3.4 தமிழ்ப் பண்பாட்டு மையங்கள்

Audio

தமிழ்ப் பண்பாட்டின் மையங்களாக இன்று நாம் காணத்தக்க இடங்கள் பல. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற ஊர்களும், இறைத் தொண்டிற்கும் கலைப்பணிக்கும் பெயர் பெற்ற கோயில்களும் தமிழ்ப் பண்பாட்டின் விளக்க வாயில்களாகத் திகழ்கின்றன.

3.4.1 வரலாற்றுப் புகழ்வாய்ந்த இடங்கள்

தமிழகத்தின் தலைநகரங்களான பூம்புகார், உறையூர், கருவூர், மதுரை, காஞ்சி, திருச்சி, தஞ்சாவூர் ஆகியனவும், துறைமுகப் பட்டினங்களான முசிறி, கொற்கை, தொண்டி ஆகியனவும், கலை வளர்த்த இடங்களான மாமல்லபுரம், கழுகுமலை, குடுமியாமலை, கங்கை கொண்ட சோழபுரம், சிதம்பரம் ஆகியனவும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களாகும். ஆவுடையார் கோயில், திருவலஞ்சுழி, திருவீழிமிழலை, நாமக்கல் ஆகிய ஊர்களும் கவின்கலை மாட்சிமிக்க இடங்களாகும். இதோ திருவலஞ்சுழியில் உள்ள பலகணியைப் பாருங்கள். ஒரேகல்லில் அமைந்தது இது. இதன் நேர்த்தியான வேலைப்பாடு யாரையும் மயங்கச் செய்யும்.

3.4.2 கோயில்கள்

கோயில்களில் பழைமையான திருவாரூர்க் கோயிலைக் காணலாம். கோயில் ஐந்து வேலிப்பரப்பு; குளம் ஐந்து வேலிப்பரப்பு. ஆயிரக்கால் மண்டபம், தியாகேசர் திருவுலா, ஆழித்தேர் ஓட்டம் ஆகியன இங்குக் காணத்தக்கன.

சிதம்பரம் நடராசர் திருக்கூத்து, சிவகாமியம்மையின் நின்றகோலம், இறைவனோடு ஆடித் தோற்ற காளி, அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் நான்கு கோபுர வாயில்கள் வழியாக வந்து வழிபட்ட மாட்சி, சோழப் பெருவேந்தர்கள் பொன் வேய்ந்த தில்லைக் கோபுரம், சிவகங்கைக்குளம் ஆகியன இங்குக் காணத்தக்கன.


ஸ்ரீரங்கம்

வைணவப் பெருங்கோயில்களில் திருவரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கம் மிகச் சிறந்தது. பள்ளிகொண்ட நிலையில் உள்ள அரங்கநாதர் திருவுருவம், ஆண்டாள் முத்தியடைந்த வரலாறு, மார்கழி மாதத்தில் பாடப்பெறும் திருப்பாவை ஆகியன இங்கு மிகச்சிறப்புடையன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியே பிறந்துவிட்ட தமிழகத்தில் கோயில்களால் கலைகளும் அறங்களும் வளர்ந்தன.

"காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே" c03110ad.gif (1294 bytes)

என்ற பாட்டைக் கேட்டு மனத்தில் அசைவு தோன்றாதார் இருக்க முடியுமா? சிக்கல், கோனேரிராஜபுரம் கோயில்களில் உள்ள சண்முகர், நடராசர் திருமேனி அழகை யாரேனும் மறக்க முடியுமா?

ஆதி தமிழிசையின் அடையாளங்களாக விளங்கும் திருமுறை இசையும், நாதசுரமும், தமிழகக் கோயில்களில் இன்றும் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் உயிர்மூச்சாக விளங்குவது கலை. அதன் வெளிப்பாட்டை இன்றும் கோயில்களில் காணலாம்.