2.4 ஓவியக்கலை

c03120ad.gif (1750 bytes)E

என்ற எழுத்தே ஓவியம் என்ற பொருளுடையதாகப் பண்டைக் காலத்தில் இருந்தது. கற்காலத்திலேயே ஓவியக்கலை உருவாகத் தொடங்கி விட்டது. மனிதன் குகைகளில் வாழ்ந்த போதே ஓவியம் தீட்டியிருக்கிறான். வேட்டையாடி உணவுப் பொருள்களைத் தேடிக்கொண்ட காலத்திலும் ஓவியம் படைத்திருக்கிறான். தமிழகத்தில் கீழ்வாலை, முத்துப்பட்டி, அணைப்பட்டி, வேட்டைக்காரன் பாளையம் ஆகிய ஊர்களில் வேட்டையாடுவதைக் குறிக்கும் பழைமையான பாறை ஓவியங்கள் காணப்படுகின்றன. கோயில் சுவர்கள், அரண்மனைப் பள்ளியறைகள், கொலு மண்டபங்கள் ஆகிய இடங்களில் வரையப் பெற்ற ஓவியங்கள் இன்னும் தமிழகத்தில் அழியாமல் கிடைக்கின்றன. ஓவியத்திற்கு என்றே தனி இடம் இருந்தது என்பதைச் சித்திரமாடம் என்ற சொல் வெளிப்படுத்தும்.

2.4.1 ஓவியப்பாவை

பெண்ணின் அழகை ஓவியத்திற்கு ஒப்பிடுவது வழக்கம். ஓவியம் போன்ற பெண் என்றும் ஓவியப்பாவை என்றும் கூறுவர்.

உயிர்பெற எழுதப்பட்ட
     ஓவியப் பாவை ஒப்பாள்

(சீவக: 2048)

என்று சீவக சிந்தாமணி கூறுகின்றது. கொல்லி மலையிலே ஒரு பெண்ணின் ஓவியம் வரையப் பட்டிருந்ததாம். அதனைப் பார்ப்பவர்கள் உயிரைப் பறிகொடுக்கும் அளவிற்கு அதன் அழகில் மயங்கி விழுந்து விடுவார்களாம்.

Click here to Zoom
இரதியின் ஓவியம்

இப்படி ஒரு கதை (ஓவியப் பாவையைப் பற்றிய) நம் நாட்டில் நிலவுகிறது. தமிழக ஓவியங்களில் பெண்களுக்கு முதன்மை இடம் அளிக்கப்பட்டுள்ளது. மன்மதன் எனும் தெய்வ அழகனின் மனைவியான இரதியின் ஓவியம் திருப்பரங்குன்றத்தில் இருந்ததாகக் குறிப்பு உள்ளது.

2.4.2 ஓவியச் செய்தி

ஓவியம் பேசுவது போல் இருக்க வேண்டும். ஏதோ ஒரு செய்தியை உணர்த்துவது போல் இருக்க வேண்டும். "தன்னைவிட்டுத் தன் கணவன் பிரிந்து போய்விடுவானோ என்று அஞ்சுகிறாள் ஒரு பெண். போகாதீர்கள்! என்று சொல்ல நினைக்கிறாள். வாய் வரவில்லை ஆனால் அவள் நிற்கும் நிலையும் கண்ணில் இழையோடும் சோகமும் அந்தக் கருத்தை 'ஓவியச் செய்தி' போல உணர்த்தியதாகப்" புலவர் ஒருவர் பாடுகின்றார். ஓவியம் ஒரு கதை சொல்வதாக அமையலாம்; ஒரு நீதியை அறிவுறுத்துவதாகவும் அமையலாம்.

2.4.3 ஓவியரும் ஓவியங்களும்

தமிழக ஓவியங்களில் பழைமையானவை காஞ்சி கயிலாசநாதர் கோயில் ஓவியங்களும், பனைமலைக் கோயில் ஓவியங்களும், சித்தன்னவாசல் குகைக் கோயில் ஓவியங்களும், திருமலைப்புரம், மலையடிப்பட்டி ஓவியங்களும், தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் ஓவியங்களும் ஆகும்.

Kanchi Kailasanathar Oviyam
காஞ்சி கயிலாசநாதர்

Sittannavasal_Oviyam
சித்தன்னவாசல்
குகைக் கோயில் ஓவியம்

Tanjavur_oviyam

தஞ்சைக் கோயில்
ஓவியம்

Panaimalai_oviyam

பனைமலைக்
கோயில் ஓவியம்

கி.பி. 600க்கு முற்பட்ட கோயில்கள் செங்கல், மரம், சுண்ணாம்பு ஆகியவற்றால் கட்டப்பட்டவை. அவை அழிந்துபோய் விட்டன. அவற்றில் வரைந்த ஓவியங்கள் பற்றியும் நமக்குச் செய்திகள் கிடைக்கவில்லை. நமக்குக் கிடைப்பனவற்றுள் காலத்தால் முற்பட்டது சித்தன்ன வாசல் ஓவியமே! அரசன் அரசி ஓவியம், தாமரைப் பொய்கை ஓவியம் ஆகியன அழகுமிக்கவை. அவையும் இன்று மெல்ல அழிந்து வரும் நிலையில் உள்ளன. இந்த ஓவியங்களைத் தீட்டிய ஓவியர்களைப் பற்றிய செய்தி ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. எனினும் கேவாத பெருந்தச்சன், குணமல்லன் சாத முக்கியன், கலியாணி, கொல்லன் சேமகன், இராசராசப் பெருந்தச்சன் போன்ற பெயர்கள் மட்டும் அறியப்படுகின்றன.