5.1 மக்கள் வாழ்வு

ஊரை ஒட்டிய புதுக்குடியிருப்புக்கள் ஏற்பட்டபோது பழைய ஊர்க் குடிகளே அங்குக் குடியேற அனுமதிக்கப்பட்டனர். பொது நிலத்தை அனுபவித்து ஊரில் வாழ்ந்த அர்ச்சகர், ஆசிரியர், கணக்கர், தச்சர், கொல்லர் போன்ற பெருமக்கள் பிற ஊர்களில் சென்று தொழில் நடத்த அனுமதிக்கப்படவில்லை. பல ஊர்களில் சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் பொதுவான கொடையை மக்கள் வழங்கினர். மத நல்லிணக்கம் நிலவியது.
 

5.1.1 கருணையும் கண்டிப்பும்

தலைக்கு எண்ணெயும், குழந்தைகட்குப் பாலும், கன்றுக்குட்டிக்குப் புல்லும் தாராளமாக இலவசமாக வழங்கினர். சொந்தநிலம் உடையவர்களும், சொந்த நிலத்தில் வீடு கட்டியவர்களும், கற்றறிந்து பிறர்க்குக் கற்பித்த பெரியவர்களுமே ஊர் நிர்வாகத்தில் அனுமதிக்கப்பட்டனர். தவறிழைத்தவர்கட்கு அங்கு இடமில்லை. கணக்குக் காட்டாதவர்களும் அவர்கள் உறவினர்களும் ஊர் அவையில் அங்கம் பெறும் உரிமையை இழந்தனர்.
 

5.1.2 ஊர்களும் செய்திப்பதிவும்

நல்ல விளைநிலம் உள்ள பகுதிகளிலும், ஆறு கால்வாய்ப் பகுதிகளிலேயே புதிய ஊர்கள் அதிகமாக ஏற்பட்டன. போக்குவரத்தும், தகவல் தொடர்பும் இல்லாத அந்நாளிலேயே, அரசன் பட்டமேற்ற ஆண்டு, மாதம், நாள் தெரிந்து கல்வெட்டுக்களில் குறித்திருந்ததும், நிகழ்ச்சிகளை ஆணைப்படுத்திக் கல்வெட்டுக்களிலும், செப்பேடுகளிலும், ஓலை ஆவணங்களிலும் பொறித்து வைத்ததும் வியப்புக்குரிய செயலாகவே தெரிகிறது. முக்கிய நிகழ்ச்சிகளை ஆவணமாகப் பதிவு செய்தனர். அவைகளே இன்றைய வரலாற்றுக்குத் துணை
புரிகின்றன.
 

5.1.3 மக்களின் பொறுப்பு

கல்வியைக் கற்பதிலும், கற்றவர்கள் கூறுவதைக் கேட்பதிலும் மக்கள் பேரார்வம் காட்டினர். பிராமணி, ஆழ்வி, தேவி, மணவாட்டி என்று அழைக்கப்பட்ட மனைவிமார்கள் குடும்பப் பொறுப்புக்களைச் செவ்வனே நிறைவேற்றி வந்தனர். மாணிகள் எனப்படும் பிரம்மச்சாரிகள் கோயில் பணிகளில் நியமிக்கப்பட்டிருந்தனர். அரசுக்கும், நாட்டுச் சபைக்கும் கொடுக்க வேண்டிய நிலவரியையும், பிற வரிகளையும் தவறாமல் செலுத்தினர். ஊராரும் சம்பளம் பெறாமல் அவைகளில் உறுப்பினர்கள் ஆகப் பணிபுரிந்தனர்.
 

5.1.4 ஊர்க் கூட்டங்கள்

ஊர்க் கூட்டங்கள் கோயில் மண்டபங்களிலும், கோபுரத்தின் அருகிலும், பெரிய மரங்களின் அடியிலும், ஆற்றங்கரைகளிலும் பகல் நேரத்தில் நடைபெற்றது என்பதைக் கல்வெட்டுக்களில் காணுகிறோம். அச்சபைகளில் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டனர் என்பதை "வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி நிறைவற நிறைந்து குறைவறக் கூடி" என்ற கல்வெட்டுத் தொடரால் அறிகின்றோம். அச்சபைகளில் பெண்கள் இடம்பெறவில்லை.