6.0 பாடமுன்னுரை

நிலைமொழியில் உள்ள ஒரு சொல், வருமொழியில் உள்ள மற்றொரு சொல்லோடு வேற்றுமைப் பொருளிலும், அல்வழிப் பொருளிலும் புணரும் புணர்ச்சி பற்றி நன்னூலார் உயிர் ஈற்றுப் புணரியல், மெய் ஈற்றுப் புணரியல், உருபு புணரியல் என்னும் மூன்று இயல்களில் கூறியனவற்றை இதற்கு முந்தைய பதினொரு பாடங்களில் விரிவாகவும் விளக்கமாகவும் பார்த்தோம். நன்னூலார் புணர்ச்சி பற்றிக் கூறியுள்ள விதிகள் இக்காலத்தில் நாம் தமிழைப் பிழையின்றி எழுதவும், திருத்தமுறப் பேசவும் உதவுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை வல்லினம் மிகும் இடங்கள், வல்லினம் மிகா இடங்கள் ஆகிய இரண்டும் ஆகும்.

நன்னூலார், நிலைமொழியின் இறுதியில் உள்ள உயிர்களின் முன்னர், வருமொழி முதலில் வருகின்ற க, ச, த, ப என்னும் வல்லினமெய்கள் பெரும்பாலும் மிகும் என்கிறார். இதனைப் பின்வரும் உயிர் ஈற்றுப் புணரியல் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன்
க ச த ப மிகும் விதவாதன மன்னே    (நன்னூல், 165)

(விதவாதன – சிறப்பு விதிகளில் சொல்லாதவை; மன் – பெரும்பாலும்)

நன்னூலார் இந்நூற்பாவில், நிலைமொழியின் இறுதியில் நிற்கும் உயிர்களின் முன்னர், வருமொழி முதலில் வரும் வல்லினம் பெரும்பாலும் மிகும் என்று பொதுவாகக் கூறியுள்ளாரே தவிர, எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைத் தனித்தனியே எடுத்துக் கூறவில்லை. ஆனால் உயிர் ஈற்றுப் புணரியலில் ஒவ்வோர் உயிர் ஈற்றுச் சிறப்பு விதியிலும் எந்தெந்த இடங்களில் உயிர்முன் வரும் வல்லினம் மிகாது என்பதைத் தனித்தனியே எடுத்துக் கூறுகிறார். சான்றாக, அகர ஈற்றுச் சிறப்பு விதியில்,

  1. செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சங்களின் முன்னரும்,
  2. பல்வகைப் பெயரெச்சங்களுக்கு முன்னரும்
  3. பல்வகை வினைமுற்றுகளுக்கு முன்னரும்
  4. ஆறாம் வேற்றுமை அ உருபிற்கு முன்னரும்
  5. பல சில என்னும் அஃறிணைப் பன்மைப் பெயர்களுக்கு முன்னரும்
  6. அம்ம என்னும் இடைச்சொல்லுக்கு முன்னரும்

வரும் வல்லினம் மிகாது இயல்பாகும் என்கிறார். இதனை,

செய்யிய என்னும் வினையெச்சம், பல்வகைப்
பெயரின் எச்சம், முற்று, ஆறன் உருபே,
அஃறிணைப் பன்மை, அம்ம முன் இயல்பே (நன்னூல், 167)

என்ற நூற்பாவில் உணர்த்துகிறார். இதுபோல் ஒவ்வோர் உயிர் ஈற்றின் முன்னரும் வரும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகாது என்பதை எடுத்துக் கூறுகிறார். சிறப்பு விதிகளில் வல்லினம் மிகாது என்று கூறப்படும் இடங்களைத் தவிர, பிற எல்லா இடங்களிலும் உயிர் முன் வரும் வல்லினம் மிகும் என்பது நன்னூலார் கருத்து, இதையே ‘இயல்பினும் விதியினும்’ என்ற நூற்பாவில் விதவாதன மிகும் (சிறப்பு விதிகளில் சொல்லாதவை மிகும்) என்று குறிப்பிட்டார்.

மெய் ஈற்றுப் புணரியலில் மெய் எழுத்துகளில் ய, ர, ழ என்னும் மெய்களின் முன்னர் வரும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், மிகாது இயல்பாகும் என்பதையும்,

யரழ முன்னர்க் கசதப அல்வழி
இயல்பும் மிகலும் ஆகும்; வேற்றுமை
மிகலும் இனத்தோடு உறழ்தலும் விதிமேல் (நன்னூல், 224)

என்ற நூற்பாவில் நன்னூலார் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவர் இதுபோல உயிர்களின் முன்னர் வரும் வல்லினம் அல்வழியிலும் வேற்றுமையிலும் எந்தெந்த இடங்களில் மிகும், மிகாது என ஒரு சேரக் கூறவில்லை. உயிர்களின் முன்னர் வரும் வல்லினம் மிகாத இடங்களை மட்டும் கூறி, வல்லினம் மிகாத அவ்விடங்களைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் வல்லினம் மிகும் என்று பொதுப்படக் கூறுவதோடு அமைந்தார்.

எனவே உயிர் ஈற்றின் முன்னரும், ய,ர,ழ என்னும் மெய் ஈறுகளின் முன்னரும் வருகின்ற வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதையும், மிகாது இயல்பாகும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் தேவையானதும் இன்றியமையாததும் ஆகும். இப்பாடத்தில் வல்லினம் மிகும் இடங்களும், வல்லினம் மிகா இடங்களும் இக்காலத் தமிழ்வழிநின்று தக்க சான்றுகளுடன் விளக்கிக் காட்டப்படுகின்றன.