5.2 பண்பாட்டு அடிப்படைகள் - II

Audio

இல்லறம் செய்பவர்களுக்குச் சில கடமைகளை நம் பண்பாடு வகுத்துக் கொடுத்துள்ளது. தன் மனைவி மக்களுக்கென்று மட்டும் பொருள் சம்பாதித்து வாழ்கின்ற வாழ்க்கையாக அஃது இருக்கக் கூடாது. தம் வீட்டுக்கு வருகின்ற விருந்தினரை வரவேற்றுப் பேணுதல், பிறருக்குப் பொருள் வழங்குதல், முடிந்த உதவிகளைச் செய்தல், பொது நன்மைக்காகத் தாம் சில துன்பங்களைத் தாங்குதல் ஆகியன பண்பாட்டுச் செயல்கள் என்று போற்றத்தக்கன. இப்பண்பாட்டுச் செயல்களின் அடிப்படைகளை இங்குக் காணலாமே!

5.2.1 விருந்தோம்பல்

தமிழகத்தில் உள்ள தென்மாவட்டத்தில் உள்ள இளையான்குடி என்ற ஓர் ஊர் உள்ளது. இங்கே மாறனார் என்று ஒருவர் இருந்தார். அவர் உழவுத்தொழில் செய்பவர். அவருக்குச் சிறிதளவு நிலம் இருந்தது. அதில் வந்த வருவாயைக் கொண்டு விருந்தினர்க்கு உணவு படைத்து வந்தார். ஒரு மழைக்காலம். இரவுநேரம். அப்பொழுது ஒரு விருந்தினர் அவரைத் தேடி வந்தார். மாறனார் வீட்டில் அரிசி ஒரு மணிகூட இல்லை. காலையில்தான் வீட்டிலிருந்த விதை நெல்லைக் கொண்டுபோய் நாற்றங்காலில் விதைத்து விட்டு வந்திருந்தார். ஒன்றும் இல்லை என்று சொல்ல மனம் இல்லை. விருந்தாளியை வீட்டில் காத்திருக்கக் கூறிவிட்டுக் கொட்டும் மழையில் வயலை நோக்கி நடந்தார். காலையில் விதைத்த விதைநெல்லை அரித்தெடுத்தார். வயலில் முளைத்திருந்த கீரையையும் பறித்து வந்தார். மாறனார் மனைவி நெல்லைக் குத்தி அரிசியாக்கிச் சோறு சமைத்தார். கீரையையும் சமைத்தார். விருந்தினர்க்கு உணவு இடப்பட்டது. வந்த விருந்தினர் யார் தெரியுமா? மாறனாரின் விருந்தோம்பும் பண்பாட்டைச் சோதிக்க வந்த சிவபெருமானே அந்த விருந்தாளியாவார். இந்தச் செய்தி காட்டும் விருந்தோம்புதல் வழக்கமான எல்லைகளைக் கடந்தது இல்லையா?

5.2.2 ஈகையும் ஒப்புரவும்


முல்லைக்குத் தேர்

ஈகை என்பது பொருள் வசதியுள்ளவர்கள் இல்லாதவர்களுக்குப் பொருள் அளவில்லாமல் வாரி வழங்குவதாகும். கடையெழு வள்ளல்களைப் பற்றி நீங்கள் கேட்டதில்லையா? பாரி என்பவன் முல்லைக்கொடி வாடுகிறதே என்று தேரைக் கொடுத்தான். முல்லைக் கொடிக்குப் போய்த் தேரை வழங்குவதா என்கிறீர்களா? எதற்கு எதைக் கொடுப்பது என்று தெரியாத இந்தத் தன்மைக்குத்தான் கொடைமடம் என்று பெயர். கொடுப்பவன் தன் தகுதியும் உள்ள உயர்வும் புலப்படக் கொடுக்கும்போது கொடைப்பொருளும் உயர்ந்ததாகி விடுகிறது.


மயிலுக்குப் போர்வை

பேகன் என்பவன் என்ன செய்தான் தெரியுமா? ஒரு மழைக்காலத்தில் மயில் குளிரில் உலாவிக் கொண்டிருந்தபோது அது குளிரில் வருந்துவதாகக் கருதி ஓர் அழகிய போர்வையைக் கொடுத்தானாம். ஒரு தேரையும் போர்வையையும் கொடுத்த இந்த வள்ளல்களின் செயல்களிலிருந்து உங்களுக்கு என்ன தெரிகின்றது?

ஒரு கொடியும் பறவையும்கூடத் துன்பப்படக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள் என்றால் அரசர்களாகிய அவர்கள் தம் ஆட்சியில் மக்களை எப்படிக் காப்பாற்றியிருப்பார்கள் என்பதை உணரமுடியும் அல்லவா? உண்டாரை நெடுங்காலம் வாழவைக்கக்கூடிய நெல்லிக்கனியை அதியமான் ஒளவையாருக்குக் கொடுத்தான். ஆய் வள்ளல் தன்னை நாடி வந்த பரிசிலர்களுக்கு யானைகளைத் தந்தான். காரி என்பவன் எந்த நேரத்திலும் எளியவர்களுக்குப் பெரும்பரிசில்கள் தந்தவன். ஓரி தன்னை அடையாளம் தெரியாதவர்களிடம் தன் பெயரையும் சொல்லாமல் பொன்னையும் மணியையும் பரிசில்களாகத் தந்தவன். நள்ளி என்பவன் தான் இன்னான் என்று பிறரிடம் தெரிவிக்காமல் பிறருக்கு வேண்டியன எல்லாம் கொடுத்து விருந்தோம்பியவன். இத்தகைய வள்ளன்மைப் பண்பு தமிழகத்தில் தொடர்ந்து வந்துள்ளது.

ஒப்புரவு என்பது உலகத்தில் உள்ள எல்லா உயிர்களுக்கும் தம்மால் முடிந்த உதவிகளை எந்தப் பயனையும் எதிர்நோக்காமல் செய்தலாகும். மேகம் மழை பொழிவது போல் வழங்குதல் ஒப்புரவாகும். மருந்துமரம் இலையும் கனியும் காயும் பட்டையும் கொடுத்து உதவுதல் ஒப்புரவாகும்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு

(குறள் : 215)

c03110ad.gif (1294 bytes)

என்கிறார் திருவள்ளுவர். இதோ ஓர் ஊருணியைப் பாருங்கள். ஊருணி என்றால் குடிநீர்க்குளம் என்று பொருள். ஊருணியில் நிறைந்த நீரை எல்லா மக்களும் கொள்ளுவது போல அறிஞனின் செல்வமும் எல்லார்க்கும் பயன்படும் என்கிறார். ஒப்புரவு தமிழரின் குறிப்பிடத்தக்க பண்பாகும்.

5.2.3 பொதுநலம் பேணுதல்

தமிழர் பொதுநலம் கருதி வாழும் பண்புடையவர். இதோ இந்தக் கல்லைப் பாருங்கள். இக்கல்லுக்குப் பெயர் ஆவுரிஞ்சுகல் என்பதாகும். பசுவுக்கு முதுகு தினவெடுத்து அரிக்கும்போது உராய்ந்து கொள்ள இந்தக் கல் பயன்படும் என்று கருதிப் பசுக்கள் உலாவும் இடங்களில் இதனை நட்டு வைப்பர். ஒரு விலங்கின் தேவையைக்கூட நினைந்து செயலாற்றும் பண்பாட்டைப் பாருங்கள்.

பழங்காலத்தில் வீடு கட்டும்போது சிட்டுக்குருவிகள் வந்து தங்குவதற்கு மரத்தடுப்பு வைத்திருப்பார்கள். இது மனிதநேயத்தைக் காட்டும் செயல் இல்லையா? இப்படிச் சிறிய உயிர்களையெல்லாம் பாதுகாப்பவர்கள் பிறர்க்குத் தீமை செய்பவர்களாக இருக்க முடியாது இல்லையா? இதுதான் தமிழர் பண்பாட்டின் அடிப்படையாகும்.



தமிழர்களின் பழைய கதைகளிலும் இந்த பொதுநலப்பண்பு விளங்கக் காணலாம். சிபிச் சக்கரவர்த்தி என்ற சோழவேந்தன் தன்னிடம் அடைக்கலம் என்று வந்த புறாவுக்கு ஈடாகத் தன் சதையை அரிந்து கொடுத்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.