1.2 பாடல்களின் வெளிப்பாட்டு முறைகள்

நற்றிணைப் புலவர்கள் இயற்கையின் ஊடாக மானிட உணர்வுகளை இயங்கவிட்டும், சொல்லை வலிமையாக்கி உணர்ச்சிகளைச் சுமக்கச் செய்தும், நம்மைச் சுற்றி நிகழ்வது போலக் காட்சிகளை அமைத்தும் காட்டும் கவிதை வெளிப்பாட்டுத் திறன்களை இங்குக் காணலாம்.

1.2.1 இயற்கைப் பின்னணியில் காதல் வாழ்வு

அகவயமான காதல் உணர்வைப் புறவயமான இயற்கைப் பின்னணியில் வைத்துக் காட்டும் சங்கப் புலவரின் வெளிப்பாட்டு முறை காதலின் அழகையும் ஆழத்தையும் நாம் உணரச் செய்கிறது. இருவர் அன்பும் சமமான உன்னதம் வாய்ந்திருந்தால் அந்தக் காதல் எப்படிப்பட்டது? கபிலர் இயற்கையின் உன்னத நிலை ஒன்றை உவமையாக நிறுத்துகிறார்.

தாமரைத் தண்தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போல

(நற்றிணை - 1)

தேன் கூடு காதல் கூட்டின் தன்மையை அழகாக உணர்த்திவிடுகிறது அல்லவா !

இடையூறுகள் பலவற்றையும் தாண்டி விடுகின்றனர் உடன்போக்கில் செல்லும் காதலர்கள். தலைவன் உள்ளத்தில் பெருக்கெடுக்கும் மகிழ்ச்சியை எப்படிச் சொல்வது? அவனைச் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளில் அவனது மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கச் செய்கிறார் பாலைபாடிய பெருங்கடுங்கோ. குளிர்ந்த சோலைகள், மகிழ்ந்து இசைக்கும் குயில்கள், எங்கும் இனிய நிழல், தலைவி விளையாட மணல், அருகருகே சிற்றூர்கள் - எனவரும் புறச்சூழலை அவனது அகமகிழ்ச்சிக்குப் பொருத்தமான பின்னணியாக நாம் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா ! (நற்றிணை - 9)

பாலை நிலம் கடும் வெப்பமுடையது; அங்கு வாழ்வோர் வழிப்போக்கரைக் கொள்ளையடித்துத் துன்புறுத்தி வாழ்கிறவர்கள். இந்த விதமான புற-அகக் கொடுமைகள் இரண்டையும் இணைத்து ஒரே அடைமொழியில் சொல்கிறார் இளங்கீரனார். வெம்முனைச் சீறூர் - (நற்றிணை-3)

மாலைப் பொழுது பிரிந்துள்ளவர்களின் மனவலிமையைச் சிதைக்கிறது. பொழுதும் மனதும் முட்டிக் கொள்வதை, “உரன்மாய் மாலை“ எனச் சித்திரிக்கிறார். (நற்றிணை - 3) இவ்வாறு இயற்கை மனித உணர்வுகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக இயங்குகிறது.

இயற்கைப் பொருள்களைக் கொண்டு உள்ளுறை, இறைச்சி எனக் குறிப்புப் பொருள் புலப்படுத்துவது சங்கப்புலவரின் வெளிப்பாட்டு முறை எனக் கண்டோம். உப்பு வணிகரின் வண்டிச் சக்கர ஓசையில் நாரைகள் திடுக்கிட்டு நிற்பது இயற்கைக்காட்சி. காட்சிக்கு உள்ளே, தலைவனின் மணமுரசொலி கேட்டுத் தலைவியைப் பழிதூற்றி வந்தவர்கள் திடுக்கிட்டு அடங்கும் வாழ்க்கைக் காட்சி மறைவாகப் பொதிந்திருக்கிறது. (நற்றிணை - 4)

1.2.2 உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகள்

பிற்கால இலக்கியங்கள் போல அல்லாமல் உணர்ச்சியை மிகைப்படுத்தாமலும், அதே நேரம் அதன் செறிவு புலப்படுமாறும் எடுத்துக்காட்டும் உத்தியில் வல்லவர்கள் சங்கப் புலவர்கள். உடன் போக்கின் மூலமாகத் தலைவியை அடையப் பெற்றவன் மகிழ்ச்சி எத்தகையது? அவனே சொல்கிறான் :

அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கட்கண்டாங்கு

(நற்றிணை - 9)

‘அழியக் கூடாத நன்முயற்சியில் ஈடுபட்டவர்கள், அதற்கு உறுதுணையாக வேண்டி வணங்கிய தெய்வத்தை எதிரில் கண்ணால் கண்டது போல’ எனத் தன் உணர்ச்சியைச் சொல்கிறான். அவளை அடையுமுன்பு எந்த அளவுக்கு உணர்ச்சி அழுத்தத்தில் அவன் இருந்திருப்பான் என்பதை இந்த உவமை நன்றாகப் புரியவைக்கிறது அல்லவா !

தலைவனிடம் தலைவியை ஒப்படைத்து உடன்போக்கில் வழி அனுப்புகிறாள் தோழி. இரவு நேரம். மூவரும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடி இறுக்கமான உணர்ச்சிகளில் இருக்கிறார்கள். இந்நிலையில் தோழி மட்டும் பேசுகிறாள். இனித் தலைவியின் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும்? மன உளைச்சல்களை அடக்கிக்கொண்டு அறிவார்ந்த ஒரு மனநிலையில் நின்று கொண்டு பேசுகிறாள். ‘தலைவியின் புற அழகுகளான அழகிய மார்புகள், நீண்ட கருங்கூந்தல் இவைகளை விட அவளது அக அழகாகிய காதல் - உன் சொற்களைப் ‘பிழையா நன்மொழி’ எனப் போற்றும் அழியாத காதல் - அதுவே மேலானது; ஆகவே,

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்
பொன்னேர் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்புமதி

(நற்றிணை - 10)

என்று சொல்லி ஒப்படைக்கும் காட்சி நெஞ்சை நெகிழவைப்பது.

1.2.3 காட்சித் தன்மை - நாடகத் தன்மை

அகப்பாடல் ஒவ்வொன்றும் ஒரு பேச்சாகக் காட்சித் தன்மையோடு கூடி அமைந்திருப்பது முன்னர்க் குறிப்பிடப்பட்டது. புறக்காட்சிகளைக் காட்டுவதன் மூலம் அகக்காட்சிகளை நம் மனத்தில் உருவாக்கும் கலையில் வல்லவன் சங்கப் புலவன். ஓர் அழகான மழைக்காட்சி. இடித்து மின்னிப் பெருமழை பொழிகிறது; ஆழமான சுனைகள் நிரம்பித் ததும்புகின்றன; அருவிகள் ஆர்ப்பரித்துப் பாய்கின்றன; பாறைகளைப் பெயர்த்துக் கொண்டு காட்டாறுகள் அலைபுரண்டு ஓடுகின்றன. இந்தக் காட்சி, கவிதையில் சொல்லப்படாத, தோழியும் தலைவியும் ஏன், நாமும் கூடக் காண்கின்ற ஓர் அகக்காட்சியை எழுப்புகிறது. பிரிந்திருக்கும் தலைவனது வருகை, தலைவியின் மன வறட்சிகள் அகன்று மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டு ஓடுதல், எங்கும் இன்ப அலையின் மோதல் - இது தான் அந்த அகக்காட்சி. (நற்றிணை - 7)

கபிலர் காட்டும் நாடகக் காட்சி ஒன்று. காட்சியின் நடுவில்தான் நாம் நுழைகிறோம். ‘எழுந்துவா! வராவிட்டாலும் சரி, அழாமலாவது இரு, அயலார் பார்க்கிறார்கள்’ என்ற தோழியின் குரல், அழுது கொண்டிருக்கும் தலைவியைச் சிலர் பார்த்துவிட்டுப் போவது போல ஒரு காட்சியைக் காட்டுகிறது.

எழாஅ யாகலின் எழில்நலந் தொலைய
அழாஅ தீமோ நொதுமலர் தலையே

(நற்றிணை - 13)

இங்கு என்ன நிகழ்கிறது? ஏன் இது நிகழ்கிறது என்பன போன்ற புதிர் வினாக்கள் நம்முள் எழுகின்றன. கவிதைத் தொடக்கம் ஆர்வக்கிளர்ச்சியை உண்டாக்குகிறது. காட்சி விரியவிரிய மேலும் விவரங்கள் தெளிவாகி, வாசகனுக்கு உணர்வுச் சமநிலை ஏற்படுகிறது.

1.2.4 புறப்பொருட் செய்திகளை அகப்பாட்டில் தருதல்

புறநானூறு போன்ற புறப்பாடல்களில் இடம்பெறும் உண்மை வரலாற்றுத் தலைவர் பற்றிய செய்திகள், இடங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை உவமையாகவோ வருணனையாகவோ அகப்பாட்டுக்களில் பின்னிக் கற்பனைக் காதலுக்கு ஓர் உண்மைத் தோற்றம் தரும் உத்தியைப் புலவர் சிலர் கையாளுகின்றனர். தலைவியின் கூந்தல் மணம் வேறெங்கும் உணரமுடியாத புதுமையாக உள்ளது. இந்த ‘அறியாப் புதுமணத்’துக்கு அடர்ந்த காட்டின் நடுவே கிடைக்கும் நறுமணத்தை உவமை சொல்வது பொருத்தம் எனக் கண்ட பரணர், தாம் அறிந்த காட்டு மணங்களுள் சிறந்தது என உணர்ந்த வல்வில் ஓரியின் காட்டு மணத்தை உவமையாக்குகிறார் (நற்றிணை - 6) வல்வில் ஒரி கொல்லி மலைப் பகுதியை ஆண்ட அரசனும் சிறந்த வள்ளலும் ஆவான்.

தவறாத வாய்மையுடைய தலைவனின் ‘பிழையா நன்மொழி’க்கு ஓர் உவமை வேண்டும். குறிதவறாத பழையன் என்ற வீரத்தலைவனின் வேலை உவமையாக்குகிறார் பெயர் அறியப்படாத ஒரு புலவர். (நற்றிணை - 10)