6.3 எட்டுத்தொகை நூல்கள் - II

Audio

மேலே நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு ஆகிய மூன்று நூல்களில் பண்பாடு அமைந்த பாங்கைக் கண்டோம். இப்பகுதியில் எஞ்சியுள்ள ஐந்து நூல்களில் பண்பாடு பற்றிய செய்திகளைக் காண்போம்.

6.3.1 பதிற்றுப்பத்தில் பண்பாடு

அக்காலச் சேரநாட்டுப் பகுதியில் விளங்கிய பண்பாடு பதிற்றுப்பத்தால் அறியப்படுகின்றது. சேரநாட்டில் அக்காலத்திலேயே வேதநெறிக்கு மதிப்பிருந்தது. அந்தணர்க்கு அந்நாட்டு வேந்தர் மிக மதிப்பளித்தனர். அரசர்கள் தவம் செய்வதால் பெரும் செல்வங்கள் கைகூடும் எனக் கருதினர். பெருஞ்சேரல் இரும்பொறை என்ற அரசன் தன் புரோகிதனைத் தவம் செய்து வருமாறு அறிவுறுத்தினான். அவ்வரசன் மன அமைதி, செல்வம், மகப்பேறு, கொடை, தெய்வ உயர்வு ஆகியன தவத்தால் அமையும் எனத் தெரிவித்துப் புரோகிதனைத் தவம் செய்யக் காட்டிற்கு அனுப்பினான். சேரநாட்டு அயிரைமலையில் கொற்றவை கோயில் இருந்தது. போரில் வெற்றி வேண்டி அரசர் அயிரைமலைக் கொற்றவையை வழிபட்டனர். பாலைக் கௌதமனார் என்ற அந்தணப் புலவர் வேண்டிக் கொண்டதற்கேற்பப் பல்யானைச் செல்கெழுகுட்டுவன் என்ற சேர அரசன் பத்துப் பெரு வேள்விகளைச் செய்வித்தான்.

இவை, பதிற்றுப்பத்திலிருந்து பெறும் பண்டைய தமிழர் பற்றிய செய்திகளாகும்.

6.3.2 பரிபாடலில் பண்பாடு

பரிபாடல் பாண்டி நாட்டுப் பழக்க வழக்கங்கள் சிலவற்றைக் குறிப்பிடுகின்றது. கண்ணன், பலதேவன் ஆகிய இருவரையும் அக்காலத்தவர் பெரும்பெயர் இருவர் எனக் கூறினர். இவ்விரு தெய்வங்களுக்கும் மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அழகர்மலையில் கோயில் இருந்தது. இம்மலை அக்காலத்தில் திருமாலிருஞ் சோலைமலை எனப்பட்டது. மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று இம்மலையில் திருமாலையும் பலதேவனையும் வழிபட்டனர். தலைவன் பரத்தையோடு சேர்ந்து வையையில் நீராடியதைப் பரிபாடல் காட்டுகின்றது. மக்கள் வையையாற்றுப் புதுவெள்ளத்தில் நீராடும்போது பொன்னால் செய்த நத்தை, நண்டு, இறால், வாளைமீன் ஆகியவற்றை நீரில் விட்டனர். மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆகமம் அறிந்த பூசகர் விழா நடத்தினர். அப்போது பெண்கள் தைந்நீராடல் எனப்பெறும் நோன்பை மேற்கொண்டனர். ‘நிலம் மழை பெற்றுக் குளிர்க’ என்று மகளிர் கூறி நீரில் மூழ்கி ஆடும் நீராடல் அம்பா ஆடல் எனப்பட்டது. இவ்வழக்கமே பிற்காலத்தில் பாவை நோன்பாகியிருக்கிறது. திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில் மண்டபத்தில் பல ஓவியங்கள் வரையப் பெற்றிருந்தன. நாள், மீன்கள், சூரியன் முதலான கோள்கள் எவ்வெவ்விடத்தில் இராசிச் சக்கரத்தில் நிற்கின்றன என்பது குறித்த ஓவியம் ஒன்று வரையப்பட்டிருந்தது. இரதி, மன்மதன் குறித்த ஓவியம் ஒன்று இருந்தது. கௌதம முனிவன், இந்திரன், அகலிகை, இந்திரன் கொண்ட பூனை வடிவம் ஆகிய உருவங்கள் ஓவியமாக ஆக்கப்பட்டிருந்தன. இவ்வாறு பாண்டிய நாட்டுப் பழக்க வழக்கங்களாகிய தமிழர் பண்பாட்டுக் கூறுகள் பரிபாடல் மூலம் வெளிப்படுகின்றன.

6.3.3 கலித்தொகையில் பண்பாடு

கலித்தொகையில் இடம்பெறும் ஏறு தழுவுதல் பற்றிய செய்தி தமிழர் பண்பாட்டில் குறிக்கத்தக்கதாகும். காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலப்பகுதியில் இந்த வீரவிளையாட்டு நிகழ்ந்தது. கொம்பு சீவப்பட்ட எருதுகளை அடக்கிய வீரர்களைப் பெண்கள் விரும்பி மணம் முடித்தனர். தொழுவில் ஏறுகள் கட்டவிழ்த்து விடப்படும். இளைஞர்கள் நீர்த்துறையிலும் ஆலமரத்திலும் மாமரத்திலும் உறையும் தெய்வங்களை வணங்கியபின் தொழுவில் பாய்ந்து காளைகளோடு போராடுவர். மகளிர் பரண்மீது நின்று ஏறுதழுவும் காட்சியைக் காண்பர். வீரர் சிலரின் மார்பில் காளைகள் கொம்புகளால் குத்தும். குடர் வெளியே தள்ளப்படும். ஏறுகளை அடக்கும் வீரர்கள் மக்களால் போற்றப்படுவர். ஏறு தழுவல் முடிந்தபின் ஊர்மன்றத்தில் மகளிரும் மைந்தரும் கைகோத்துக் குரவையாடுவர். ஏறு தழுவுதற்குத் தயங்கும் ஆயர் இளைஞனை ஆயர் மகள் கணவனாக ஏற்றுக்கொள்ள மாட்டாள். ஆயர் பெண் எருமையின் கொம்பைத் தெய்வமாக வைத்து வழிபட்டுத் திருமணத்தை நடத்துவர்.

கலித்தொகை கீழ்க்கண்ட வாழ்வியல் உண்மைகளை எடுத்துச் சொல்கிறது. இவை இக்கால மாந்தரின் மனச்செம்மையையும், முதிர்ச்சியையும் காட்டுகின்றன.
 

  • செல்வம் நிலையில்லாதது.
  • யாவர்க்கும் தீங்கு செய்பவன் இறுதியில் கெட்டு ஒழிவான்.
  • கொடைப்பண்பு இல்லாதவனின் செல்வம் அவனைச் சேர்ந்தவரைப் பாதுகாக்காது.

  • அறிவற்றவர் தம் இறுதி பற்றியும் முதுமை பற்றியும் எண்ண மறந்து விடுவர்.

  • நிலவு நாள்தோறும் தேய்வது போல இளமையும் அழகும் தேயும்.

  • நேர்மையற்ற முறையில் தேடிய பொருள் இம்மையிலும் மறுமையிலும் பகையே தரும்.

  • இளமை, காமம் ஆகியன நாள்தோறும் கழிவன.

  • சோம்பர் இல்லாதவன் செல்வம் வளரும்.

  • பொருள் இல்லாதவன் நடத்தும் இல்லறம் இன்பம் தராது.
     

  • 6.3.4 அகநானூற்றில் பண்பாடு

    அகநானூற்றில் அக்காலத் தமிழர் திருமணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வீட்டுக்கு முன் உள்ள முற்றவெளியில் பந்தல் இடப்பட்டு மணல் பரப்பப்படும். பந்தலைச் சுற்றிலும் மலர் மாலைகள் தொங்கவிடப்படும். மனையின்கண் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். உழுத்தம் பருப்புடன் அரிசி சேர்த்துச் சமைத்த பொங்கல் விருந்து படைக்கப் பெறும். சந்திரன் உரோகிணியுடன் சேரும் நல்லோரையில் மக்களைப் பெற்ற வாழ்வரசியர் மணமகளை நீராட்டிக் ‘கற்பில் வழுவாது, பல பேறுகள் தந்து கணவனுடைய விருப்பத்திற்கு உரியவளாய்த் திகழ்க’ என வாழ்த்துவர். மணமக்களைப் பெரியோர் நெல்லும் மலரும் கொண்டு வாழ்த்துவர். இறைச்சியோடு சேர்ந்த நெய்ச்சோறு ஆக்கிப் படைத்தலும் இம்மணவிழாவில் நிகழும். மணமுழவும் பெரிய முரசமும் ஒலிக்கும். அப்போது வாகை இலையை அறுகம்புல்லின் அரும்புடன் சேரக்கட்டுவர். வெண்மையான நூலில் இலையும் அரும்பும் கொண்ட மாலையைச் சூட்டி மணமகளை அலங்கரிப்பர். இத்திருமணங்களில் எரி வளர்த்தல், தீவலம் வருதல், மந்திரம் கூறுதல் ஆகியன இல்லை.

    ஒவ்வோர் ஊரிலும் அக்காலத்தில் பொதியில் எனப்படும் ஊர்மன்றம் ஒன்று இருந்தது. அங்குக் கந்து எனப்படும் மரத்தூண் நடப்பட்டிருந்தது. அதனை மக்கள் வழிபட்டனர். இதிலிருந்தே இலிங்க வழிபாடு வளர்ந்திருக்க வேண்டும். காக்கும் தெய்வமான திருமாலின் ஐந்து படைகளின் (சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதம்) உருவம் கொண்ட ஐம்படைத்தாலி என்ற அணியைச் சிறுபிள்ளைகளுக்குப் பெற்றோர் அணிவித்தனர். மலையின்மீது கார்த்திகை நாளில் விளக்கிட்டு வழிபடுதல் அக்கால வழக்கமாகும். தினைக்கதிரை உண்ண வந்த களிற்றுயானை (ஆண் யானை)யினைத் தினைப்புனம் காவல் காத்த பெண் குறிஞ்சிப்பண் பாடி, அதனை நின்ற நிலையிலிருந்து அகலாமல் உறங்கச் செய்தாள் என்று அகநானூறு கூறுகின்றது.

    பண்டைக்காலத் திருமணமுறை, உணவு முறை, வழிபாடு, சிறுவர்களுக்கு ஐம்படைத்தாலி அணியும் வழக்கம் முதலிய பண்பாட்டுக் கூறுகளை அகநானூறு வெளியிடுகிறது.

    6.3.5 புறநானூற்றில் பண்பாடு

    புறநானூற்றை அக்காலப் பண்பாட்டுக் களஞ்சியம் என்று கூறலாம். அரசர்களுக்கு அஞ்சி வாழாத கல்விச்செருக்கு புலவர்களிடம் இருந்தது எனப் புறநானூறு கூறுகின்றது. தம்மை மதிக்காமல் பரிசளிக்க வந்த வேந்தர், காலந்தாழ்த்திப் பரிசளித்த கொடையாளி, அதுபோல் தகுதியறியாது பரிசில் வழங்க முயன்ற மன்னர் ஆகியோர் கொடையை அக்காலப் புலவர்கள் ஏற்கவில்லை.

    “எத்திசைச் செல்லினும் அத்திசைச் சோறே" (புற: 206-13)
    “பெரிதே உலகம் பேணுநர் பலரே"            (புற: 207-7)
    “உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்"   (புற: 197-16)

    என்பன போன்ற உயர்ந்த சிந்தனைக் கூற்றுகள் புறநானூற்றில் உள்ளன.
     


    பிசிராந்தையார்

    பண்பாட்டில் நட்பு சிறந்த இடம் பெறுகிறது. கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு உலகில் எங்கும் காண இயலாதது. கோப்பெருஞ் சோழன் சோழ நாட்டு அரசன்; ஆந்தை பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்ற ஊரைச் சார்ந்த புலவர். இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்ததில்லை. ஆனால் இருவரிடையே உயிர்நட்புப் பொருந்தியது. கோப்பெருஞ்சோழன் தன் மக்களோடு மனம் மாறுபட்டு வெறுப்புற்ற நிலையில் உயிர் துறக்க எண்ணினான். வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பு கொண்டு உயிர்விடும் செயலை அக்காலத்தில் வடக்கிருத்தல் என்பர்.

    சோழன் வடக்கிருந்தான். திருவரங்கம் என்ற ஊரில் காவிரிக்கரையில் சோழன் வடக்கிருந்தபோது தன் பக்கத்தே இருந்த சான்றோரிடம் என் நண்பன் ஆந்தை என்னைத் தேடி வருவான். நான் உயிர்நீத்தபின் வந்தால், எனக்கு அருகே அவனுக்கும் உயிரடக்கம் கொள்ள இந்த இடத்தை நான் அளித்தேன் என்று கூறுங்கள் என்று கூறி உயிர் விட்டான். அவன் சொன்னபடியே ஆந்தையும் வந்தார். நிகழ்ந்தது அறிந்து அவ்விடத்தேயே இருந்து அவரும் உயிர் நீத்தார். பொன்னும் மணியும் முத்தும் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் மாலை சமைக்கும்போது பக்கத்தில் நெருங்கி வந்து விடுதல் போலச் சான்றோர்கள் சான்றோரையே சேர்வர் என்று புலவர் ஒருவர் இந்நிகழ்வு குறித்துப் போற்றினார்.


    குமணன்

    புலவர் ஒருவர் பரிசில் பெறுவதற்காகத் தன் தலையையே கொடுக்க முன் வந்தான் குமணன் என்னும் மன்னன். புலவர் ஒருவர் வறுமையைத் துடைக்க வசதியற்ற நிலையில் கொடையாளி ஒருவன் தன் வாளை அடகு வைத்தான்; மற்றொருவன் பகைவர்மீது போர் தொடுக்கவும் கருதினான்.

    பூதப்பாண்டியன் என்ற அரசன் பகைவரை நான் வெல்லாவிடில் நான் என் மனைவியைப் பிரிந்த குற்றத்திற்கு ஆட்படுவேனாக என்று சூள் உரைத்தான். பூதப்பாண்டியன் இறந்தபின் கைம்மை நோன்பு ஏற்க விரும்பாத அவன் மனைவி உடன்கட்டை ஏறினாள். சோழன் நலங்கிள்ளி பகைவரை நான் வெல்லாவிடின் என் கழுத்திலுள்ள மாலை பொது மகளிர் மார்பில் புரண்ட குற்றத்தை எய்தட்டும் என்றான். சேர அரசன் ஒருவன், என் மனைவி இறந்த பிறகும் நான் உயிர் வாழ்கிறேனே என்று மனம் நொந்தான். புறநானூறு தமிழர் வரலாற்றின் கருவூலம். அது தமிழர்களின் வீரப் பெருமையையும், மன்னர்களின் கொடைச் சிறப்பையும், புலவர்களின் பெருமிதத்தையும், நட்பின் சிறப்பினையும் வெளிப்படுத்துகிறது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. சங்ககாலம் என்று அக்காலம் பெயர் பெறக் காரணம் யாது?

    விடை

    2. எட்டுத்தொகை நூல்களில் இரண்டன் பெயரைக் குறிப்பிடுக.

    விடை

    3. பதிற்றுப்பத்து எந்த அரசர்களைப் பற்றிப் பாடப்பெற்றது?

    விடை

    4. அகப்பொருள், புறப்பொருள் என்பன பற்றி விளக்குக.

    விடை

    5. புறநானூறு காட்டும் பண்பாட்டு நிகழ்வுகளில் இரண்டைக் குறிப்பிடுக.

    விடை