6.5
வாழும் பண்பாடு : சில காட்சிகள் |
|
தமிழ்ப் பண்பாடு என்றும் அழியாது! ஏன்? உலகில் எங்கெல்லாம்
மனிதநேயம் நிலவுகிறதோ அங்கெல்லாம் தமிழ்ப் பண்பாடு நிலவும். எங்கெல்லாம்
பகைவனுக்கு அருள்வாய் என்ற உணர்வு பிறக்கிறதோ அங்கெல்லாம் தமிழர் பண்பாடு
இருக்கும். தனக்கு இருக்கும் ஒரு கவள
உணவைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டுத் தான் பசியாற நினைக்கும் நினைவு
எங்கு இருக்கிறதோ அங்கே தமிழன் குணம் இருக்கும். புகழோடு இறக்கவேண்டுமென்ற
துடிப்பு எங்கே வாழ்கிறதோ அங்கே தமிழ்ப்பண்பு
வாழும். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மலர்ந்து மணம் வீசிய
பண்பு மாறிவிடுமா? மாறாது! அப்பண்பாடு தமிழர் குருதிக்குள் புதை நினைவில்
புலப்படாமல் இருக்கும். அப்பண்பாட்டு மரபில் பிறந்தவன் சூழ்நிலையால்
திருடனாக மாறினாலும் ஏழை வீட்டில் திருட மாட்டான்; செல்வனிடம் கவர்ந்த
பொருளைத் தன்னைப் போன்ற ஏழைகளுக்குப் பங்கிடுவான். அவன் போரிலே ஈடுபட்ட
போதும் கண்டவர் மார்பில்
எல்லாம் வாளைச் செருக மாட்டான். தன்னைவிட மூத்தவர்
அல்லது இளையவர் மார்பை அவன் வாள் தீண்டாது.
புத்தரின் எளிமை, மகாவீரரின் உறுதி, இயேசுவின் இரக்கம், முகமதுவின் தோழமை,
நாயன்மார்களின் மனிதநேயம், ஆழ்வார்களின் இயற்கை அன்பு ஆகியன எல்லாம்
தமிழனின் பண்புகளே.
அவை எங்கெங்கே இருந்தாலும் அவை அடிப்படையில் தமிழர் பண்பாட்டின் உயிர்ப்புகளே
ஆகும்.
உன்னதக்
காதல்

|
எவ்வளவு வெட்கம் இந்தப்
பெண்ணுக்கு! தன்னோடு வாழ்ந்து
பிள்ளைகளைப் பெற்று வயதான
இந்தக் கணவனை இந்த வயதான
பெண் பிறர் முன்னிலையில்
அத்தான் என்று உறவு முறை
சொல்லி அழைப்பதற்கும்
கூசுகின்றாளே! |
இதோ சிலந்திக்
கூடு கட்டியது போல்
முகம் சுருங்கிக் கண்
பார்வை மழுங்கிக் கூனல் விழுந்த கிழவி கொல்லைப் பக்கம்
உட்கார்ந்திருக்கிறாள். இவளுடைய கணவன், காதலன், உயிர்த்
தலைவன் தெருத் திண்ணையில். என்ன சொல்கிறான் இந்தக்
கிழவன்?
புதுமலர் அல்ல;
காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு
சதிராடும் நடையாள் அல்லள்
தளர்ந்து விழும் மூதாட்டி!
மதியல்ல முகம் அவட்கு!
வறள்நிலம்; குழிகள் கண்கள்
எதுஎனக்கு இன்பம் நல்கும்?
இருக்கின்றாள் என்ப தொன்றே! |

|
இருக்கின்றாள் என்றாலே போதுமாம். உடம்பைத் தாண்டி,
ஐம்புலன்களைத் தாண்டி, ஆன்மாக்களின் சங்கமமாய்
விளங்கும் இந்த
உன்னதக் காதல்தான் தமிழ்ப் பண்பாட்டின்
வேர்!
மாற்றங்களின்
ஊடே ஒரு நிலைபேறு
வேட்டியும் துண்டும் விடை
பெற்றுக்கொண்டிருக்கின்றன.
சேலையும் மேற்சட்டையும் அளவு குறைந்து 'சுடிதார்'
கவுனாய், குட்டைப் பாவாடையாய், வண்ணச் சராயாக
மாறிக்கொண்டிருக்கின்றன. தாம்பூலச் சிவப்பை 'லிப்ஸ்டிக்'
பிடித்துக் கொண்டது.
 |
குதி உயர்ந்த செருப்பால் நடைமாறிக் கொண்டிருக்கிறது.
வேர்க்கின்ற கோடையிலும் இறுக்கும் 'டை'யை அவிழ்க்க மனம் இடம் கொடுக்கவில்லை.
தொலைபேசியில் ஒரு ஹலோ; அம்மாவை மம்மியாக்கும் அன்பு; ஆசையாய்ப் படிக்க ஒரு 'இங்கிலீஷ்
மீடியம்'; கொச்சையாய்ப் பிழையாய்க் கொஞ்சம் தமிழ். இப்படி ஒரு மாற்றம்
ஏற்பட்டபோதும், இந்தப் போர்வைகளுக்கெல்லாம் உள்ளே உள்ளத்தின் அடித்தளத்தில் தமிழ்ப்
பண்பாடு கொலுவிருக்கத்தான் செய்கிறது. இதோ இந்த உள்ளத்தை அசைக்க |
அம்மையே அப்பா
ஒப்பிலா மணியே!
அன்பினில் விளைந்த ஆரமுதே!
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே!
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே! |

|
என்ற ஒரு பாட்டுப் போதாதா? இப்பாட்டில் உள்ள சமயக்
கருத்து உலகின் பல
மூலையிலும் உள்ள தமிழனை
உலுக்கவில்லையா? அன்பினுக்கு இரங்கும் ஒரு எளிய தமிழ்
உள்ளம் கசிந்து நிற்கும் அந்த
உருக்கம் எந்த மனிதனையும்
அசைக்குமே! மாற்றங்களுக்கு நடுவில் தமிழ்ப் பண்பாடு
அடித்தளத்தில் பெரிய
மாற்றமின்றி இருக்கிறது.
பண்பாட்டு
வங்கியில் புதிய ஆக்கங்கள்
தமிழன் இன்று உலக மனிதனாக உருவெடுத்திருக்கிறான்.
அவனுடைய அறிவு அகன்றுள்ளது. பல்துறை வித்தகத்தை
எல்லாம் அவன் தமிழில் கொண்டுவர
முயல்கின்றான்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா நாடுகளில்
தமிழர்கள் ஆயிரக்கணக்கில் குடியேறி அந்தந்த
நாடுகளின்
பொருளாதார அச்சாணியாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அவனுடைய வாழும் எல்லை மிகப் பெரிதாகி இருக்கிறது;
அவனது சிந்தனை வீச்சு
துருவங்களை அசைக்கிறது. இவ்வாறு
தமிழன் தன் பண்பாட்டு வங்கிக்குப் பல ஆக்கங்களைச்
சேர்த்து வருகிறான். |