1.0 பாட முன்னுரை | |
தலைவன் - தலைவியரின் காதல் வாழ்வு முற்றிலும் இன்பமானதன்று; நெருக்கடி நிலைகளை எதிர்கொள்வது; அவர்களின் உணர்வுகளில் இன்பத்தையும் துன்பத்தையும் மாற்றி மாற்றி வைத்து அலைக்கழிப்பது. இருப்பினும் அவர்களுக்குக் காதலே உயிர். இப்பாடத்தில் இடம் பெறும் பாடல்கள் (நற்றிணை - பாடப்பகுதி முதல் 10 பாடல்கள்) இவ்வுண்மையை உணர்த்துகின்றன. தலைவன் தன்னைப் பிரியவே மாட்டான் என உறுதியாக நம்புகிற தலைவியின் உள்ளத்தில் தடுமாற்றம் இல்லை. அதேபோல் தலைவியைப் பிரியமாட்டேன் எனத் தன் நெஞ்சுக்குச் சொல்லும் தலைவனும் மனத்தெளிவுடன் இருக்கிறான். ஆனால் பிரிந்து போயிருக்கிற தலைவனும், தலைவன் வருகைக்குரிய காலம் தவறிவிட்டதால் வருந்தும் தலைவியும் வேறுதோற்றம் காட்டுகின்றனர். மற்றொருபுறம், சேர்ந்திருப்பது மட்டுமே முக்கியமில்லை; ஊரார் அலர் தூற்றாதவாறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் கவலை தலைவியையும் தோழியையும் தவிக்க வைக்கிறது. தலைவன் தோழியின் உதவியுடன் தலைவியை மணந்து கொள்வதற்காகப் பிறர் அறியாமல் அழைத்துச் செல்லும்போது அச்சம் கலந்த இன்பம் அவர்களிடம் நிறைகிறது. தோழி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து உருக்கமாகப் பேசும்போது ஒரு காதல் வாழ்வின் எதிர்கால மலர்ச்சியே நம் கண்முன்விரிகிறது. இப்பாடப்பகுதிப் பாடல்கள் இவ்வாறு காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் படம் பிடிக்கின்றன. இப்பாடல்களின் உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்பு ஆகியவற்றைத் தனித்தனித் தலைப்புகளில் நீங்கள் காணலாம். |