4.2 சைவநெறி வளர்த்த பண்புகள்

AudioE

சைவ சமயத்தினர் கொல்லாமையைப் பெரிதும் போற்றினர். புலால் உணவை மறுத்தவர் சைவர் என இன்றும் கூறப்பெறுவதைக் காணலாம். சைவம், சாதி வேற்றுமை, தீண்டாமை ஆகியவற்றுக்கு இடம் தரவில்லை. இவற்றைச் சைவர் தீமைகள் எனக் கருதி ஒதுக்கவும் செய்தனர். சிவபெருமான்மீது அன்பு செலுத்தும் அடியவர்களிடையே எந்தப் பாகுபாடும்
இல்லை என்பது சைவர் கொள்கையாக இருந்தது. வைதிக நெறி பரப்பிய கோத்திரம், வருணம் ஆகியவற்றுக்குச் சைவ சமயம் இடம் கொடுக்கவில்லை. இறைவன் ஒருவன். அவனை அன்பு நெறியால் அடையலாம்; இறைவன் அருளால் பிறவிப் பிணியிலிருந்து விடுபடலாம் என்பது சைவ சமயத்தின் மெய்ப்பொருளாகும். சைவம் பெண்களுக்கும் உரிமை கொடுத்தது. பெண்களும் முத்தி அடைய முடியும் என்று சைவம் கற்பித்தது.

4.2.1 சாதி வேற்றுமை கருதாத சைவம்

Thirugnanasambandar
திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர் பிறப்பால் பிராமணர். நந்தனார் தாழ்த்தப்பட்டவர். சேரமான் பெருமாள் அரசர். கண்ணப்பர் வேடர். இவர்களிடையே எந்தவித வேறுபாட்டையும் சைவம் கற்பிக்கவில்லை. நந்தனாரின் அன்பின் பெருமையை இறைவன் தில்லைவாழ் அந்தணர்களுக்கு உணர்த்துகிறான். கண்ணப்பர் என்ற வேடர் பற்றிச் சிவகோசரியார் என்ற முனிவரிடம் சிவபெருமான் கூறும்போது “அவனுடைய வடிவம் எல்லாம் அன்பு; அவனுடைய செயல் எல்லாம் நமக்கு இனியது என்று கூறுகிறார். கண்ணப்பரைப் போல இறைவனிடம் அன்பு செலுத்த யாரால் முடியும் என்று முற்றும் துறந்த பட்டினத்தார் கூறுகின்றார். மனிதர்களைச் சாதியால் பிரித்துப் பார்க்காதது சைவம். சுந்தரர் அந்தணர் குலத்தில் பிறந்தார்; அரசரால் வளர்க்கப்பட்டார்; வேறு குலத்துப் பெண்களைத் திருமணம் செய்து கொண்டார்.

4.2.2 எது மெய்ப்பொருள்?

Kannappar
கண்ணப்பர்

உலகில் உண்மையான பொருள் ஒன்றே! அது சிவம் என்பது சைவர்களின் கொள்கையாகும். உயிர்கள் தாம் செய்யும் பாவபுண்ணியங்களுக்கு ஏற்பப் பிறவிகளைப் பெறுகின்றன. இறைவனைத் தொழுது தீவினை தவிர்த்து உயிர்கள் பிறப்பு நீங்கலாம் என்று சைவம் கூறுகின்றது. வினையை ஒருவன் அனுபவித்தே ஆகவேண்டும். "பிறவாமை வேண்டும்; வினை காரணமாக மீண்டும் பிறப்பு இருந்தால் இறைவனை மறவாத நெஞ்சம் வேண்டும்" என்பதே அடியவர்களின் வேண்டுகோளாக இருந்தது. அழுதும் தொழுதும் இறைவனை வேண்டி அவன் அருளைப் பெறலாம் என்பது அடியவர்களின் நம்பிக்கை. சிவத்தை உணரும் ஞானமே மெய்யறிவாகும். அந்த ஞானம் வீடுபேற்றைத் தரும் என அடியவர் கருதினர்.


4.2.3 பெண்மையைப் போற்றிய சைவம்

isaiyaniyar.jpg (6639 bytes)
இசைஞானியார்

சைவ உலகில் பெண்களை இழிவாகக் கருதும் நிலை இல்லை. பரவையார், சங்கிலியார், இசை ஞானியார், காரைக்காலம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகியோர் சைவம் வளர்த்த பெண்மணிகள். காரைக்காலம்மையார் இறைவனின் அருள் பெற்றவர். இறைவன் ஆடும்போது அந்த ஆடலுக்குரிய பாடலைப் பண்ணோடு இசைத்த மூதாட்டி. சைவக்கோயில்களில் உள்ள 63 நாயன்மார்களின் உருவச் சிலைகளைப் பார்த்திருக்கிறீர்களா?

Karaikaalammiayar

காரைக்காலம்மையார்

Mangiarkarasiyar
மங்கையர்க்கரசியார்

எல்லோரும் நின்று கொண்டிருக்கக் காரைக்காலம்மையார் உட்கார்ந்திருப்பார். இறைவன் இவரை அம்மையே! என அழைத்தான். மங்கையர்க்கரசியார் பாண்டியனின் மனைவி. இவரைத் திருஞான சம்பந்தர் “மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மட மானி பங்கயச்செல்வி பாண்டிமாதேவி என்று பாடுகின்றார். செம்பியன்மாதேவி என்ற சோழர்குல அரசி சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டிய பெருமைக்கு உரியவர். இவர் பெயரால் தமிழகத்தில் ஓர் ஊர் உள்ளது.