1.3 மணிமேகலை

E

மாதவியின் மகள் மணிமேகலை. அழகும் இளமையும் உடைய மணிமேகலை இந்திர விழாவில் ஆடவருவாள் என்று பூம்புகார் மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர். ஆனால் மாதவியோ தானும் துறவு பூண்டு தன் மகள் மணிமேகலையையும் துறவு நெறிப்படுத்துகிறாள். மணிமேகலையைக் காணும் உதயகுமரன் என்ற சோழ இளவரசன் அவள் அழகில் மயங்கிப் பின்தொடர்கிறான். மணிமேகலா தெய்வம் மணிமேகலையை உதயகுமரனிடமிருந்து காப்பாற்றுவதற்காக மணிபல்லவம் என்ற தீவிற்குத் தூக்கிச் சென்று விடுகிறது.

Click here to Animate

அமுத சுரபி

அங்கு மணிமேகலை 'அமுதசுரபி' என்ற பாத்திரத்தைப் பெறுகிறாள். அள்ள அள்ளக் குறையாமல் சோறு வந்து கொண்டே இருக்கும் அதிசயமான பாத்திரம் அது. மணிமேகலை அந்தப் பாத்திரத்துடன் வந்து பூம்புகாரில் அறம் செய்கிறாள். உதயகுமரன் மணிமேகலையைத் தொடர்ந்து வருகிறான். அவனிடமிருந்து தப்ப மணிமேகலை காயசண்டிகை என்ற கந்தருவப் பெண் வடிவம் கொள்கிறாள். இந்நிலையில் காயசண்டிகையின் கணவன் காஞ்சனன் என்பான் தன் மனைவியைத் தேடி வருகிறான். அவன் உதயகுமரன் மேல் சந்தேகம் கொண்டு அவனை வாளால் வெட்டி விடுகின்றான். உதயகுமரன் இறந்தவுடன் அவன் தாய் மணிமேகலைக்குக் கொடுமை பல செய்கிறாள். மணிமேகலை அவளைத் திருத்தி அறநெறியைப் பின்பற்றச் செய்கிறாள். மணிமேகலை நாடெங்கும் பௌத்த தருமத்தைப் பரப்புகிறாள். இதுவே மணிமேகலை நூல் கூறும் கதை. மணிமேகலை வலியுறுத்திக் கூறும் தலைமையான அறம் எது எனத் தெரியுமா?

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

(மணி, மர்ரே பதிப்பு, 11: 95)

Tamil Audio

என்பதுதான். இதன் பொருள் என்ன? உலகில் வாழ்கின்றவர்களுக்கெல்லாம் உணவு கொடுத்தவர்கள் உயிர் கொடுத்தோராவர் என்பதாகும்.

1.3.1 மணிமேகலை காட்டும் அறம்

மணிமேகலை பௌத்த சமயத்தைப் பரப்பும் நோக்கத்துடன் எழுதப் பெற்ற நூல். சங்க காலத்தில் ஆளுமை பெறாத சமய உணர்வு படிப்படியாக வளர்ந்திருப்பதை மணிமேகலை காட்டுகிறது. சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் சமணத் துறவியாகக் காட்சி தருகிறார்; அவரும்கூடக் கண்ணகியின் ஆற்றலுக்குக் குறைந்தவராகவே காட்டப் பெறுகிறார். மணிமேகலையின் கதைத் தலைவியே பௌத்த சமயத்தைப் பரப்புகின்றாள். தமிழகப் பண்பாட்டு வரலாற்றில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சமயம் மனித வாழ்வில் பேரிடம் பெற்றதை மணிமேகலை வெளிப்படுத்துகிறது.

மணிமேகலை பத்தினிப் பெண்களை மூவகைப்படுத்திக் கூறுகின்றது.

(அ) கணவன் இறந்தவுடன் எரி மூழ்கி இறப்பவர்
(ஆ) தனியே எரி வளர்த்து இறப்பவர்
(இ) கணவனை நினைந்து கைம்மை நோன்பேற்பவர்

என மணிமேகலை இவர்களை வகைப்படுத்துகின்றது.

மணிமேகலை மனிதர் உடம்பை இழிவானதாகக் கருதி உரைக்கின்றது. உடம்பு புலால் நிறைந்தது; மூத்துத் தளர்வது; பிணி கூடுவது; குற்றம் புரிவது; கவலையின் கொள்கலம் என்று கூறி இதனைப் புறக்கணிப்பதே சரியானது என்கின்றது.

1.3.2 மணிமேகலை கூறும் பண்பாட்டு நெறிகள்

மணிமேகலை ஆரியர்தம் பண்பாட்டையும், தமிழர் பண்பாட்டையும் ஒப்பிடும் வகையில் உரைக்கின்றது. ஆபுத்திரன் என்பவன் வேள்வியில் பலி கொடுப்பதற்கெனப் பார்ப்பனர் கட்டி வைத்திருந்த பசுவை அவிழ்த்து விடுகிறான். அதைக் கண்ட பார்ப்பனர்கள் அவன் பிறவி இழிந்தது என்று தூற்றுகின்றனர். அவன் அமைதியாக "உங்கள் முனிவர்கள், பசு வயிற்றிலும் மான் வயிற்றிலும் நரி வயிற்றிலும் பிறந்தவர்களாயிற்றே" என்று மறுமொழி கூறுகிறான். ஆபுத்திரன் ஊரை விட்டு விரட்டப்படுகிறான். ஆபுத்திரனுக்குத் தெய்வம் அமுதசுரபியை அளிக்கிறது. அமுதசுரபி கொண்டு ஆபுத்திரன் அறம் செய்கிறான். பிறர் பசி தீர்க்க அதனைப் பயன்படுத்த முடியாத நிலையில் கோமுகி என்ற பொய்கையிலே அதனை விட்டெறிந்து விட்டு உண்ணா நோன்பிருந்து உயிர் விடுகிறான். அப்பாத்திரமே பிறகு மணிமேகலையின் கையை அடைகிறது. மணிமேகலை சிறைச்சாலையை அறச்சாலை ஆக்குகின்றாள்.

பெண்களின் கற்பு, தவசிகளின் நோன்பு ஆகியவற்றை அரசன் பாதுகாக்காவிட்டால் அவை இடர்ப்படும் என இந்நூல் கூறுகின்றது. எது பெரிய அறம் என்ற வினாவிற்கு மணிமேகலை கூறுவது கேளுங்கள்!

அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்

(மணி, மர்ரே பதிப்பு - 25:228)

Audio

என மொழிகின்றது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் இவை என அறிந்து அவற்றை எல்லார்க்கும் வழங்குவதே பண்பாடு எனத் தெரிவித்துள்ளது அக்காலச் சமூகம்.

1.3.3 மணிமேகலை காட்டும் பல சமயங்கள்

மணிமேகலையின் காலத்தில் பல சமயங்களும் சமயப் பிரிவுகளும் தோன்றிவிட்டன. சமய நெறியடிப்படையிலான பண்பாடு அக்காலத்திலிருந்தே தொடங்கி விட்டது. வைதிகவாதி, சைவவாதி, பிரமவாதி, ஆசீவகவாதி, நிகண்டவாதி, சாங்கியவாதி, வைசேடிகவாதி, பூதவாதி, பௌத்தவாதி எனப் பல நெறியினர் தமக்குள் போரிட்டுக் கொண்டனர் என அறியலாம். சமய அடிப்படையில் நல்வினை, தீவினை ஆகிய இருவினை பற்றிய நம்பிக்கை சமுதாயத்தில் அழுத்தமாக ஏற்பட்டது. அறத்தின் பயனாகவே எல்லாச் சிறப்பும் வரும் என்று சாத்தனார்
கூறுகின்றார். இந்தியச் சமயங்கள் பலவற்றினும் நல்வினை தீவினை பற்றிய கருத்துகள் வளரத் தொடங்கிவிட்டன. உடம்பு, செல்வம், இளமை, இன்பம் ஆகியன நிலையாக இருக்கமாட்டா என்றும், செய்யும் வினையின் பயனை நுகர்ந்தே ஆக வேண்டுமென்றும் மணிமேகலை மொழிகின்றது. மறுபிறப்பைப் பற்றிய கருத்தும் வலிமையாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பௌத்த சமயம் வைதிக சமயத்துக்கு மாறானது என்றும், தமிழகத்தில் வைதிகம், பௌத்தம் ஆகிய இரு நெறிகளும் பரவின என்றும் மணிமேகலைவழி அறியலாம். சமயச் சார்பற்ற தமிழ்ப் பண்பாட்டில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் சமயம் தன் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. வசிட்டர், அகத்தியர் ஆகியோரின் பிறப்புப் பற்றிய கதைகள், உதயணன் கதை, அகலிகை கதை, தீக்கடவுளின் மனைவி கதை, பரசுராமன் அசுரர்களை அடக்கிய கதை, வடநாட்டில் பிறந்து இறந்தவர்கள் அடுத்த பிறவியில் தென்னாட்டில் பிறந்த கதை, திருமால் உலகு அளந்த கதை, கண்ணன், பலராமன் நப்பின்னையோடு நடனமாடிய கதை, திருமாலின் வயிற்றிலிருந்து பிரமன் தோன்றிய கதை ஆகியன மணிமேகலையில் இடம்பெறுகின்றன. பௌத்த சமயம் இக்கதைகளையெல்லாம் தமிழகத்தில் சேர்த்தது.


தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1. ஐம்பெருங்காப்பியங்களின் பெயர்களைக் கூறுக.

2. ஐம்பெருங்காப்பியங்களின் காலத்தைக் குறிப்பிடுக.

3. கண்ணகி மதுரையில் யாரிடம் அடைக்கலம் ஆக்கப்படுகிறாள்?

4. சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் யாவை?

5. காயசண்டிகை யார்?