6.3 வணிகக் குழுக்கள்

கல்வெட்டுகளில் பல்வேறு வணிகக் குழுவினர் பெயர்கள் காணப்படுகின்றன. நானாதேசி, திசையாயிரத்து ஐநூற்றுவர், மணிக்கிராமத்தார், ஆயிரவர், பன்னிரண்டார், இருபத்துநான்கு மனையார், நகரத்தார், வளஞ்சியர், அஞ்சு வண்ணம், சித்திரமேழிப் பெரியநாடு என அவர்கள் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளன. நானாதேசி என்போர் எல்லா நாடுகட்கும் சென்று வணிகம் செய்வோர். திசையாயிரம் என்பது வணிகர் செல்லும் எல்லாத் திசைகளும் என்று பொருள்படும். ஐநூற்றுவர் என்பது ஐந்நூறு வணிகர்களைக் குறிக்கும். கல்வெட்டுகள் அவர்களைப் பஞ்சசதவீரர் என்று கூறுகின்றன. மணிக் கிராமத்தார் என்னும் வணிகக் குழுவினர் பல ஊர்களில் இருந்துள்ளனர். 'கொடும்பாளூர் மணிக்கிராமத்தார்' என்போர் அவர்களில் ஒருவர். மணிக்கிராமம் என்பது வணிகர்க்குரிய பட்டம் என்று ஒரு கல்வெட்டால் அறிகிறோம். 'இரவி கொற்றனாகிய சேரமான் லோகப்பெரும் செட்டிக்கு மணிக்கிராமப்பட்டம் கொடுத்தோம்' என்பது ஒரு கல்வெட்டுத் தொடர். அஞ்சு வண்ணம்' என்பது இசுலாமிய வணிகக்குழு என்பர். வெளிநாட்டில் இருந்த தமிழ்வணிகர் நலன் காக்கவே முதலாம் இராசேந்திரன் கடாரத்தின்மீது படையெடுத்தான் என்பர்.

வணிகக்குழு
கல்வெட்டு
6.3.1 வணிகக் குழுக்கூட்டம்

பல ஊர்களில் வணிகர்கள் கூட்டம் கூடியதைப் பல கல்வெட்டுக்கள் கூறுகின்றன. அக்கூட்டத்தில் கூடியவர்கள் பற்றிய விபரத்தைக் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு மாவட்டம் சர்க்கார் பெரியபாளையத்திலும், சிவகங்கை மாவட்டம் பிரான்மலையிலும் கி.பி. 13ஆம் நூற்றாண்டில் பெரும் வணிகக் கூட்டங்கள் கூடியுள்ளன. அவர்களைப் பின்வருமாறு கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

(1) நான்கு திசை சமஸ்தலோக பதினெண் விஷயத்தார்,

(2) ஏறுசாத்து, இறங்கு சாத்து விளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர்,

(3) நாடு, நகரங்களில் திசைவிளங்கு திசையாயிரத்து ஐநூற்றுவர்,

(4) கேரளசிங்க வளநாட்டு அருவிமாநகரமான குலசேகரபட்டினத்து நகரத்தார்

(5) திருக்கோட்டியூர் மணியம்பலத்து நகரத்தார்.

(6) ஐம்பொழில் வளநாட்டு கல்வாயல் நாட்டு சுந்தரபாண்டியபுரத்து நகரத்தார்

(7) மண்டலிகள் கம்மரப் பெருந்தெரு நகரத்தார்

(8) கருவூர், கண்ணபுரம், பட்டாலி, தலையூர், இராசராசபுரம், கீரனூர் உள்ளிட்ட கொங்கு நகரத்தார்

ஆகியவர்களைப் பிரான்மலைக் கல்வெட்டுக் கூறுகிறது.
 

• சித்திரமேழி

வணிகர்குழுக் கூட்டம் பெரும்பாலும் சித்திரமேழிப் பெரியநாட்டார் சபை' என்று கூறப்படும். வணிகர் குழுக் கூட்டம் பற்றிய கல்வெட்டுகளில் வணிகர்களுக்குரிய தனி மெய்க்கீர்த்தி கூறப்பட்டிருக்கும்.
 

தென்தமிழ்வடகலை தெரிந்துணர்ந்து
நீதிசாத்திர நிபுணர்ஆகி
இன்சொல்லால் இனிதளித்து
வன்சொல்லால் மறங்கடிந்து
செங்கோலே முன்னாகவும்
சித்திரமேழியே தெய்வமாகவும்
செம்பொற்பசும்பையே வேலியாகவும்
உன்னியதுமுடிக்கும் ஒண்டமிழ்வீரர்
வாட்டம் இன்றிக் கூட்டம் பெருகி'

கூடியதாக அவர்கள் மெய்க்கீர்த்திப் பகுதிகள் உள்ளன. அவர்கள் ஐம்பொழில் பரமேசுவரியை வணங்குபவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
 

• வணிகர் திருப்பணி

தமிழக வணிகர்களின் பக்திப் பெருமையை அவர்கள் வைத்துக் கொண்டிருந்த பெயர்களே காட்டும்.

காடையூரில் சிறியான் பிள்ளையான பிறைசூடும் பெருமாள்'
முத்தூர் வியாபாரி மன்றுள் ஆடுவான் சம்பந்தப் பெருமாள்'
கரையான் அடிக்கீழ்த்தளம் சடையன் நம்பியான சேரமான் தோழன்'

என்பன சில வணிகர் பெயர்களாகும். நெல்லைப் போல் இரு பங்கு அரிசிக்கும், பருத்தியைப் போல் இரு பங்கு நூலுக்கும் மகமை நிர்ணயம் செய்யப்பட்டது. சந்தனம், சவ்வாது, பன்னீர், அகில் ஆகியவற்றிற்கு மகமை அதிகமாக இருந்தது. இந்த மகமை மூலம் பல கோயில்களில் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தனர். திருப்பணிகள் பலவற்றையும் மேற்கொண்டனர். இத்திருப்பணிகள் கிழக்காசிய நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் அமைத்த கோயில்கள் தேசி விநாயகர் கோயில், தேசீசுவரம், பதினெண் விஷய விண்ணகரம் என அழைக்கப்பட்டன. இக்கோயில்கட்கு வணிகர் மட்டுமின்றி அவர்கள் மனைவியரும் கொடையளித்தனர். இதனைக்

காங்கயநாட்டு வியாபாரி சொக்கன் மனைக்கிழத்தி தேவி'
அறுவை வாணிகன் எழுவன் பிடவன் மணவாட்டி உத்தி

என்ற கல்வெட்டுத் தொடர்களால் அறிகின்றோம். தொண்டை மண்டலத்துப் பழுவூர்க் கோட்டம் பூதலப்பட்டு பீமீசுரமுடையார் கோயிலுக்கு `நாவலன் பெருந்தெருவில் நானாதேசத்தில் அம்பத்தாறு தேசத்தில் அய்யாவளி சாலுமூலை பெக்கண்டாரும், பலபட்டடை யாரும், அளநாட்டு ராசசிம்ம சோழீசுவரர் கோயிலுக்கு `நாலு நகரம் பதினெண் விஷயத்தாரும், பதினெட்டு ராச்சியத்தில் பதினெண் விஷயத்தாரும், தரகரும், நாட்டுச் செட்டிகளும், தளச் செட்டிகளும்' அறக்கொடைகள் அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.