|
1.3 அரசும் அரசனும் |
மன்னர்களைப்
பற்றியும், அவர்கள் நாட்டை
ஆண்டபொழுது இயற்றிய
ஆணைகளைப் பற்றியும் கல்வெட்டுச்
செய்திகள் பல கிடைத்துள்ளன.
|
1.3.1
அரசு ஆணைகள் |
கோயில்களில் அக்கோயில்கட்குக் கொடுத்த
கொடைகளை
மட்டும் அன்றி, அரசனுடைய ஆணைகளையும், ஊர்ச்சபையும்
நாட்டுச் சபையும் அவ்வப்போது நிறைவேற்றும் முக்கிய
தீர்மானங்களையும் வெட்டி வைத்தனர்.
|
• கல்வெட்டில் காணும் அரசு ஆணைகள்
|
ஆண்டுதோறும் ஊர்க் குளத்தைத்
தூர் வார வேண்டும்;
குறிப்பிட்ட பகுதிகளில் ‘உயிர்’ உள்ள மரத்தை வெட்டக் கூடாது,
தாழ் குடிகள் என்று கூறப்படுவோர் ஊருக்குள் செருப்பு அணிந்து
வரலாம்; அவர்கள் வீடுகட்குக் காரை பூசிக் கொள்ளலாம்.
நன்மை தீமைக்குப் பேரிகை உள்ளிட்டன கொட்டுவித்துக்
கொள்ளலாம்; அநியாயம் அழிபிழை செய்தாரை வெட்டியோ
குத்தியோ கொன்றால் தூக்குத் தண்டனை (தலை விலை)
கிடையாது; வரியோ வட்டியோ கோயிலுக்குக் கொடுக்காதவர்கள்
வீட்டில் வெண்கலத்தைப் பறிக்கலாம்; ஆனால் வெண்கலம்
பறிக்கும்போது மண்கலம் தந்து வெண்கலம் பறிக்க வேண்டும்;
தவறுதலாக அம்பு அல்லது ஆயுதம் எறிந்து கொலை செய்தால்
தலைவிலை (தூக்குத்தண்டனை) கிடையாது; குளத்தில் தண்ணீர்
இல்லாதபோது நெல்லுக்குப் பதிலாகப் புன்செய்த் தானியங்கள்
கொடுக்கலாம் என்பன போன்ற பல ஆணைகளைக் கோயில்
சுவர்களில் வெட்டி வைத்துள்ளனர்.
|
• கோயிலில் காணும் அரசு ஆணைகள்
|
கோயிலுக்கும், இந்த ஆணைகட்கும்
தொடர்பு இல்லாவிடினும்
கோயிலில் அவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட்டால்
அழியாமல் இருக்கும்; எல்லோர் பார்வையிலும் படும்; அதைப்
படித்துப் பார்த்தவர்கள் அந்த ஆணைகளின் மூலம் நாட்டில்
செயல்கள் நடைபெறுகின்றனவா என்று அறிந்து, நடைபெறாவிடில்
அவைகளை ‘விசாரித்து’ நடைமுறைப்படுத்தலாம்
என்பதற்காகவுமே அவை கோயில்களில் கல்வெட்டாக
வெட்டப்பட்டன.
|
1.3.2
அரசன் |
நாட்டை ஆண்ட அரசனைப்
பற்றியே பல செய்திகள்
கல்வெட்டில் இடம் பெற்றன. அவனது பெருமைகளையும்
புகழையும் பற்றியும், அவன் பெயரைப் பற்றியும், ஆண்ட காலம்
பற்றியும் குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.
|
• மெய்க்கீர்த்தி
|
அரசன் பெயருக்கு முன்னர்
உள்ள அவனது பெருமை, புகழ்
பற்றிக் கூறும் பகுதி மெய்க்கீர்த்தி எனப்படும்.
முதலாம்
இராசராசன் பெயருக்கு முன்பு சிறு தொடராக இம் மெய்க்கீர்த்தி
எழுதப்பட்டது.
|
|
மதுரை கொண்ட
மதுரையும் ஈழமும் கொண்ட
கச்சியும் தஞ்சையும் கொண்ட
வீரபாண்டியன் தலை கொண்ட
தொண்டை நாடு பாவின |
என்று சிறு தொடராகக் காணப்பட்ட இம்மெய்க்கீர்த்தி
முதலாம்
இராசராசன் காலத்தில் பெரிய வடிவம் பெற்றது. முதல் இராசராசன்
மெய்க்கீர்த்தி ‘திருமகள்போல’ என்று தொடங்கும். ஒவ்வொரு
அரசருக்கும் தனித்தனித் தொடராக மெய்க்கீர்த்தி தொடங்குவதால்
மெய்க்கீர்த்தித் தொடக்கத்தைப் பார்த்து இந்தக் கல்வெட்டு எந்த
அரசனுக்குரியது எனக் கண்டு கொள்ளலாம்.
|
• அரசன் பெயர்
|
அரசன் பெயர்
கோ என்று சில கல்வெட்டுகளில்
தொடங்கும். பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில் திரிபுவனச் சக்ரவர்த்திகள் என்ற தொடர் அரசன் பெயருக்கு
முன்னர்
இருக்கும். பல்லவர்கள் கல்வெட்டு பல்லவ குல திலக என்றும்,
சேரர் கல்வெட்டுகள் சந்திராதித்ய குல திலக என்றும் அரசன்
பெயருக்கு முன்னர் வெட்டப்பட்டிருக்கும். பிற்காலச் சோழர்
கல்வெட்டுகளில் இராசகேசரி, பரகேசரி என்ற
பட்டப்
பெயர்களும், பாண்டியர் கல்வெட்டுகளில்
மாறவர்மன், சடையவர்மன் என்ற பட்டப் பெயர்களும் மாறி மாறி அரசர்
பெயர்களுக்கு முன்பு காணப்படும். குலோத்துங்க சோழ தேவர்
என்பது போல, பெயருக்குப் பின் தேவர் என்ற சொல் வரும்.
|
• ஆண்டுக் குறிப்பு
|
ஓர் அரசன்
எந்த ஆண்டு அரசனாக முடி சூடிக்
கொண்டானோ அந்த ஆண்டு முதல் அவன் ஆட்சியாண்டு
தொடங்குவதாகப் பெரும்பாலும் எழுதுவர். ஓர் அரசன் ஐந்தாம்
ஆண்டு ஒரு கட்டளை பிறப்பித்து அவனுடைய ஆறாம் ஆண்டில்
கல்லில் கல்வெட்டாக வெட்டப்பட்டால்
‘ஐந்தாவதுக்கு
எதிராமாண்டு’ என்று எழுதப்படும். சில கல்வெட்டுகளில்
சாலிவாகன சக ஆண்டு, கலியுக ஆண்டு, கொல்லம் ஆண்டு
ஆகியவற்றுள் ஒன்று வெட்டப்பட்டிருக்கும். சில கல்வெட்டுகளில்
வருடப் பெயர், மாதம், தேதி, நட்சத்திரம், நாள்
(கிழமை)
முதலியனவும் வெட்டப்பட்டிருக்கும். |