மதுரையில் பாண்டியப் பேரரசு மறைந்தபின், மதுரை டில்லி சுல்தானின் ஆட்சிக்கு உட்பட்டது. டில்லி சுல்தானின் பிரதிநிதியாய் மதுரையில் இருந்து அரசாண்ட சுல்தான், டில்லியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, முழுஉரிமை பெற்ற மன்னர் ஆனார். மதுரையில் முஸ்லீம் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. விஜயநகரத்தில் நாயக்கராட்சி ஏற்பட்ட பின் இரண்டாம் கம்பணர் என்ற நாயக்க அரசர், மதுரையின் மீது படையெடுத்துக் கைப்பற்றிச் சுல்தான் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார். கம்பணருக்குப் பின் இரண்டாம் ஹரிஹரர் காலத்தில் (1377-1404) மதுரையில் முஸ்லீம் ஆட்சி அறவே அகன்று நாயக்கர் ஆட்சி ஏற்பட்டது. நாயக்கர் என்ற சொல் தலைவன், படைத்தலைவன் என்ற பொருளுடையது. விஜயநகரத்தின் அரசப்பிரதிநிதியைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் இஃது ஒரு சாதிப் பெயராக மாறிவிட்டது. நாயக்கர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். |