1.5 நாயக்கர் காலக் கலை வளர்ச்சி

Audio Button

Oorthava Thandavam

சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை

நாயக்க மன்னர்கள், கலைகளில் ஈடுபாடு உள்ளவர்கள். தமிழ்நாட்டுக்கு அவர்களால் அருமையான கட்டடங்களும், சிற்பங்களும், ஓவியங்களும் கிடைத்தன. மிகப்பெரிய கோயில் மண்டபங்களும், துவாரபாலகர் சிலைகளும் இவர்களால் உருவாக்கப்பட்டன. தமிழகத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் 64 கோயில்களில் கோபுரங்கள் எழுப்ப முயன்று பணக்குறையாலோ வேறு காரணத்தாலோ திருப்பணிகள் நின்றுவிட்டன. மதுரை இராய கோபுரமும் அவற்றில் ஒன்றாகும். ஒரு சமயம் கல்லில் உருவம் செதுக்கிக் கொண்டிருந்த சிற்பி, தன் உதவியாளரிடம் வெற்றிலைச் சுருளுக்குக் கை நீட்டினான்.

Kali Nadanam

உதவியாள் எங்கோ போயிருந்தான். சிற்பத்தைப் பார்த்துக் கொண்டே பின்புறம் கையை நீட்டியபடி வெற்றிலை பாக்குக் கேட்டதை, அங்கு வந்த மன்னர் திருமலை கண்டு அவரே வெற்றிலைச் சுருள் மடித்துக் கொடுத்தார். அரசரே தனக்கு வெற்றிலை மடித்துக் கொடுத்ததை அறிந்த சிற்பி, தன் விரல்களை வெட்டிக்கொண்டான். மன்னர் அவ்விரல்களுக்கு மாற்றாகப் பொன்னால் விரல்கள் செய்து அளித்தார். இஃது உண்மையோ கதையோ, மன்னரின் கலை ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இச்செய்தி விளங்கக் காணலாம். மீனாட்சி கோயிலில் உள்ள பிட்சாடனர் சிலை, மோகினி வடிவம், காளியின் நடனம், சிவனின் ஊர்த்துவ தாண்டவச்சிலை போன்றவற்றை வேறு எங்கும் காண இயலாது. ஆயிரங்கால் மண்டபத்தில் இருக்கும் அரிச்சந்திரன், குறவன், குறத்தி சிலைகள் அற்புதமானவை.


கலைகள் வளர்ந்தன. கட்டடம், சிற்பம், ஓவியம், இசை ஆகிய கலைகளில் பலர் வல்லவராய் இருந்தனர். தெலுங்கு இசை, நாட்டில் பரவியது. தெலுங்குப் பண்பாட்டுக் கூறுகள் தமிழர்க்கு அறிமுகமாயின. கோயில்கள், பண்பாட்டின் கருவூலங்களாகத் திகழ்ந்தன. நாயக்கர் காலச் சிற்பங்கள், திராவிடச் சிற்ப இலக்கணம் பொருந்தியவை. இவை அளவில் பெரியன. மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை.

Kurathi Kuravan Kuravan
குறத்தி குறவன் அரிச்சந்திரன்

1.5.1 திருமலை நாயக்கர் மகால்

Thirumalai Nayakkar Mahal

சொர்க்க விலாசம்

ஓ! எவ்வளவு பெரிய மகால் என்று பார்த்து அதிசயப்படுகின்றீர்களா? வேண்டாம்! திருமலை மன்னர் கட்டியதில் நான்கில் ஒருபகுதிதான் இப்போது உள்ளது. எஞ்சிய பகுதிகள் இடிக்கப்பட்டுவிட்டன. இது இத்தாலிய நாட்டுச் சிற்பியால் வரைபடம் வரைந்து அமைக்கப்பட்டது. இதோ இந்த மகாலில் இன்று எஞ்சியுள்ள சொர்க்க விலாசம் என்ற பகுதியைப் பாருங்கள்! 40 அடி உயரமுள்ள வழுவழுப்பான சுதைத்தூண்கள் தாங்கும் மண்டபத்தைக் காணுங்கள். இதுதான் அரசர் அரியணையில் இருந்து ஆட்சி செய்த இடம். இரண்டு குதிரைச் சிற்பங்கள் அழகு செய்யும் படிகளைக் கடந்து இந்த இடத்தை அடையலாம். ஆண்டுதோறும் அங்கயற்கண்ணி அம்மையிடம் செங்கோலைப் பெற்றுவந்து மன்னர், இந்த மண்டபத்தில் உள்ள அரியணையில் அமர்வது வழக்கம். நவராத்திரி விழாவின்போது, ஒன்பது நாள்களிலும் இந்தச் சொர்க்க விலாசத்தில் மன்னர் கொலு இருப்பார். பழுதடைந்த இந்தப் பளிங்கு வண்ண மாளிகையை கி.பி. 1868இல் நேப்பியர் பிரபு, மூன்று இலட்ச ரூபாய் செலவு செய்து பாதுகாத்தார்.


Thirumalai Nayakkar Mahal Thirumalai Nayakkar Mahal
மகால் முகப்பு தூண்கள்

1.5.2 இலக்கியம்

நாயக்கர்கள் காலத்தில் சிற்றிலக்கியங்கள் பெருகின. திருமலை மன்னர், தெலுங்கையே ஆதரித்தார். எனினும் இவருடைய அவையில் குமரகுருபரர் பாடிய போது, மீனாட்சியம்மையே குழந்தை வடிவாக வந்து கேட்டதாக ஒரு கதை உண்டு. குமரகுருபரர் மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம் ஆகிய இரு நூல்களை மீனாட்சியின் மீது பாடினார். அதிவீரராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர் என்ற சிற்றரசச் சகோதரர்கள், திருக்குருகைப்பெருமாள் கவிராயர், இராபர்ட் டி நொபிலி பாதிரியார், பிள்ளைப் பெருமாள் ஐயங்கார், சுப்பிரதீபக் கவிராயர், வீரமாமுனிவர், உமறுப்புலவர், திரிகூடராசப்பக் கவிராயர் ஆகியோர் நாயக்கர் காலத்தில் வாழ்ந்து இலக்கியம் படைத்த புலவர்களாவர்.