1.4 சிந்தாமணி

English AudioE

சிந்தாமணி கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய காப்பியம். முழுவதும் விருத்தம் என்ற பாட்டு இனத்தால் எழுதப் பெற்றது. இந்நூல் 13 இலம்பகங்களையும் 3145 செய்யுட்களையும் கொண்டது. இலம்பகம் என்றால் உட்பிரிவு என்பது பொருள். இந்நூலில் வரும் கதைத் தலைவன் சீவகன் எட்டுப் பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான். எனவே இது மணநூல் எனப் பெயர் பெற்றது. என்றாலும் மக்களின் உடம்பும், உடம்பால் அடையப் பெறும் இன்பமும், தேடும் பொருளும், இளமையும், உலகமும் நிலையாக இல்லாமல் அழிவன என்றும் அதனால் முத்தி பெறும் முயற்சியை நாடுங்கள் என்றும் இந்நூல் ஆசிரியர் கூறுகிறார்.

1.4.1 சிந்தாமணி கூறும் கதை

சச்சந்தன் என்ற அரசன் விசயை என்ற தன் மனைவியின் அழகில் மயங்கி ஆட்சி செய்வதை மறந்து அந்தப்புரத்திலேயே இருக்கிறான். கட்டியங்காரன் என்ற தீய அமைச்சன் சச்சந்தனைக் கொன்றுவிட்டு நாட்டைக் கைப்பற்றிக் கொள்கிறான். விசயை ஒரு மயிற் பொறியில் ஏறித் தப்புகிறாள்; சுடுகாட்டில் ஒரு மகனைப் பெற்றெடுக்கிறாள். அம்மகனைக் கந்துக்கடன் என்ற வணிகன் எடுத்துச் சென்று சீவகன் என்று பெயரிட்டு வளர்க்கிறான். சீவகன் இளைஞனாய் வளர்ந்து அரிய செயல்களால் பெண்களின் உள்ளத்தைக் கவர்ந்து எட்டுப் பேரைத் திருமணம் செய்து கொள்கிறான்; கட்டியங்காரனை வென்று அரசைக் கைப்பற்றுகிறான். பின்பு உலகில் அனைத்தும் அழியக் கூடியன என்பதை உணர்ந்து துறவு கொள்கிறான். இதுவே சிந்தாமணி கூறும் கதையாகும்.

1.4.2 சிந்தாமணி காட்டும் அறங்கள்

புலால் உண்ணுதல் தீயது. அச்செயல் ஒருவரை நரகத்திற்கு அனுப்பும். கள் அருந்துதல் தவறானது. தீவினைகள் செய்யாமல் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுதல் கடமையாகும். வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது தெரியுமா?

பேதைமை என்னும் வித்திற்
     பிறந்துபின் வினைகள் என்னும்
வேதனை மரங்கள் நாறி
     வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்
காதலும் களிப்பும் என்னும்
     கவடுவிட்டு அவலம் பூத்து
மாதுயர் இடும்பை காய்த்து
     மரணமே கனிந்து நிற்கும்

(சீவக, மர்ரே பதிப்பு: 1389)

Tamil Audio

என்கிறார். அறியாமை (பேதைமை) என்ற விதை வேதனை என்னும் மரத்தை உண்டாக்கியது. ஆசைகள் (வேட்கை) என்ற வேர்கள் ஓடின. காதல், மகிழ்ச்சி என்ற கிளைகளை (கவடு) அம்மரம் உண்டாக்கியது. துன்பம் (அவலம்) என்ற பூப் பூத்தது. துயரம் (இடும்பை) என்ற காய் காய்த்தது. மரணம் என்ற பழத்தைத் தந்தது என்பது இப்பாட்டுக் கூறும் செய்தியாகும். இதனால் நல்வினைகளைச் செய்ய வேண்டும் என்பதும், ஆசைகளை நீக்க வேண்டும் என்பதும் அறியப்படுகின்றன. எளியவர்க்கு உதவுதல், பெண்களின் கற்பைப் பாதுகாத்தல், காமம் என்ற வலையில் சிக்காமல் இருத்தல், நண்பர்களுக்குத் தக்க சமயத்தில் உதவுதல், செய்ந்நன்றியைப் போற்றுதல், பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளுதல் போன்ற அறங்கள் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன.

1.4.3 சிந்தாமணியும் சமண நெறிகளும்

சிந்தாமணி ஒரு சமண சமய நூல். வினைகளின் விளைவாகவே பிறவிகள் உண்டாகின்றன என்ற சமண சமயக் கருத்தை இந்நூலிற் காணலாம்.

சாதலும் பிறத்தல் தானும்
     தம்வினைப் பயத்தின் ஆகும்

(சீவக, மர்ரே பதிப்பு: 269)

என்று கூறும் இந்நூல். சாவுக்கு வருந்துதலும், பிறத்தலுக்கு மகிழ்தலும் அறிவில்லாச் செயல்களாகும். நம் பிறவிகள் ஆற்றுமணல் போல் எண்ண முடியாதவை. நல்ல காட்சி, நல்ல ஞானம், நல்ல ஒழுக்கம் போன்ற உயர்ந்த நெறிகளை ஒருவர் கடைப்பிடித்தால் பிறவித் துன்பம் வந்து சேராது. ஒவ்வொரு மனிதனும் ஒரு போர் செய்ய வேண்டும். எப்படிப்பட்ட போர்?

மெய்ஞ் ஞானம் எனும் தேர்

thear

உயிரைப் பாதுகாக்கும் உணர்வு எனும் குதிரை

horse

சன்மார்க்க அறிவு எனும் யானை

elephant1

கருணை எனும் படைவீரர்

veerar

நல்லொழுக்கம் எனும் உடம்புக்கு இடும் கவசம்

Kavasam

மெய்ப் பொருள்கள் எனும் வாளும் கேடயமும்

Sword

என்று கொண்டு போர் செய்தால் இருவினை (நல்வினை, தீவினை)யால் வரும் தீமை நீங்கும். சமண சமயத்திற்கு உரிய இத்தகைய நெறிகளை இந்நூல் கூறுகின்றது.