2.3 இலக்கணமும் பண்பாடும்

Audio

தமிழ் இலக்கணத்தில் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பொருளை அறிவதற்கு அமைந்துள்ள சொல்லால் சொல்லுவது தகுதி அல்ல என்று கருதி வேறொரு சொல்லால் சொல்வது தான் தகுதி என்று எண்ணிக் கூறுவது தகுதி வழக்கு. தகுதி வழக்கில், இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்று மூன்று கூறுகள் உண்டு.

2.3.1 பகுத்தறிவுக்கு இசைந்த திணை பால், பிரிவுகள்

பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் நடைமுறை வழக்கில் இருந்து வருகிறது. அதன் தனிச் சிறப்புகளாகக் கீழ்க்கண்டவற்றை அறிஞர் காட்டுகின்றனர். பகுத்தறிவுக்கு இசைந்த திணை, பால் முதலிய பிரிவுகள் தமிழ் இலக்கண மரபின் சிறப்பு எனலாம்.

எடுத்துக்காட்டாக,

பெண் வந்தாள்

ஆண் வந்தான்

ஆணும் பெண்ணும் வந்தனர்

பசு வந்தது

பசுக்கள் வந்தன

என்று தமிழில் திணை, பால் முதலிய பிரிவுகள் பகுத்தறிவுக்கு உட்பட்டு வழங்கப்படுகின்றன. ஆனால் சில மொழிகளில் இதுபோன்ற அமைப்பு இல்லை. குறிப்பாகச் செர்மானிய மொழியில் கைகள் பெண்பாலாகவும், கால்கள் ஆண்பாலாகவும், கால்விரல்கள் பெண்பாலாகவும் கொள்ளப் பெறுகின்றன.

மனித உயிராகப் பிறந்து விட்டாலேயே அதனை உயர்திணையாக இலக்கணம் கருதவில்லை. குழந்தை பேசிற்று, குழந்தை தூங்கிற்று என்றே கூறுவர். நன்மை, தீமைகளைப் பகுத்துணரும் அறிவுநிலை அடைந்த பிறகே உயர்திணை என்ற நிலையை ஒரு பிறப்பு அடையும். அதேபோலப் பண்பால் உயர்ந்த ஒருவன் இறந்து கிடக்கும் போது அவனைப் பிணம் கிடக்கின்றது என்று கூறாமல் உயிர் இழந்து ஒரு மகன் கிடந்தான் என்று உயர்திணையாகவே மொழிவர். பண்புகளுக்குத் தகுந்தாற்போல உயர்வு தாழ்வு கற்பித்து வழங்கும் நெறியைத் தமிழ் இலக்கணம் பெற்றுள்ளது.  'கள்' என்ற விகுதி அஃறிணைக்கு உரியது என்றாலும் மரியாதையாக ஒருவரைக் குறிக்க 'ஐயா அவர்கள் வந்தார்கள்' என்று குறிக்கும் பண்பாடு உள்ளது. அக்கா வந்தாள் என்று சொல்ல வேண்டுவதே இலக்கணமாக இருக்க, அன்பு காரணமாக 'அக்கா வந்தது' என்று கூறும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இங்கு அஃறிணைப்படக் கூறினாலும் இஃது உயர்ந்த தன்மையையே குறிக்கும்.

2.3.2 இடக்கரடக்கல்

சில தகாத சொற்களைச் சில இடங்களில், குறிப்பாக சிறப்புடையோர் மத்தியில் சொல்லக்கூடாது. எனவே அவற்றிற்குப் பதிலாகப் பிற சொல்லைச் சொல்வது இடக்கரடக்கல் எனப்படும். ஓர் இடத்தில், சொல்லத்தகாத சொல்லை அடக்கி, இன்னொரு சொல்லைச் சொல்வதால் அதை 'இடக்கரடக்கல்' என்று குறிப்பிட்டனர்.

(எடுத்துக்காட்டு) ஒன்றுக்குப் போனான்

சிறுநீர் கழிப்பதற்குச் சென்ற ஒருவனை 'ஒன்றுக்குப் போனான்' என்று சொல்வது இடக்கரடக்கல் எனப்படும். நாகரிகம் கருதி, சொல்லத்தகாத சொற்களைச் சொல்லாமல், இன்னொரு சொல்லைச் சொல்ல நினைப்பதுவும், சொல்வதுவும் ஒருவரது பண்பாடு. இத்தகைய பழக்கத்தை இலக்கணம் வகுத்து நெறிப்படுத்தியிருப்பது தமிழ்ப் பண்பாட்டின் உயர்வைச் சுட்டுகிறது.

2.3.3 மங்கலம்

நன்மை தரும் செயல்களை மகிழ்ச்சி தரும் செய்திகளைக் குறிப்பிடுவது மங்கலம் எனப்படும். மங்கலம் இல்லாத அமலங்கச் செய்தியாக இருந்தால், பண்பாடு கருதி, மங்கலமாகச் சொல்லுதல் மங்கலம் எனப்படும்.

ஒருவன் இறந்துவிட்டால், மங்கலமாகத் 'துஞ்சினான்' (தூங்கினான்) என்று குறிப்பிடுவர். கணவன் இறந்து தாலி இழந்த பெண்ணைச் சுட்டி, அவளுக்குத் 'தாலி பெருகிற்று' என்று கூறுவர். பசியோடு ஒருவன் இல்லம்தேடி வந்து, பிச்சை கேட்கும்போது உணவு இல்லாவிட்டால், 'இல்லை' என்று சொல்லாமல் 'உணவு மிஞ்சி விட்டது' என்று சொல்வார்கள்.

எதையும் மங்கலமாகச் சொல்ல வேண்டும் என்ற மனநிலை தமிழர்களுக்குப் பாரம்பரியமாக வழங்கி வந்திருக்கிறது. அது அவர்களது உயர்ந்த பண்பாட்டைக் காட்டுகிறது.

2.3.4 குழூஉக்குறி

ஒவ்வொரு கூட்டத்தாரும் அல்லது குழுவினரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக, ஒரு பொருள் தரும் சொல்லை விட்டுவிட்டு, அதனை வேறொரு சொல்லால் குறிப்பிடுவது குழூஉக்குறி என்பதாகும்.

நன்கு மது அருந்திக் கொண்டு தள்ளாடிக் கொண்டு செல்லுபவனைப் பார்த்து, 'குதிரையில் போகிறார்' என்று சொல்வர். இது ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கே புரியும்.

சில சொற்களைச் சில இடங்களில் சொல்ல இயலாது. அதைச் சொல்லவேண்டிய முறையில் பக்குவமாகச் சொன்னால்,சிறப்பாக இருக்கும் என்று கருதிக் கூறுவர். இதற்கும் ஒரு வகையான மனப்பக்குவம் தேவை. அந்த மனப்பக்குவத்தை வழங்குவது பண்பாடு. தமிழர்களிடம் இத்தகைய பண்பாட்டுக் கூற்றை அவர்கள் வழங்கும் குழூஉக்குறியின் மூலம் அறிந்து கொள்ளலாம்.