரும் என்பது புலனாகும்.  
       சான்று: 
       ஆ + ஐ > ஆ + ன் + ஐ = ஆனை  
        மா + ஐ > மா + ன் + ஐ = மானை  
        கோ + ஐ > கோ + ன் + ஐ = கோனை  
       என னகரச் சாரியை பெற்றும்,  
       ஆ + ஐ > ஆ + வ் + ஐ = ஆவை 
         
        மா + ஐ > மா + வ் + ஐ = மாவை  
        கோ + ஐ > கோ + வ் + ஐ = கோவை 
       என னகரச் சாரியை பெறாமல், வகர உடம்படுமெய் பெற்றும் விகற்பமாக வந்தன. 
      5.1.5 அவ், இவ், உவ் என்னும் சுட்டுப்பெயர்கள் 
       அவ், இவ், உவ் என்னும் வகரமெய் ஈற்று மூன்று 
        சுட்டுப்பெயர்களும், வேற்றுமை உருபுகளோடு புணரும்போது, அற்று என்னும் சாரியை 
        பெறுதல் முறைமை ஆகும். (அவ் - அவை; இவ் - இவை; உவ் - உவை) 
       வவ்விறு சுட்டிற்கு அற்று 
        உறல் வழியே (நன்னூல், 250)   
       (வழி – முறைமை) 
       சான்று: 
       அவ் + ஐ > அவ் + அற்று + 
        ஐ = அவற்றை  
        இவ் + ஐ > இவ் + அற்று + ஐ = இவற்றை 
         
        உவ் + ஐ + உவ் + அற்று + ஐ = உவற்றை  
       (உவற்றை என்பது இப்போது வழக்கில் இல்லை) 
      5.1.6 அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப்பெயர்கள் 
       அது, இது, உது என்பன சுட்டுப்பெயர்கள். இவை, 
        உயிரை முதலாகக் கொண்ட சொற்கள் தம்முன் வரும்போது இடையே ஆய்தம் பெற்று அஃது, 
        இஃது, உஃது என வழங்கும்.  
       சான்று: 
       அஃது அறியாதோர்க்கே (நற்றிணை, 
        174:8) 
       இஃது எவன்கொல்லோ தோழி 
        (நற்றிணை, 273:1) 
       அஃது, இஃது, உஃது என்னும் மூன்று சுட்டுப் பெயர்களும் 
        வேற்றுமை உருபுகளோடு புணரும்போது, இடையே அன் சாரியை வந்தால், அ, இ, உ என்னும் 
        சுட்டு எழுத்துகளை அடுத்துள்ள ஆய்தம் கெடும். 
      சுட்டின் முன் ஆய்தம் 
        அன்வரின் கெடுமே (நன்னூல், 251) 
       சான்று: 
       அஃது + ஐ > அஃது + அன் + 
        ஐ > அது + அன் + ஐ = அதனை. அன் சாரியை வரும்போது ஆய்தம் 
        கெட்டவிடத்து, அது, இது, உது என ஆய்தம் இல்லாச் சுட்டுப் பெயர்களாகிப் பின்பு 
        அன் சாரியை பெறுதலால், ஆய்தம் இல்லாச் சுட்டுப்பெயர்கள் அன் சாரியை பெறுவதற்கும் 
        இதுவே விதியாகும்.  
      5.1.7 அத்துச் சாரியையின் முதல் கெடுதல் 
       இயல்பாகவோ, இலக்கண விதியின் காரணமாகவோ நிலைமொழியின் 
        ஈற்றில் நின்ற அகர உயிரின் முன் வந்து புணரும் அத்துச் சாரியையின் முதலில் 
        உள்ள அகர உயிர் கெடும். 
      அத்தின் அகரம் அகர முனை 
        இல்லை (நன்னூல், 252) 
       (முனை – முன்; அகர முனை – நிலைமொழியின் இறுதியில் உள்ள அகர உயிரின்முன் 
        வந்தால்) 
       சான்று: 
       மக + அத்து + கை > மக + 
        த்து + கை = மகத்துக்கை  
                            
                            
                  (இயல்பு உயிர் ஈறு) 
       (மக – மகன் அல்லது மகள், பிள்ளை) 
       மரம் + அத்து + ஐ > மர 
        + அத்து + ஐ > மர + த்து + ஐ = மரத்தை 
        (விதி உயிர் ஈறு) 
       
      
         
          |   தன் 
              மதிப்பீடு : வினாக்கள் - I  | 
         
         
          |   1.  | 
          எல்லாம் என்னும் 
            பொதுப்பெயர் வேற்றுமை உருபு ஏற்கும்போது பெறும் இருவேறு சாரியைகள் யாவை? 
           | 
            | 
         
         
          |   2.  | 
          எல்லா நம்மையும் 
            – இதில் வரும் சாரியை யாது?  | 
            | 
         
         
          |   3.  | 
          நன்னூலார் காலத்தில் 
            இருதிணைக்கும் பொதுவான முன்னிலைப் பன்மைப்பெயர் யாது? | 
            | 
         
         
          |   4.  | 
           எல்லாரும் என்னும் 
            பெயர் வேற்றுமை உருபோடு புணரும்போது பெறும் சாரியை யாது?  | 
            | 
         
         
          |   5.  | 
          எல்லாநம்மையும் என்ற சொல் இக்காலத் 
            தமிழில் எவ்வாறு வழங்குகிறது? | 
            | 
         
         
          |   6.  | 
          தான், தாம், நாம் என்னும் பெயர்கள் 
            வேற்றுமை உருபு ஏற்கும்போது எவ்வாறு மாறும்? | 
            | 
         
         
          |   7.  | 
           நாம் + கு – புணர்த்து எழுதுக. 
           | 
            | 
         
         
          |   8.  | 
          அவற்றை – இதில் வந்துள்ள சாரியை 
            யாது?  | 
            | 
         
         
          |   9.  | 
          அஃது + ஐ – புணர்த்து எழுதுக. 
           | 
            | 
         
         
          |   10.  | 
          மகத்துக்கை – பிரித்து எழுதி, 
            அதில் உள்ள சாரியை யாது எனக் குறிப்பிடுக. | 
            | 
         
       
       |