6.2 வல்லினம் மிகா இடங்கள்

இதுகாறும் வல்லினம் எந்தெந்த இடங்களில் மிகும் என்பதைப் பார்த்தோம். இனி, நிலைமொழி இறுதியில் உள்ள உயிர்களின் முன்னரும் ய, ர, ழ என்னும் மெய்களின் முன்னரும் வருமொழி முதலில் வருகின்ற க, ச, த, ப என்னும் வல்லின மெய்கள் எந்தெந்த இடங்களில் மிகாது இயல்பாகும் என்பதைச் சான்றுடன் காண்போம்.

6.2.1 சுட்டு, வினா அடியாகத் தோன்றிய சொற்கள் முன் வல்லினம் மிகாமை

அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று, அத்தனை, இத்தனை, எத்தனை; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு ; அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு என்னும் சொற்களின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

அது + சிறிது = அது சிறிது
எது + பெரியது = எது பெரியது?
அவை + போயின = அவை போயின
எவை + பெரியவை = எவை பெரியவை?
அன்று + பார்த்தான் = அன்று பார்த்தான்
என்று + காண்பேன் = என்று காண்பேன்?
அத்தனை + செடிகள் = அத்தனை செடிகள்
எத்தனை + பழங்கள் = எத்தனை பழங்கள்?
அவ்வளவு + பேர் = அவ்வளவு பேர்
எவ்வளவு + தருவாய் = எவ்வளவு தருவாய்?
அவ்வாறு + பேசினான் = அவ்வாறு பேசினான்
எவ்வாறு + படித்தாள் = எவ்வாறு படித்தாள்?

வந்த, கண்ட, சொன்ன, வரும் என்பன போன்ற பெயரெச்சங்களோடு படி, ஆறு என்னும் சொற்கள் சேர்ந்து வரும் வினையெச்சச் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

கண்டபடி + பேசினான் = கண்டபடி பேசினான்
சொன்னபடி + செய்தான் = சொன்னபடி செய்தான்
கண்டவாறு + சொன்னான் = கண்டவாறு சொன்னான்
சொன்னவாறு + செய்தான் = சொன்னவாறு செய்தான்
வரும்படி + கூறினான் = வரும்படி கூறினான்
வருமாறு + கூறினான் = வருமாறு கூறினான்

6.2.2 எண்ணுப்பெயர்கள், எண்ணுப்பெயரடைகள் முன் வல்லினம் மிகாமை

ஒன்று முதல் பத்து வரையிலான எண்ணுப்பெயர்களில் எட்டு, பத்து ஆகியன வன்தொடர்க் குற்றியலுகரங்கள். இவற்றின் முன்வரும் வல்லினம் மிகுவதை ஏற்கனவே பார்த்தோம். ஏனைய ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து என்னும் மென்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஆறு, நூறு என்னும் நெடில் தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயர்களின் முன்னும், ஏழு என்னும் முற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும், ஒன்பது என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகர எண்ணுப்பெயரின் முன்னும் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஒன்று + போதும் = ஒன்று போதும்
இரண்டு + தடவை = இரண்டு தடவை
மூன்று + குழந்தைகள் = மூன்று குழந்தைகள்
நான்கு + கால்கள் = நான்கு கால்கள்
ஐந்து + சிறுவர்கள் = ஐந்து சிறுவர்கள்
ஆறு + கடைகள் = ஆறு கடைகள்
ஏழு + சிறுகதைகள் = ஏழு சிறுகதைகள்
ஒன்பது + கிரகங்கள் = ஒன்பது கிரகங்கள்
நூறு + பழங்கள் = நூறு பழங்கள்

ஒரு, இரு, அறு, எழு என்னும் எண்ணுப்பெயரடைகளின் முன்வரும் வல்லினம் மிகாது.

சான்று:

ஒரு + பொருள் = ஒருபொருள்
இரு + தடவை = இருதடவை
அறு + படைவீடு = அறுபடைவீடு
எழு + கடல் = எழுகடல்

6.2.3 வேற்றுமைப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை

i) இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

சாமி + கும்பிடு = சாமி கும்பிடு (சாமியைக் கும்பிடு)
நகை + செய்தான் = நகை செய்தான் (நகையைச் செய்தான்)
கனி + தின்றான் = கனி தின்றான் (கனியைத் தின்றான் )
காய் + கொடுத்தான் = காய்கொடுத்தான் (காயைக் கொடுத்தான்)
தமிழ் + படித்தான் = தமிழ் படித்தான் (தமிழைப் படித்தான்)
நீர் + பருகினான் = நீர் பருகினான் (நீரைப் பருகினான்)

ii) நான்காம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

பொன்னி + கணவன் = பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்)

iii) ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாக இருப்பின் அதன்முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

காளி + கோயில் = காளிகோயில்
கண்ணகி + சிலம்பு = கண்ணகி சிலம்பு
தம்பி + துணி = தம்பி துணி
மகளிர் + கல்லூரி = மகளிர் கல்லூரி
ஆசிரியர் + கழகம் = ஆசிரியர் கழகம்
தாய் + சொத்து = தாய் சொத்து
மனைவி + கண்ணீர் = மனைவி கண்ணீர்
நடிகை + கோபம் = நடிகை கோபம்
வள்ளி + திருமணம் = வள்ளி திருமணம்

iv) மூன்றாம் வேற்றுமைக்கு ஆன், ஆல், ஒடு, ஓடு, உடன் என்னும் உருபுகள் உள்ளன. இவற்றுள் ஒடு, ஓடு என்பன உயிர் ஈறு கொண்டவை. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

என்னொடு + படித்தவன் = என்னொடு படித்தவன்
யாரோடு + பேசினாய் = யாரோடு பேசினாய்?

இக்காலத் தமிழில் ‘கொண்டு’ என்னும் சொல்லுருபும் மூன்றாம் வேற்றுமைக்கு உரிய கருவிப் பொருளில் வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது.

சான்று:

கத்தி கொண்டு + குத்தினான் = கத்திகொண்டு குத்தினான்
                                            (கத்தியால் குத்தினான்)
வாள்கொண்டு + போர் செய்தான் = வாள்கொண்டு போர் செய்தான்

v) ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் இல், இன் என்பன ஆகும்; பொருள் : நீக்கப் பொருள் (விலகிச் செல்லல்). ஐந்தாம் வேற்றுமை விரியில் இல், இன் என்னும் உருபுகள் மட்டும் நின்று நீக்கப் பொருளைக் காட்டுவது இல்லை. இல் என்பதோடு இருந்து என்னும் சொல்லுருபும், இன் என்பதோடு நின்று என்னும் சொல்லுருபும் சேர்ந்தே நீக்கப் பொருளை உணர்த்துகின்றன. இவ்விரு உருபுகளின் முன்வரும் வல்லினமும் மிகாது.

சான்று:

வீட்டிலிருந்து + சென்றான் = வீட்டிலிருந்து சென்றான்
கூட்டினின்று + பறந்தது = கூட்டினின்று பறந்தது

vi) ஆறாம் வேற்றுமைக்கு உரிய உருபுகளாக நன்னூலார் அது, ஆது, அ என்னும் மூன்றனைக் குறிப்பிடுகிறார். இவற்றுள் ஆது, அ என்பன இக்காலத் தமிழில் இல்லை. அது என்பது மட்டுமே உண்டு. அது என்னும் உருபின் முன் வரும் வல்லினம் மிகாது.

சான்று:

யானையது + கொம்பு = யானையது கொம்பு
எனது + புத்தகம் = எனது புத்தகம்

இக்காலத் தமிழில் ‘உடைய’ என்னும் சொல்லுருபும், ஆறாம் வேற்றுமைக்கு உரிய கிழமைப் பொருளில் (உடைமைப் பொருளில்) வழங்குகிறது. இதன் முன் வரும் வல்லினமும் மிகாது.

சான்று:

என்னுடைய + புத்தகம் = என்னுடைய புத்தகம்
பண்புடைய + கணவர் = பண்புடைய கணவர்
ஆசிரியருடைய + பெருமை = ஆசிரியருடைய பெருமை

6.2.4 அல்வழிப் புணர்ச்சியில் வரும் வல்லினம் மிகாமை

அல்வழிப் புணர்ச்சியில் வரும் தொகைநிலைத் தொடர், தொகா நிலைத்தொடர் என்னும் இருவகைத் தொடர்களில் வல்லினம் மிகும் இடங்கள் எவை என்பதைப் பார்ப்போம்.

 • தொகைநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை
 • i) அல்வழியில் உள்ள தொகைநிலைத் தொடர்களில் ஒன்றான வினைத்தொகை மிகவும் அற்புதமான தொகை. ஊறுகாய் என்று சொன்னதும், நம் நாவில் அந்தக் காயின் சுவை ஊறி நிற்கும். நேற்று ஊறிய காய், இன்று ஊறுகின்ற காய், நாளையும் ஊறும் காய் – ஊறுகாய். மூன்று காலங்களையும் காட்டும் இடைநிலைகள் என்னும் உருபுகள் மறைந்திருப்பதால், வினைத்தொகை எனப்பட்டது. வினைத்தொகையில் வரும் வல்லினம் கட்டாயம் மிகாது. வன்தொடர்க் குற்றியலுகரத்தின் முன் வரும் வல்லினம் மிகும் எனப் பார்த்தோம். ஆனால் வினைத்தொகையில் மட்டும் நிலைமொழி வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தாலும் வல்லினம் மிகாது.

  சான்று:

  நாட்டு + புகழ் = நாட்டுபுகழ்
  ஈட்டு + பொருள் = ஈட்டுபொருள்

  இவ் வன்தொடர்க் குற்றியலுகரங்களின் முன்வரும் வல்லினம் வினைத்தொகையில் மிகவில்லை.

  சுடு + காடு = சுடுகாடு
  நடு + கல் = நடுகல்
  குடி + தண்ணீர் = குடிதண்ணீர்
  மூடு + பனி = மூடுபனி
  சுடு + சோறு = சுடுசோறு
  விடு + கதை = விடுகதை
  திருவளர் + செல்வன் = திருவளர் செல்வன்
  திருவளர் + செல்வி = திருவளர் செல்வி

  ii) இரண்டு சொற்களோ, இரண்டுக்கு மேற்பட்ட சொற்களோ வரும்போது, அச்சொற்களின் இறுதியில் உம்மை மறைந்திருப்பது உம்மைத் தொகை எனப்படும். உம்மைத்தொகையில் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  இட்லி + தோசை = இட்லி தோசை (இட்லியும் தோசையும்)
  யானை + குதிரை = யானை குதிரை (யானையும் குதிரையும்)
  மா + பலா + வாழை = மா பலா வாழை (மாவும், பலாவும், வாழையும்)
  இரவு + பகல் = இரவு பகல் (இரவும் பகலும்)
  நரை + திரை = நரைதிரை (நரையும் திரையும்)
  கல்வி + கேள்வி = கல்வி கேள்வி (கல்வியும் கேள்வியும்)
  நன்மை + தீமை = நன்மை தீமை (நன்மையும் தீமையும்)

 • தொகாநிலைத் தொடர்களில் வரும் வல்லினம் மிகாமை
 • i) எழுவாய்த் தொடரில் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  கண்ணகி + பேசினாள் = கண்ணகி பேசினாள்
  மாதவி + பாடினாள் = மாதவி பாடினாள்
  கோழி + கூவியது = கோழி கூவியது
  யானை + பிளிறியது = யானை பிளிறியது

  ii) விளித்தொடரில் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  மகனே + கேள் = மகனே கேள்
  தம்பீ + போ = தம்பீ போ
  அரசே + பார் = அரசே பார்

  iii) ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று ஆகியவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

 • ஏவல் வினைமுற்று
 • வா + கண்ணா = வா கண்ணா
  போ + தம்பி = போ தம்பி
  படி + பாடத்தை = படி பாடத்தை
  புறப்படு + பள்ளிக்கு = புறப்படு பள்ளிக்கு

 • வியங்கோள் வினைமுற்று
 • வாழ்க + தலைவா = வாழ்க தலைவா
  ஒழிக + தீமைகள் = ஒழிக தீமைகள்
  வருக + புலவரே = வருக புலவரே

  iv) அகர ஈற்றுப் பெயரெச்சங்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

  பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் எனப் பலவகைப்படும். இவற்றுள் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத் தவிர, மற்றப் பெயரெச்சங்கள் அனைத்தின் முன்னும் வரும் வல்லினம் மிகாது. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் என்பதை ஏற்கெனவே பார்த்தோம்.

 • தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமை
 • தெரிநிலைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  வந்த + பையன் = வந்த பையன்
  ஓடிய + குதிரை = ஓடிய குதிரை
  கேட்ட + கேள்வி = கேட்ட கேள்வி
  பாடிய + பாட்டு = பாடிய பாட்டு
  கொடுத்த + கை = கொடுத்த கை
  கூடிய + கூட்டம் = கூடிய கூட்டம்

 • குறிப்புப் பெயரெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகாமை
 • குறிப்புப் பெயரெச்சத்தை இக்கால மொழியியலார் பெயரடை (Adjective) என்று குறிப்பிடுவர். இதன் முன் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  நல்ல + பையன் = நல்ல பையன்
  பெரிய + தெரு = பெரிய தெரு
  புதிய + சிந்தனை = புதிய சிந்தனை
  சிறிய + பேனா = சிறிய பேனா
  கரிய + குதிரை = கரிய குதிரை
  அரிய + பொருள் = அரிய பொருள்

 • எதிர்மறைப் பெயரெச்சத்தின் முன் வரும் வல்லினம் மிகாமை
 • செல்லாத, காணாத, ஓடாத என்பன போன்ற பெயரெச்சங்கள் எதிர்மறைப் பொருளை உணர்த்துவதால் எதிர்மறைப் பெயரெச்சங்கள் எனப்படும். இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  செல்லாத + காசு = செல்லாத காசு
  காணாத + கண்கள் = காணாத கண்கள்
  ஓடாத + குதிரை = ஓடாத குதிரை

  v) ண்டு, ந்து, ன்று என முடியும் மென்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும், ய்து என முடியும் இடைத்தொடர்க் குற்றியலுகர வினையெச்சங்களுக்கு முன்னும் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  கண்டு + பேசினார் = கண்டு பேசினார்
  கொண்டு + போனான் = கொண்டு போனான்
  வந்து + சென்றான் = வந்து சென்றான்
  தின்று + பார்த்தான் = தின்று பார்த்தான்
  கொன்று + குவித்தான் = கொன்று குவித்தான்
  செய்து + தந்தான் = செய்து தந்தான்
  கொய்து + கொடுத்தாள் = கொய்து கொடுத்தாள்

  வினையெச்சத்திலே குறிப்பு வினையெச்சம் என்ற ஒன்று உண்டு என்பதை ஏற்கெனவே பார்த்தோம். அகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சத்தின் முன்வரும் வல்லினம் மிகும் என்பதையும் ஏற்கெனவே பார்த்தோம். குறிப்பு வினையெச்சத்தில் உகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சங்களும் உண்டு. இவற்றின் முன் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  நன்கு + பேசினான் = நன்கு பேசினான்
  நன்று + பேசினாய் = நன்று பேசினாய்

  6.2.5 வல்லினம் மிகா இடங்கள் - மேலும் சில

  i. ஆ, ஓ என்னும் வினா எழுத்துகளை இறுதியிலே கொண்டு முடியும் சொற்களுக்கு முன்னர் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  அவனா + தந்தான் = அவனா தந்தான் ?
  அவளோ + கொடுத்தாள் = அவளோ கொடுத்தாள் ?

  ii. பல, சில என்னும் சொற்களின் முன்வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  பல + பொருள் = பலபொருள்
  சில + பூக்கள் = சிலபூக்கள்

  iii. இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடர்களில் வரும் வல்லினம் மிகாது.

  சான்று:

  ஆதி + பகவன் = ஆதிபகவன்
  தேச + பக்தி = தேச பக்தி

  iv. வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் முன் கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதியும், தல் என்னும் தொழிற்பெயர் விகுதியும் வந்தால் வல்லினம் மிகுவதில்லை.

  சான்று:

  எழுத்து + கள் = எழுத்துகள்
  வழக்கு + கள் = வழக்குகள்
  வாக்கு + கள் = வாக்குகள்
  வகுப்பு + கள் = வகுப்புகள்

  ஆக்கு + தல் = ஆக்குதல்
  வாழ்த்து + தல் = வாழ்த்துதல்
  கூப்பு + தல் = கூப்புதல்
  தூற்று + தல் = தூற்றுதல்