4.2 போராட்ட நெறிகள்

Audio Button

தமிழகத்தில் தொன்று தொட்டு வந்தது அகிம்சை நெறி. சமண பௌத்த சமயங்களின் வரவாலும், சைவ சமயப் போதனையாலும், கொல்லாமை, புலால் உண்ணாமை ஆகியன பரவியிருந்தன. இன்னா செய்தார்க்கும் இனிய செய்யுமாறு திருக்குறள் அறிவுறுத்தியது. இந்தக் கொள்கைகளை உயிராகக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்குக் காந்தியடிகள் போதித்த அகிம்சை நெறி மிகவும் ஏற்புடையதாக இருந்தது. அது என்ன அகிம்சை என்று கேட்கின்றீர்களா? இதோ கவிஞர் நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை கூறுகின்றார் பாருங்கள்!

குத்தீட்டி ஒருபுறத்தில் குத்த வேண்டும்
     கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி
     நாற்புறமும் பலர்உதைத்து நலியத் திட்ட
அத்தனையும் நான் பொறுத்தே அகிம்சை காத்தும்
     அனைவரையும் அதைப் போல நடக்கச் சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்து உதட்டில் சிரிப்பி னோடும்
     உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்த ஆசை

Audio Button

என்று கூறுகிறார். தன்னை வருத்திக் கொண்டு பிறரைத் திருத்துவதே அகிம்சை நெறி. அன்னி ஞிமிலி என்ற சங்ககாலப் பெண் அரசரின் கொடுமைகளை எதிர்த்து உண்ணா நோன்பால் அரசர் மனத்தை மாற்றினார். இந்த உண்ணா நோன்பு அறமே காந்தியடிகளால் ஒரு பெரிய ஆயுதமாகக் கொள்ளப்பட்டது.

4.2.1 அந்நியத் துணி மறுப்பு

இந்தியத் துணி தமிழகத்திலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் 17ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

'லெக்கி' என்ற இங்கிலாந்து வரலாற்று ஆசிரியர் என்ன சொல்கிறார் தெரியுமா?

“பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில் பலவித இந்தியத் துணிகளும் சிறப்பாக மஸ்லின்களும் இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. அவை அந்நாட்டில் கம்பளமும் பட்டும் நெய்வோரைக் கதிகலங்கச்  செய்தன.      1700-இலும் 1721-இலும் பார்லிமெண்ட்டில் சட்டங்கள்  இயற்றப்பட்டு இந்தியத் துணிகள் தடுக்கப்பட்டன."

Rattinam

இந்த நிலை மாறி இந்தியாவிலிருந்து பருத்தியைக் கொண்டுபோய் மான்செஸ்டர் நகரில் ஆடையாக்கி இந்தியச் சந்தைக்குக் கொண்டுவரும் நிலை தோன்றியது. கிளைவ் இந்தியா வந்தபோது இங்கிலாந்து 74,575,000 டாலர் கடனில் இருந்தது. இந்தியச் சந்தையில், இந்தக் கடன் நீங்கி இங்கிலாந்தில் செல்வம் கொழித்தது. இந்த நிலையை மாற்றவே கதர் இயக்கம் தோன்றியது. கையால் நூற்றுக் கையால் நெய்த ஆடையைப் பலரும் ஏற்றனர். அந்நியத்துணியை மக்கள் வெறுத்து ஒதுக்கினர். இதனால் இங்கிலாந்தின் பொருளாதாரம் நலிந்தது.

4.2.2 ஒத்துழையாமை

ஆங்கிலேயரின் சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துப் போவதில்லை என்ற இயக்கம் தோன்றியது. தமிழகத்தில் இந்த ஒத்துழைப்பு மறுப்பு நன்கு நடைபெற்றது. 1919 ஏப்ரலில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது.

நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை
     நெறியினால் இந்தியாவிற்கு
வரும் கதி கண்டு பகைத்தொழில் மறந்து
     வையகம் வாழ்க நல்லறத்தே!

Audio Button

என்று இந்த ஒத்துழையாமை இயக்கத்தை பாரதியார் வாழ்த்துகிறார். இளைஞர்களே! கல்லூரிகளை விட்டு வெளியேறுங்கள்! வழக்கறிஞர்களே! நீதிமன்றங்களை விட்டுவிலகுங்கள்! மக்கள் பிரதிநிதிகளே! சட்டசபைகளைப் புறக்கணியுங்கள் என்று காந்தியடிகள் கூறியதை ஏற்றுத் தமிழகத்தில் பலர் ஒத்துழையாமைப் பணியில் ஈடுபட்டனர். பலர் தாம்பெற்ற பட்டங்களைத் துறந்தனர். இந்நிலையில் காங்கிரசிலிருந்து சிலர் பிரிந்து சட்டசபைக்குள் நுழைந்து போராடலாம் என்று முயன்றனர். அம்முயற்சி தோல்வியுற்றது. வெள்ளையர் ஆட்சி தந்த பல நன்மைகளைத் தமிழக இளைஞர்கள் வெறுத்து ஒதுக்கினர்.

4.2.3 உப்பு அறப்போர்

c03134ds.jpg (5095 bytes)

உப்புச் சத்தியாக்கிரகம்

உப்புச் சத்தியாக்கிரகம் என்ற புகழ்பெற்ற அறப்போரைக் காந்தியடிகள் வட இந்தியாவில் 'தண்டி' என்ற இடத்தில் நடத்தினார். உப்புக்கு வரிவிதித்ததைக் கண்டித்து எழுந்த இந்தப் போராட்டம் தமிழகத்திலும் நிகழ்ந்தது. போராட்டத்திற்குத் தலைமை தாங்கி மூதறிஞர் ராஜாஜி நடைப்பயணத்தைத் தொடங்கினார்.

வேதாரணியத்தில் உப்புக் காய்ச்ச முயன்று கைதாயினர் பலர். 1930இல் திருச்சியிலிருந்து வேதாரணியத்திற்குப் புறப்பட்ட நடைப்பயணத்தில் பாடப்பெற்ற பாட்டை நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியிருந்தார்.

கத்தியின்றி ரத்தமின்றி
     யுத்த மொன்று வருகுது
சத்தியத்தின் நித்தியத்தை
     நம்பும் யாரும் சேருவீர்!

Audio Button

என்று தொடங்கும் அந்தப் பாட்டு வரலாற்றுப் புகழ் பெற்றதாக விளங்கியது.