3.4
ஐரோப்பியப் பண்பாட்டின் பங்களிப்பு |
|
தமிழகத்திற்கு வந்த ஐரோப்பியர் பலரும் தமிழர்
பண்பாட்டால் ஈர்க்கப் பெற்றனர். தமிழ்நாட்டின் உணவு,
உடை
ஆகியன ஐரோப்பியரைக் கவர்ந்திருக்கின்றன.
போப்பையரைத்
திருக்குறள் நெறிகளும் திருவாசகம் காட்டும்
இறையன்பும்
பெரிதும் கவர்ந்தன. தமிழ்நாட்டு
நிலப்பின்னணியில் இயேசுவின்
வரலாற்றைப் புனைந்து
பாடினார் வீரமாமுனிவர். தமிழ்நாட்டுத்
தெய்வ
வடிவங்களில் நடராசர் வடிவம் ஐரோப்பியரைப் பெரிதும்
கவர்ந்தது. போப்பையர் தம்மை ஒரு தமிழ் மாணவன் என்று குறித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி
அடைந்தார். இல்லறநெறியில் ஆண், பெண் கொண்டிருந்த விலக்கிக் கொள்ள முடியாத
உறவு ஐரோப்பியரைக் கவர்ந்தது.
3.4.1
நன்மையும் அறிவும் எத்திசையது ஆயினும்
ஏற்புடையனவே
இந்தியா முழுவதும் தோன்றிய விடுதலைக் கிளர்ச்சியை
முன்னெடுத்துச் செல்வதில் தமிழகம் தன்
பங்கை உரிய
வகையில் ஆற்றியது. இந்த நிலையில்
தமிழர்களுக்கு அந்நியப்
பொருள்கள், அந்நியத் துணி,
அந்நிய நாகரிகம் ஆகியவற்றில்
ஒரு மோகம் பிறந்தது.
மேற்றிசை வாழும்
வெண்ணிற மாக்களின்
செய்கையும் நடையும் தீனியும் உடையும்
கொள்கையும் மதமும் குறிகளும் நம்முடை
யவற்றிலும் சிறந்தன ஆதலின் அவற்றை
முழுதுமே தழுவி மூழ்கிடின் அல்லால்
தமிழச்சாதி தரணிமீ திராது |
 |
என்று ஒருசாராரும், வேற்று நாகரிகம், வேற்றவர் பொருள்
எதனையும் ஏற்கலாகாது என ஒருசாராரும் போரிட்டு
நாட்டைக் கெடுத்தனர் என்பர் பாரதியார். நன்மையும் அறிவும்
எந்தத் திசையிலிருந்துவரினும் அவற்றை ஏற்றுக்
கொள்ளலே
தருமமென்பர் அவர். இதுவே தமிழ்ப் பண்பாடாக இருந்தது. தன் விழுமிய நாகரிகக்
கூறுகளை அயலவர்களுக்குக் கொடுத்தும், பிறரிடமிருந்து கொள்வன கொண்டும்
உயிர்ப்பு அறாமல் தழைத்தது தமிழ்ப் பண்பாடு.
3.4.2
புதிய இலக்கிய வடிவங்கள்
ஐரோப்பியர்களின் வரவால் தமிழர் பண்பாட்டை
வெளிப்படுத்தும்
சிறுகதை, நாவல், உரைநடை, நாடகம்,
மேடைநாடகம் எனப் பல புதிய இலக்கிய வடிவங்கள்
தோன்றின. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, இராஜமய்யர்,
மாதவையா போன்றோர் தமிழர்
வாழ்வியலை இந்த இலக்கிய வடிவங்களில் சித்திரித்தனர். இவற்றின்வழி
1. பெண் அறிவும் ஆற்றலும் உடையவள்.
2. குடும்பப் பண்பையும் தமிழினப் பண்பையும் கட்டிக் காப்பவள் பெண்.
3. நீதிநெறிகளை யாரும் மறந்துவிடக்கூடாது.
4. நல்லோர் துன்பப்பட்டாலும் இறுதியில் இன்பம் எய்துவர்.
5. தெய்வம் நல்லோரைக் காக்கும்.
என்பன போன்ற கருத்துகள் சித்திரிக்கப்பட்டன. சமூகக் கேடுகளாக அக்காலத்திலிருந்த
தீண்டாமை, மது அருந்துதல், சாதிக் கட்டுப்பாடு ஆகியவற்றை எதிர்த்துச் சிறுகதைகள்
தீட்டப்பெற்றன. இந்திய விடுதலைக் கருத்தையொட்டிப் பல
நாடகங்கள் எழுதவும் நடிக்கவும் பெற்றன. சமூகச் சீர்திருத்த
உணர்வும் நாட்டு விடுதலை உணர்வும் வெள்ளமெனப் பொங்கிப் பரவின.
3.4.3
சமூகச் சீர்திருத்தங்கள்
ஐரோப்பியர் வரவால் பெருகிய கல்வியின் காரணமாகத்
தமிழக இளைஞர்களிடையே கட்டுக்களிலிருந்து விடுபடும் ஒரு
மனநிலை உருவாகிற்று. வருணாசிரமம் அறிவுக்குப்
பொருத்தமற்றது என்பதை உணர்ந்தனர். சாதிக் கலப்புமணங்கள், கைம்பெண் மணம் ஆகியன
மேற்கொள்ளப்பட்டன.
அக்கால உலகிருட்டைத்
தலைகீழாக்கி
அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்
இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்
இருட்டுக்கு முன்னேற்றம் ஆவதன்றிப்
புக்கபயன் உண்டாமோ? |
 |
என்று பாரதிதாசன் குறிப்பது போல் வருணாசிரமத்தை
எதிர்த்துக் கொடி தூக்கப்பட்டது. இந்தியாவிற்கு விடுதலை
வேண்டுமெனில் எல்லோரும் வேற்றுமை துறந்து ஒன்றுபட
வேண்டுமென்பது வற்புறுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள்
அடைந்த
கொடுமை ஒவ்வொன்றும் சமூக வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதன் உச்சநிலையைச் சித்திரிப்பதாக
வைக்கம் போராட்டம் அமைந்தது. தாழ்த்தப்பட்டவர்கள்
கோயிலுக்குள் நுழையும் உரிமை வேண்டி இப்போராட்டத்தை
முன்னின்று நடத்தினார் பெரியார் ஈ.வே.இராமசாமி.
தமிழ்நாட்டில் சோழவந்தான் காந்தி ஆசிரமத்தில் பயின்ற
பார்ப்பன மாணவர்களுக்கும், ஏனைய மாணவர்க்கும்
தனித்தனித் தண்ணீர்ப் பானைகள் வைப்பதைக்
கண்டிப்பதில்
பெரியார் முன்நின்றார். பின்னர் இவர்
காங்கிரசிலிருந்து
விலகி நீதிக்கட்சியைச் சார்ந்து,
பின் சுயமரியாதை
இயக்கத்தைத் தொடங்கித் திராவிடர் கழகம் என்ற
இயக்கத்தைக் கண்டார். ஓமகுண்டம்,
தாலிக்கயிறு, வடமொழி
மந்திரம், சடங்குகள் இல்லாமல் மாலை
மாற்றிக்கொள்ளும்
சீர்திருத்தத் திருமணத்தை
இவர் வழக்கத்திற்குக் கொண்டு
வந்தார். 3.4.4 பொது
வாழ்வில் பெண்களின் பங்கு
ஐரோப்பியப் பண்பாட்டின் தாக்கம்
பெண்ணிய
வளர்ச்சிக்கு வித்திட்டது. ஆங்கிலக் கல்வியின் பயனைப்
பெறுவதில் பெண்களும் பங்கு
கொண்டனர். ஆணுக்குப்
பெண் நிகர் என்ற உணர்வு பிறந்தது.
விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பலவற்றில்
பெண்களும் கலந்து கொண்டனர்;
முன்னின்று இயக்கங்களை நடத்தியும் சென்றனர்.
தென்னாப்பிரிக்காவில் இந்திய மக்களின் குடியுரிமைப்
போரைக் காந்தியடிகள் தலைமை ஏற்று
நடத்தினார்.

தில்லையாடி வள்ளியம்மாள் |
தில்லையாடி வள்ளியம்மாள்
என்ற தமிழ்ப்பெண் அப்போராட்டத்தில்
கலந்துகொண்டு சிறை சென்றார். அவரின்
தியாகமும் நெஞ்சுரமும் அண்ணலைப் பெரிதும்
கவர்ந்தன. அவரைத் தம் பொதுவாழ்க்கையின் வழிகாட்டி என அண்ணல்
பின்னர் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில்
ஈரோடு நாகம்மை என்ற அம்மையார் விடுதலைப் போராட்டத்தில் ஒரு பெண் தலைவியாகப் பெரும்பங்கு ஆற்றினார். தென்னாட்டில் போராட்டம் நிகழ்த்த வேண்டும் என்றால் நாகம்மையாரைக் கேட்டுத்தான்
கூறவேண்டும் என்று காந்தியடிகள் அவரின் தலைமையைப் பாராட்டியுள்ளார். |