3.1 கலையும் கலைவல்லவர்களும்

பாடலிலும், ஆடலிலும் வல்லவர்களான ஆண்களும் பெண்களும், இசைக்கருவிகளை இயக்கும் இருபாலாரும் தமிழ்நாட்டில் பலர் வாழ்ந்தனர். அவர்கள் சமுதாயத்தில் பெரும் சிறப்புப் பெற்று வாழ்ந்தனர். நாட்டு மக்களால் நன்கு மதிக்கப் பெற்றிருந்தனர். அரசரால் சிறப்புப் பட்டங்கள் பெற்றும் பலர் வாழ்ந்தனர். செல்வச் செழிப்புடனும் பெயரும் புகழும் பெற்ற அக்கலை வல்லவர்கள் கலை ஈடுபாட்டுடன் நில்லாமல் பல சமூகப் பணிகளிலும், சமயப் பணிகளிலும் ஈடுபட்டு விளங்கினர். அவர்களைப் பற்றிய செய்திகள் பல கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.
 

• கூத்துக்கலை

கோயிலில் ஆடிய ஆட்டங்கள் பல்வேறு வகைப்பட்டன. சாந்திக்கூத்து, விநோதக்கூத்து, தமிழ்க்கூத்து, ஆரியக்கூத்து, சாக்கைக் கூத்து என்பன அவற்றுள் சில. சாந்திக் கூத்து 108 கரணங்கள் கொண்ட கூத்த நிருத்தம் எனப்படும். அது சொக்கம், அகமார்க்கம் என்னும் மெய்க்கூத்து, கை கால் அசைத்தாடும் அவிநயம், கதை தழுவிய நாடகம் என நால்வகையாகப் பிரிந்தது. அப்பிரிவில் ஒன்றான அகமார்க்கம் தேசி, வடுகு, சிங்களம் என்று மூன்றாக அழைக்கப்பட்டது. கூத்துகள் மூன்று அல்லது ஏழு அங்கங்களாக ஆடப்பட்டன. வரிக்கோலம் என்பதும், சாந்திக் குனிப்பம் என்பதும் சில ஆட்டங்களுக்குப் பெயர்கள் ஆகும்.

இயல், இசை, நாடகம் எனத் தமிழ் மூவகையாகப் பிரிக்கப்பட்டது. நாடகமே கூத்து எனப்பட்டது.
 

• கருவிகளும் இசைக்கும் முறையும்

கல்வெட்டுகளில் குறிக்கப் பெறும் பல்வேறு இசைக் கருவிகளைத் தோல்கருவி, துளைக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என நான்காகப் பிரிப்பர். அவைகளை இயக்குவதைக் கொட்டுதல், ஊதுதல், வாசித்தல், அறைதல், ஏற்றுதல், பாடுதல், தடவல் என அழைப்பர். கல்வெட்டுகளில் உடுக்கை வாசித்தல், காகளம் ஏற்றுதல், சேகண்டிகை கொட்டுதல், சங்கு ஊதுதல், பறை அறைதல், வீணை தடவுதல், பதிகம் பாடுதல் எனக் குறிக்கப் பெறும். கருவிகட்கு ஏற்ப இசைக்கும் முறை வேறுபட்டதை இத்தொடர்கள் விளக்குகின்றன.
 

3.1.1 இசை

சில கல்வெட்டுகள் இசை பற்றிய தனிக் குறிப்புகள் கொண்டு விளங்குகின்றன. அவற்றுள் பழமையான அறச்சலூர் இசைக்கல்வெட்டு மிக முக்கியமானது. சமண முனிவர்கள் தங்கியிருந்த இயற்கைக் குகைத்தளத்தில் கற்படுக்கைகளின் அருகில் இசை, தாள எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. மணிய வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவன் அங்கு இசை எழுத்துகளைப் ‘புணருத்தான்’ என்று கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் கூறும் ‘எழுத்துப் புணர்ப்பு’ என்ற தொடர் அங்கு எழுதப்பட்டுள்ளது.

(புணருத்தான் - சேர்த்தான்)
 

• இசைக்கருவி

கல்வெட்டுகளில் உடுக்கை, கறடிகை, காளம், காகளம், காசை, குடமுழா, குழல், கொட்டிமத்தளம், சகடை, சங்கு, செண்டை, சேகண்டிகை, சேமக்கலம், டமருகம், தட்டழி, தவில், தாரணி படகம், தாளம், திருச்சின்னம், திமிலை, நகரா, பறை, பஞ்சமுறை, பாரி நாயனம், மல்லாரி, மணி, முகராசு, மேளம், யாழ், வங்கியம், வீரமத்தளம், வீணை போன்ற பல கருவிகள் குறிக்கப்பட்டுள்ளன. ‘இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்’ என்ற திருவாசகப் பாடல் மூலம் வீணைக்கும் யாழிற்கும் வேறுபாடு உண்டு என்பதை அறிகிறோம்.
 

• இசை அடைவு எழுத்துகள்

அதன் அருகில் இரண்டு தொகுதிகளாக அடவு எனப்படும் இசை, தாள எழுத்துகள் ஐந்து ஐந்து வரிசையாகப் பொறிக்கப்பட்டுள்ளன.

தா தி தா தி த

தி தா தே தா தி

தா தே தி தே தா

தி தா தே தா தி

தா தி தா தி தா

என்பன ஒரு தொகுதி எழுத்துகள் ஆகும். இவை 1800 ஆண்டுகட்கு முற்பட்டவை. இவைகளைப் பொறித்தவன்தான் மணியன் வண்ணக்கன் தேவன் சாத்தன் என்பவன்.
 

3.1.2 கலைப்பிரிவினரும் பெற்ற சிறப்பும்

பாடுவான், நடம்புரிவான், கூத்தாடி, கொம்பூதி, பண்பாடி, தக்கைகொட்டி எனத் தொழிலின் அடிப்படையில் அழைக்கப் பெற்ற அவர்கள் பெருமை, அவர்களின் பெயர்கள் அமைந்துள்ள தன்மையிலேயே விளங்கும். அரையன் சுந்தர சோழனான மும்முடிசோழ நிருத்த மாராயன், அரையன் அபிமான துங்கனான அருமொழி நிருத்தப் பேரரையன், சாந்திக் கூத்தன் திருவாளன் திருமுது குன்றன் ஆன விசயராசேந்திர ஆச்சார்யன், உடுக்கை வீரசோழன் விடங்கனான ராஜராஜஸ்ரீஉறஸ்தன், பாடவ்யம் கூத்தன் வீதிவிடங்கன், குரவன் வீரசோழனான பஞ்சவன்மாதேவி நாடகமய்யன், மறைக்காட்டுக் கணவதியான திருவெள்ளறைச் சாக்கை, சாக்கை மாராயன் விக்கிரம சோழன் என்பன சில கலைவல்லவர்கள் பெயர்கள் ஆகும். வாணகோவரையர் பெண்டிர் கூத்தாடும் நாச்சியார் உமையான ஊர்க்கு நல்லார் என்பது ஒரு நடனமாதின் பெயர்.
 

• கலைவல்லார் நியமனம்

ஏற்கெனவே கலைவல்லவர்கள் இல்லாத கோயிலில் புதியதாகக் கலைவல்லவர்கள்  நியமிக்கப்பட்டு அவர்களுக்கு கொடைகள் அளிக்கப் பட்டதையும் பற்றிக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
 

‘திருவிடைமருதூர் உடையார் கோயிலில் பாடவ்யத்துக்கு
முன்பு நிவந்தம் இல்லாமையால் இத்தேவர்க்குப் பாடவ்யம்
வாசித்து நிற்க நெல்லு இரு தூணி’
                      (திருவிடை மருதூர்க் கல்வெட்டு)

‘குழைஞ்சானான பிரகடகண்ட மாராயனுக்கும், இவன்
தம்பி சோறநுக்கும், பூமனுக்கும் உவைச்சக் காணியாகக்
கல்வெட்டிக் கொடுத்தபரிசாவது இக்கோயிலுக்கும் ஊருக்கும்
நெடுநாள் முதல் இந்நாள் வரையாக காணியாளரென்று
ஒருவரையும் காணாதபடியாலே காணியாகக் கொடுத்த நிலம்’
                 (திருச்சி மாவட்டம் - பூவாலைக்குடிக் கல்வெட்டு)

போன்ற கல்வெட்டுப் பகுதிகளில் புதுக் கலைவல்லவர்கள் நியமனம் பெற்றுக் கொடையளிக்கப் பெற்றதைக் காணுகிறோம்.
 
• சிறப்பு பெற்றமை

அரையன், மாராயன், பேரரையன் என்பன அவர்கள் பெற்ற சிறப்புப் பட்டங்களாகும். அருள்மொழி, வீரசோழன், விக்கிரமசோழன் போன்ற அரசர் பெயர்களை அவர்கள் பெற்றிருப்பது அவர்களின் அரசுத் தொடர்பையும், உயர்வையும், சிறப்பையும் காட்டுகின்றது. அரசருடைய படைகளில் பணிபுரிந்தோரும், உயர் அலுவலர் சிலரும் கூடக் கலைகளில் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். ‘பக்கவாத்யம் அழகிய சோழத் தெரிந்த வேளைக்காரர் ஐயாறன் சுந்தரன், வங்கியம் நிகரிலி சோழன் தெரிந்த உடனிலை குதிரைச் சேவகரினின்றும் புகுந்த தஞ்சை கணவதி’ என்ற பெயர்களால் அதனை அறியலாம். (தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் கல்வெட்டு)
 

• கொடை பெற்றமை

கோயிலில் பணிபுரிந்த கலைவல்லவர்களுக்குப் பொன்னும் நெல்லும் சம்பளமாக அளிக்கப் பெற்றன. பலருடைய பணிக்காகக் கொடை நிலம் அளிக்கப்பட்டது. நிலம் பெற்ற பலர் பரம்பரை பரம்பரையாகத் தங்கள் பணியைச் செய்து வந்தனர். அவர்களைக் கல்வெட்டு ‘அடுத்த முறைகடவார்’ என்று கூறுகிறது. கொடுத்த நிலங்கள் கூத்துக்காணி, நட்டுவக்காணி, நிருத்தியபோகம், உவச்சக்காணி, நிருத்தியக்காணி, சாக்கைக்காணி என அந்த அந்தக் கலையின் தொடர்போடு அழைக்கப்பட்டன. (கண்டியூர், மேலப் பழூர், திருச்சோற்றுத்துறை, சித்தலிங்க மடம்,  திருக்கடவூர்க் கல்வெட்டுக்கள்)
 

• நிலம் பெற்றமை

நட்டுவக்காணி நிலங்கள் ஆயிரத்தளி, மேலப்பழூர், திருச்சோற்றுத்துறை, திருவிடைமருதூர், ஆற்றூர், சித்தலிங்கமடம், திருக்கடவூர் போன்ற பல ஊர்களில் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்கள் காட்டுகின்றன.
 

‘திருப்புலிப் பகவர்க்குத் திருவிழா எழுந்தருளும்போது
முன்னின்று நிருத்தம் செய்ய நிருத்தபோகமாக திருப்புலிப்
பகவர் நிருத்த விடங்கிக்கும் இவன் அன்வயத்தார்க்கும்
குடுத்த நிலமான கால்செய் இறையிலி’
                                 (சிதம்பரம் கல்வெட்டு)

‘சித்திரைத் திருநாளுக்குக் கூத்தாடுகைக்குச் சாந்திக்
கூத்தாடுகிற எழுநாட்டு நங்கைக்குக் கூத்தாடுகைக்கு விட்ட
இந்நிலம் கொண்டு இத்திருநாளுக்கு ஆடக் கடவ கூத்து
ஒன்பது ஆடுவாளாகவும்’
                       (புதுக்கோட்டைக் கல்வெட்டுக்கள் - 128 )

‘பெருந்தனத்துக் காந்தர்ப்பன் அரையன் திருவிடைமருதூர்
உடையார் ஆன மும்முடிச்சோழ நிருத்தப் பேரரையனுக்கு
விட்ட நிலம்’
                       (திருவிடை மருதூர்க் கல்வெட்டு)
 

என்ற கல்வெட்டுத் தொடர்களால் அவர்கள் பெற்ற மானிய நிலங்கள் பற்றி அறிகிறோம்.
 

3.1.3 கலைவல்ல அரசர்

தமிழக அரசர்கள் கலைகளைப் போற்றிப் பாதுகாத்து வளர்த்ததுடன் அவர்களும் சிறந்த கலைவல்லவர்களாகத் திகழ்ந்தனர் என்பதைப் பல கல்வெட்டுகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. கலையில் வல்லவர்களாக மட்டும் இல்லாமல் புதுக் கலைகளை, குறிப்பாக இசைக்கலையில் பல்வேறு கண்டுபிடிப்புக்களையும் அவர்கள் செய்துள்ளனர்.
 

• பல்லவ மன்னன்

பல்லவப் பேரரசரான மகேந்திரவர்மன் சங்கீரண ஜாதி என்ற பட்டப் பெயரைப் பெற்றிருந்தான். சங்கீரணம் என்பது தாளவகை ஐந்தில் ஒன்று. இதைக் கண்டுபிடித்தவன் மகேந்திரவர்மன். புதிய 8 நரம்புகளோடு பரிவாதினி யாழை உருவாக்கியவன் மகேந்திரன். இராசசிம்ம பல்லவன் வாத்ய வித்யாதரன், ஆதோத்ய தும்புரு, வீணா நாரதன் என்று பெயர் பெற்றிருந்தான். பிற்காலப் பல்லவ மன்னனான கோப்பெருஞ் சிங்கனுக்குரிய பட்டப் பெயர்களில் ஒன்று பரதம் வல்ல பெருமாள் என்பது.
 

• சோழரும் சேதுபதியும்

குலோத்துங்க சோழன் இசை வகுத்தான் என்பர். அவன் வகுத்த இசையை அவன் முன்னரே பாடிக் காட்டினர் சிலர். ‘தான் வகுத்தவை தன் எதிர்பாடி’ என்ற தொடர் அதனை விளக்கும். குலோத்துங்கன் மனைவியருள் ஒருவர் பெயர் ஏழிசை வல்லபி. அவரும் இசையில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். பிற்காலச் சேதுபதி அரசர்கள் இயலிசை நாடக முத்தமிழ் அறிவாளன், சகலகலாப் பிரவீணன், பரதநாடகப் பிரவீணன் என்ற பெயர்களைப் பெற்றிருந்தனர்.
 

3.1.4 கலைவல்லார் அளித்த கொடை

கலைவல்ல ஆடவரும், பெண்டிரும் கோயில்களுக்கும், ஊர்ப் பொதுக் காரியங்களுக்கும் தாராளமாக நன்கொடை அளித்துள்ளதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. விளக்கு எரிக்கவும், சமய அடியார்களுக்கு உதவவும், உணவிடவும், மடம் அமைக்கவும், உடைந்த குளத்தைப் பழுது பார்க்கவும் நிலமும், பொன்னும் அளித்துள்ளனர்.

‘இத்திருவீதி வடசிறகில் பதியிலார் உமையாழ்வியான அழகினும்
அழகியதேவித் தலைக்கோலி பக்கம் இவர்கள் கொண்டு
கற்பித்த மடம்’

என்ற கல்வெட்டு தேவரடியார் மடம் அமைத்தமையைத் தெரிவிக்கிறது. (திருவாரூர்க் கல்வெட்டு)

ஈரோடு மாவட்டம் ஊதியூர் வானவராய நல்லூர் கரிய காளியம்மன் கோயில் தீபத்தம்பத்தை நிறுவியவர் செம்பூத்தகுல மாணிக்கி தெய்வானை என்பவர் என்பதை அங்குள்ள கல்வெட்டால் அறிகிறோம்.
 

• தேவரடியாரின் கொடை

பதியிலார் கூத்தன் நம்பிராட்டி ஆன செய்ய பெருமாள் திருநெல்வேலிக் கோயிலில் சிறுகாலைச் சந்திக்கு தாளிப்பூப் பறிக்கும் தொண்டர்களின் ஜீவனத்துக்குக் கொடை கொடுத்ததையும், மன்னார்குடி திருவிராமேசுவரர் கோயிலுக்கு விளக்கெரிக்கத் தேவரடியார் உழுதன்தேவி இரண்டு பொற்காசு கொடுத்ததையும் பற்றி இரண்டு கல்வெட்டுகள் கூறுகின்றன. வேதாரண்யம் கோயிலில் சாந்திக் கூத்தாடும் தேமாங்குடி பெருந்திருவாட்டி கயிலைக்கிழத்தி என்பவள் அக்கோயிலுக்கு 30 வேலி நிலம் அளித்தாள். மேற்கண்ட செய்திகள் மூலம் கலைவல்ல மகளிர் வாழ்ந்த செல்வச் சிறப்பும் அவர்கள் பக்தித் தன்மையும், பொதுநல எண்ணமும் நன்கு தெரிகிறது.
 

• தேவரடியாரின் பொதுப்பணி

பாண்டிய நாட்டில் ஓரூரில் குளம் ஒன்று உடைந்து கரைகள் அழிந்து நாடும் பாழாய்க் கிடந்தது. அந்தக் குளத்தை வெட்டித் திருத்தி ஆக்கிக் கொள்ள, தளியிலாள் நக்கன் நாச்சியார் ஆன தனியாணைவிட்ட பெருமாள் தலைக்கோலி என்பவள் பொன் கொடுத்துத் திருப்பணி செய்தார் என்பதை ஒரு கல்வெட்டுக் கூறுகிறது.