2.3 சிற்பக்கலை

English AudioE

அரக்கு, சுதை, மரம், மெழுகு, தந்தம், பஞ்சலோகம், கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செய்யப்படுகின்றன. உலோகத்தினாலும் கல்லினாலும் அமைக்கப்பட்ட சிற்ப வடிவங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். அவையாவன:

 • பிரதிமை உருவங்கள் என்பன சிலரை அப்படியே சிலை வடிவம் போல உருவாக்குவனவாகும்.

 • தெய்வ உருவங்கள் என்பன சிவன், முருகன், திருமால் முதலிய கடவுள் உருவங்கள் ஆகும்

 • கற்பனை உருவங்கள் என்பன காமதேனு, கற்பகமரம் போன்றவை ஆகும்.

 • இயற்கை உருவங்கள் என்பன மரம், செடி, கொடிகளாகும். சிற்பக் கலை தொன்மையான கலைகளில் ஒன்றாகப் போற்றப்படுகிறது

Click Here To Zoom
பிரதிமை
உருவங்கள்

Click Here To Zoom
தெய்வ
உருவங்கள்

Click here to Zoom
கற்பனை
உருவங்கள்

Click here to Zoom
இயற்கை
உருவங்கள்


2.3.1 கல்லும் சொல்லாதோ கவி

மரத்தால் ஒரு யானை செய்தார்கள். யானை அச்சாக அவ்வாறே இருந்தது. அது யானை என்று கருதிப் பார்த்தவர்களுக்கு அது மரம் என்று நினைக்கத் தோன்றவில்லை. அது மரம் என்று கருதிப் பார்த்தவர்களுக்கு அது யானை என்று நினைக்கத் தோன்றவில்லை. இதைத்தான் திருமந்திரம் என்ற நூல்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை

(திருமந்: 2290)

என்று கூறுகிறது. இது சிற்பக்கலையின் பெருமையை உணர்த்துவது!

Madurai Meenakshi Amman Temple
மதுரை மீனாட்சியம்மன் கோயில்

சிலைகள் பலவற்றை மனிதர்கள் மெய்ம்மறந்து பார்க்கக் காரணம் என்ன? கல்லில் சமைத்த உருவம் அதைக் கல் என்பதை மறக்கச் செய்து
விடுகிறது.

இதோ மதுரை மீனாட்சியம்மன் கோயில் முகப்பிலுள்ள தூண் சிற்பங்களைப் பாருங்கள்! சிவபெருமானின் ஆடல் காட்சிகளைக் கல் வடிவத்தில் பார்த்திருக்கிறீர்களா? இவற்றைக் கல் என்று நினைக்கத் தோன்றுகிறதா? இதுதான் கலையின் மாட்சி!

2.3.2 தெய்வத் திருமேனிகள்

Click here to Zoom
உமை மற்றும் சிவன்

உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வத் திருமேனிகள் பல நம் கோயில்களில் இடம் பெற்றிருக்கின்றன. இதோ, செப்புத் திருமேனியில் அழகிய சிலையாய் உருவாகியுள்ள உமை மற்றும் சிவனின் தோற்றங்களைக் காணுங்கள்!

Sundara Moorthi Nayanaar
சுந்தரமூர்த்தி நாயனார்

வள்ளி தெய்வானை உடனாகிய சிக்கல் சிங்காரவேலரின் படிமம் காணக் காணத் திகட்டாதது. வட களத்தூர் கல்யாண சுந்தரர் திருமேனி பொழுது எல்லாம் பார்த்து இன்புறத்தக்கது. காதில் வளையம், தலையில் பாம்பு முடி, கழுத்தில் அணிகலன்களோடு கூடிய சிவபெருமானின் தோற்றம் காண்போரைக் களிப்புறச் செய்யும். இதோ, தேவாரம் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார் உருவத்தைப் பாருங்கள் இவற்றைப் போல ஆயிரக்கணக்கான உருவங்கள் நம் கோயில்களில் குடிகொண்டு உள்ளன

2.3.3 சிற்பிகளும் சிற்பங்களும்

தமிழகத்தில் சிற்பங்களை வடித்த சிற்பிகள், தெய்வ உருவங்களை உருவாக்கிய போது சில நெறிமுறைகளைக் கடைப்பிடித்தார்கள். அவையாவன :

Thatchinamoorthy Sirpam
மனித உருவில் தெய்வ வடிவம்

 • மனித உருவம் போலத் தெய்வ உருவங்களைச் சமைத்தாலும் மனிதர்களைப் போல எலும்பும் நரம்பும் தசையமைப்பும் கொண்டவர்களாகத் தெய்வங்கள் வடிக்கப் பெறுவதில்லை; படைப்பதில்லை.

 • நான்கு கைகள், ஆறு கைகள், பன்னிரண்டு கைகள், ஆறு முகங்கள், யானைத் தலை போன்ற வேறுபட்ட வடிவங்களில் கலைநுட்பங்கள் வெளிப்படத் தெய்வ உருவங்கள் படைக்கப்பெறும்.

 • சிற்பங்களிலேயே ஆடை அணிகலன்கள், பூணூல் ஆகியன அமைந்திருக்கும் வகையில் சிற்பங்கள் வடிக்கப்பெறும்.

 • சிற்பங்களின் அளவுகளிலும் நிறைய வேறுபாடுகள் உண்டு. 12 அடி 15 அடி உயரம் கொண்ட சிலைகளும் படைக்கப்பெறும்.

சிற்பிகள் அழகியல் மற்றும் உடற்கூறு இலக்கணங்களைப் பயின்றவர்களாக இருந்தனர். சிற்பிகளுக்கென்று தனி இலக்கண நூல்களும், பயிற்சி முறைகளும் இருந்தன. மயன் எனும் தெய்வச் சிற்பி இருந்ததாகவும் அவன் பல அரிய சிற்பங்களை உருவாக்கியதாகவும், உயர்ந்த கட்டடங்களை எழுப்பியதாகவும் தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

 1. உலகம் எங்கும் வாழும் கலைகள் எவை?

 2. அம்பிகாபதியின் கதையைச் சுருக்கமாகக் கூறுக.

 3. யானை விடியும் வரை கதிர்களை உண்ணாமல் இருந்தது ஏன்?

 4. ஏழு சுரங்களுக்குரிய தமிழ்ப் பெயர்களைக் கூறுக.

 5. திருவள்ளுவர் குறிக்கும் இசைக் கருவிகள் யாவை?

 6. தெய்வ வடிவங்களைச் செய்யும் போது சிற்பிகள் கடைப்பிடித்த நெறிமுறைகளைக் குறிப்பிடுக.