1.4 நாயக்கர் காலச் சமயம்

Audio Button

நாயக்கர்கள், வழிவழி வைணவர்களாயிருந்தாலும், மற்ற சமயங்களில் வெறுப்புக் காட்டவில்லை. மதுரை மீனாட்சி கோயிலுக்கு இவர்கள் மிகுதியாகச் செலவிட்டனர். அதை ஒரு சைவக் கோயில் என்று புறக்கணிக்கவில்லை. தில்லையில் பெருமாள் திருவுருவத்தை அகற்ற வேண்டும் என்று சைவர்கள் அறப்போராட்டத்தில் இறங்கியபோது, கிருஷ்ணப்ப நாயக்கர் தளராமல் நடவடிக்கை எடுத்துப் போராட்டத்தை ஒடுக்கினார். மதுரை நாயக்கர் காலத்தில், தென்கலை, வடகலை என்ற இரு வைணவப் பிரிவுகள் தங்களுக்குள் ஓயாது சண்டையிட்டுக் கொண்டன. நாயக்க மன்னர் இப்பிரிவுகளை வேறுபாடு கருதாமல் நடத்தினார். நாயக்கர் காலத்திலேயே, மதுரைவீரன் வழிபாடு தோன்றியது. திருமலை நாயக்கருக்குப் பின்பு, தமிழகத்தில் சக்தி வழிபாடு வலிமை பெற்றது. மீனாட்சியம்மனுக்குத் தனிச்சிறப்பு ஏற்பட்டது. மதுரையிலும், திருச்சியிலும் இசுலாமியர் அமைதியாக வாழ்ந்தனர். இசுலாமிய சுல்தான்களின் ஆட்சியில் இந்துக்கள் கொடுமைப்படுத்தப்பட்டபோதிலும், நாயக்கர் ஆட்சியில் இசுலாமியர் நன்கு பாதுகாக்கப்பட்டனர்.

நாயக்கர் காலத்தில், கிறித்துவர் சமயப் பிரசாரம் செய்யத் தடையில்லாமல் இருந்தது. பெர்னாண்டஸ் என்ற போர்த்துக்கீசியப் பாதிரியார், 1592-இல் மதுரையில் நாயக்க மன்னர் இசைவு பெற்று, முதல் மாதா கோயிலைக் கட்டினார். இராபர்ட்-டி-நொபிலி பாதிரியார், நாயக்கர் காலத்தில் பெரும் அளவில் இந்துக்களைக் கிறித்துவராக்கினார். கி.பி.1630இல் பாதிரிமார்கள் மதமாற்ற முயற்சியில் இறங்கியதற்காக மதுரையிலும் மறவர் சீமையிலும் மிகுதியும் துன்புறுத்தப்பட்டார்கள். திருமலை நாயக்கர் தலையிட்டுப் பாதிரிமார்களைக் காப்பாற்றினார்.

1.4.1 மதுரை மீனாட்சி கோயில்

c03131ks.jpg (7985 bytes)

கோபுரம்

இதோ, கம்பீரமான மதுரைக் கோபுரத்தைக் காணுங்கள்! தென்னிந்தியக் கட்டடக் கலைக்கும், சிற்ப ஓவியச் சிறப்புகளுக்கும், தெய்வீக அழகுக்கும் இடமான இந்தக் கோயிலின் பகுதிகளைக் காணுங்கள்! மீனாட்சி, சொக்கநாதர் சன்னதிகளில் பெரிய துவாரபாலகர் உருவங்களை திருமலை மன்னர் அமைத்தார். கொடிக்கம்பங்கள், பலிபீடங்கள் ஆகியன இவரால் அமைக்கப்பட்டன.

Kodikkambam

கொடிக்கம்பம்

 

நன்னுதல் அங்கயற்கண்ணி
      தனக்கு நலம்பெ றவே
உன்னதமாகும் கொடிக்கம்பம்
     மாபலி பீடமுடன்
சொன்னம் அளித்துப் பொன் பூசுவித்தான்
     சுகபோகன் எங்கள்
மன்னன் திருமலை பூபன்
     மதுரை வரோதயனே
Audio

c03131ms.jpg (5199 bytes)

மீனாட்சி

Thirumalai Nayakkar

திருமலை
மன்னர்


துவாரபாலகர்

என்று திருப்பணிமாலை என்ற நூல் திருமலை மன்னரின் கோயில் திருப்பணிகளைக் குறிக்கின்றது.

(நன்னுதல் = நல் நுதல் (நெற்றி), சொன்னம் = சுவர்ணம் (தங்கம்), வரோதயன் = வர+உதயன் (வரத்தின் பயனாகத் தோன்றியவன்), அங்கயற்கண்ணி = அம் கயல் கண்ணி (அழகிய கயல் மீனை ஒத்த கண்களையுடையவளாகிய மீனாட்சி)

கோயில் ஆட்சி, அபிடேக பண்டாரம் என்பவரிடம் இருந்தது. நிர்வாகம் சீர்கேடு அடைந்த நிலையில் இருந்தது. மீனாட்சி அம்மை 'திருமலை! என்னை ஒருவரும் கவனிக்கவில்லையே’ என நாயக்கர் கனவில் தோன்றிக் கூறினாராம். உடனே, மன்னர் தாமே கோயில் நிர்வாகத்தை ஏற்றுப் பல அறக்கட்டளைகளை ஏற்படுத்திக் கோயில் நிர்வாகத்தை ஒழுங்கு செய்தார்.

இதோ தருமிக்குப் பொற்கிழி அளித்த சோமசுந்தரர் திருக்கோயிலைக் காணுங்கள்! மாணிக்க மூக்குத்தி ஒளிவீசக் கிளியுடன் கொஞ்சும் எழில்மிகு மீனாட்சி அம்மையைக் காணுங்கள்! தெப்பக்குளம், ஆயிரங்கால் மண்டபம், முக்குறுணிப் பிள்ளையார், 124 சிற்பத் தூண்களைக் கொண்ட வசந்த மண்டபம் ஆகியன திருமலை மன்னரின் கோயிற்பணிகளுக்குச் சான்றுகளாகும்.

Mukuruni Vinayakar

முக்குறுணிப்
பிள்ளையார்

1000 pillar

ஆயிரங்கால்
மண்டபம்

Potramarai Kulam

தெப்பக்குளம்


1.4.2 திருவரங்கம்

c03131t1.jpg (5439 bytes)

ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளிக்குப் பக்கத்தே உள்ள வைணவத் தலமாகும். இத்தலமே தமிழில் திருவரங்கம் எனப்படும். ஆழ்வார்களால் பாடப்பெற்ற இத் திருத்தலத்தில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கிறார்.

ஏன் பள்ளி கொண்டீர் ஸ்ரீரங்க நாதரே? என்ற பாட்டு இறைவனை எண்ணித் துதிப்பார்க்கு இன்பம் தருவதாகும். திருமலை நாயக்கர்,  சொக்கநாத நாயக்கர், இராணி மங்கம்மாள், விஜயரங்க சொக்கநாதர் எனப் பலரும் திருவரங்கம் திருக்கோயிலுக்குப் பணி செய்துள்ளனர். நாயக்க மன்னர்களின் தலைநகரமாகத் திருச்சிராப்பள்ளி விளங்கியமையால், அதன் பக்கத்தில் இருந்த திருவரங்கம் அவர்களின் வழிபாட்டுத் தலமாக விளங்கியது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளின் வரலாற்றை, விஜயநகர வேந்தரான கிருஷ்ண தேவராயர் ஆமுக்தமாலியதா என்ற தெலுங்கு நூலாகப் படைத்துள்ளார். இன்றும் திருவரங்கத் திருக்கோயிலில், விஜயரங்க சொக்கநாதர் மற்றும் அவருடைய மனைவி மீனாட்சி திருவுருவங்கள் உள்ளன.

1.4.3 கிறித்துவ சமயம்

நாயக்கர் காலத்தில் கிறித்துவ சமயம் நன்கு பரவியது. கடற்கரை ஓரப் பகுதிகளில் டச்சுக்காரரும், போர்த்துக்கீசியரும், ஆங்கிலேயரும் ஆதிக்கம் செலுத்தியதை நாயக்க மன்னர்கள் தடுக்கவில்லை. இராபர்ட் டி நொபிலி பாதிரியாரும், வேறு சில பாதிரியார்களும், மதமாற்றம் செய்ததற்காகத் திருச்சிராப்பள்ளியில் சிறையில் அடைக்கப்பட்டனர்; துன்புறுத்தப்பட்டனர். அப்போது, திருமலை மன்னர் தலையிட்டுப் பாதிரியார்களைக் காப்பாற்றினார். மதமாற்றம் செய்வதைத் தடுக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டார். பாதிரிமார்களுக்குப் பரிசுப் பொருட்களை அளித்தார். சொக்கநாத நாயக்கர் காலத்திலும், இந்த ஆதரவு நீடித்தது. மாறாக மறவர் சீமையில் பிரிட்டோ பாதிரியார் கொடுமையாகத் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டார். மதுரையை விட்டுக் கிறித்துவர்களை வெளியேற்ற வேண்டுமென்று, இராணி மங்கம்மாளுக்குத் தஞ்சை அரசர் கடிதம் எழுதினார். அதற்கு மங்கம்மாள் “எப்படிச் சிலரை அரிசிச் சோறு உண்ணவும், வேறு சிலரை இறைச்சி தின்னவும் விடுகிறோமோ, அப்படி ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாகக் கருதும் மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ விடுவதே அறமாகும்” என்று பதில் எழுதினார். நாயக்கர் காலத்தில் கிறித்துவ சமயம் மற்ற சமயங்களைப் போன்றே சமநிலையில் நோக்கப் பெற்றது.


தன் மதிப்பீடு: வினாக்கள் - I

1. விசுவநாத நாயக்கர் நாட்டில் செய்த ஆட்சி முறை பற்றி எழுதுக.

2. திருமலை நாயக்கர் தலைநகரை எங்கிருந்து எங்கு மாற்றினார்? ஏன்?

3. திருமலை மன்னர் செய்த கோயில் பணிகளை எழுதுக.

4. சொக்கநாத நாயக்கரிடம் காணப்பெற்ற குறைபாடுகள் யாவை?

5. மங்கம்மாள் பெற்ற வெற்றிகள் யாவை?

6. நாயக்கர் காலச் சமய நிலை எத்தகையது?