அகத்திணையில் இடம்பெறும்
நிகழ்வுகளையும் அவற்றின் பின்புலமாக அமையும் உணர்வுகளையும் சங்கப் புலவர்கள்
எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளனர் என்பதைப் பாடல்களின் மூலம் காணப் போகிறோம்.
ஒவ்வொரு பாடலும் ஓர் எழுத்தோவியம் (pen picture). பாடல் வரிகளைக்
கொண்டு அக் காட்சிகளைக் காணலாம்; கருத்திலும் உணர்விலும் தோயலாம். திணைப்பிரிவும்,
உணர்வு வெளிப்படுத்திய பாத்திரத்தின் பேச்சும் (கூற்று) எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.
விரைப்பரி வருந்திய
எனத் தொடங்கும் மருதனிள நாகனார் பாடல் (நற்றிணை-21).
மருதனிளநாகனார்
மதுரையைச் சார்ந்தவர் இப்புலவர்;
ஆகவே மதுரை மருதன்
இளநாகனார் என அழைக்கப்படுகிறார். மருதன் என்பது அவர்
தந்தை பெயராகவும் இருக்கக் கூடும். நிலங்களைப்
பற்றிய
கற்பனைகளும், உள்ளுறைகளும், வெளிப்படை உவமைகளும்
இவர் பாடல்களின் சிறப்பியல்புகள். உண்மைக்குச் சூரியனை
உவமை கூறியவர் இவர். வீரர்களின் பெயரும் புகழும் எழுதி
நடப்பட்டிருக்கும் நடுகற்களைப் பற்றிச் சிறப்பித்துப் பாடியவர்
இப்புலவர்.
திணை : முல்லை
கூற்று
: வினைமுற்றி மீள்வான் தேர்ப்பாகற்குச்
சொல்லியது.
பொருள் தேடுதலாகிய வினையை முடித்துத் திரும்பும் தலைமகன்
தலைவியை விரைந்து சென்று காண்பதற்கு ஏதுவாகத் தேரை
விரைவாகச் செலுத்துமாறு தேர்ப்பாகனிடம் சொல்லியது.
தலைவன் பாகனிடம், ‘பாகனே ! நம்முடன் வரும் நம்
வீரர்கள்
மிக வேகமான இந்தப் பயணத்தால் களைப்படைந்துள்ளனர்.
ஆகவே அவர்கள் இறுகக் கட்டிய இடுப்புக்கச்சையைச் சற்றுத் தளர்த்திக்
கொண்டு தாங்கள் விரும்பும் இடங்களில்
இடையிடையே தங்கி இளைப்பாறி விரும்பியவாறு
மெல்ல
நடந்து வரட்டும். நாம் விரைந்து செல்வோம்.
அதோபார்,
அந்தக் காட்டுக்
கோழியை !
உருக்கிய
நெய்யில்
பாலைச் சிதறினாற் போன்ற
குரல்; அழகிய
சிறுசிறு
புள்ளிகளோடு
காண்போர் விரும்பும் அழகு. விடியற்காலையில்
மழைநீர் வடிந்த அகன்ற காட்டில் ஈரமண்ணைக்
கிளறி
மண்புழுவைக் கவர்ந்து தன் பெட்டைக்
கோழிக்கு
ஊட்டுவதற்காகப் பெருமிதத்துடன் பேடையை நோக்கும்
அன்பைப் பார் !
தலைவியை நான் விரைவில் காண வேண்டும்.
தேரை மிக
விரைவாகச் செலுத்து. இதுவரை தீண்டாத தாற்றுமுள்ளால்
குதிரையைத் தீண்டி விரைவாகச் செலுத்து’ என்று சொல்கிறான்.
|
தீண்டா வைமுள் தீண்டி
நாம்செலற்கு
ஏமதி வலவ தேரே |
(வைமுள்
= கூரியமுள்; ஏமதி
= ஏவுமதி =
ஏவுவாயாக; வலவன்
= தேரோட்டி.)
கவிதையில் தலைவியைக் காணத் தீவிர
வேட்கை (ஆசை)
கொண்ட தலைவனின் அவசரம் புரிகிறது.
தாற்றுமுள்ளை
முதன்முறையாகப் பயன்படுத்தத் தூண்டுகிறான். உடன் அழைத்துப் போன பணியாட்களுடன்
ஒன்றாகத் திரும்பப் பொறுமையில்லை; அதே நேரம் தன் வேகத்திற்கு அவர்களை வற்புறுத்தவும்
விருப்பமில்லை. தேர்ப்பாகனுக்கு அவன் சுட்டிக்காட்டும் காட்டுக் கோழி,
உள்ளுறையாகத் தலைவியைக் காணும் வேட்கை மிகுந்த தலைவனையே குறிக்க வருகிறது.
புதிய உணவைத் தேடி எடுத்துப் பேடைக்குக் கொடுக்க விரும்பும் கோழியும்,
புதிய பொருளைத் தேடிச் சேர்த்துக் கொண்டு தலைவியைக் காணவிரும்பும் தலைவனும்
உணர்வு நிலையில் ஒத்திருக்கிறார்கள், அல்லவா !
'மாயோனன்ன'
எனத் தொடங்கும் கபிலர் பாடல்
(நற்றிணை-32)
|
ஆசிரியர் கபிலர் பற்றிய குறிப்பை நற்றிணை -
பாடம் எண்
1 இல் காண்க.
திணை : குறிஞ்சி
கூற்று : தலைவிக்குக் குறைநயப்புக்
கூறியது.
தலைவியைச் சந்திக்க விரும்புகிறான் தலைவன்.
அவனுடைய
குறைதீர்க்க ஒப்புக்கொண்ட தோழி, தலைவியிடம்
அதனை
மென்மையாகச் சொல்கிறாள். தலைவியோ
தலைவனை
அறியாதவள் போலப் பாவனை செய்கிறாள். இதனால் வருந்திய
தோழி சற்று வன்மையாகப் பேசித் தலைவனது
குறைநீக்க
இசையுமாறு தலைவியை வேண்டுகிறாள். (குறைநயப்பு
:
குறைதீர்க்க வேண்டுவது)
தோழி தலைவியிடம்,
‘தோழி ! திருமாலைப் போன்ற கரிய மலைப் புறத்தில், பலதேவனைப் போல வெள்ளருவி
வழியும் அழகிய மலைநாட்டுத் தலைவன் நம்மை விரும்பி நாள்தோறும் நம் புனத்தருகே
வந்து வருந்தி நிற்கிறான். நான் சொல்லும் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள
மறுக்கிறாய். என் சொல்லை ஏற்காவிட்டாலும் சரி. நீயே அவன் நிலையைப் பார்.
என்னைவிட உன் மீது அன்புடைய உன் தோழியரிடமும் பேசி ஆராய்ந்து கொள். அறிய
வேண்டியதை அறிந்து அவனோடு அளவளாவு. ஏனென்றால் அவன் வேண்டுகோள் மறுப்பதற்கு
அரியதாக உள்ளது.
சான்றோர்கள் தமது நட்பை வேண்டி
வந்தவர்களிடம்
முதலிலேயே அவர்களின் குணம் செயல்களை
ஆராய்ந்து
நட்புக் கொள்வர். முதலில் நட்புக் கொண்டுவிட்டுப்
பிறகு
அவர்களுடைய குணம் செயல்களை
ஆராய்ந்து
கொண்டிருக்கமாட்டார்கள்’ என்று கூறுகிறாள்.
பெரியோர் |
நாடி நட்பின்
அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே |
நட்புக்கொண்டு
விட்டபின் ஆராயக் கூடாது என்று தோழி சொல்வதிலிருந்து தலைவி தலைவனுடன் முன்பே
இயற்கைப் புணர்ச்சியில் தொடர்பு கொண்டிருக்கிறாள் என்பது புலனாகின்றது.
நாடாது நட்டலில்
கேடில்லை ; நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு |
எனும் திருக்குறள் (791) கருத்துத்
தோழி கூற்றில்
அமைந்துள்ளது ஒப்பு நோக்கற்குரியது.
மொத்தத்தில், அகப்பாட்டு மரபில் வெளிப் பேச்சின்
பொருள்
ஒன்றாகவும் உட்கருத்து வேறொன்றாகவும்
இருப்பதற்கு
இப்பாடலும் ஓர் எடுத்துக்காட்டு. தலைவி மறுப்பதுபோலிருப்பதும்,
தோழி கெஞ்சியும் மிஞ்சியும் வேண்டுவதுபோல் பேசுவதும்
-
இவை எல்லாம் காதலின் நளினமான
மறைமகிழ்வு
விளையாட்டுக்களே என்பதைப் புரிந்துகொள்வது கடினமில்லை.
இவளே கானல் நண்ணிய
எனத் தொடங்கும் பாடல் (நற்றிணை-45)
புலவர் பெயர் காணப்படவில்லை.
திணை : நெய்தல்
கூற்று : குறைவேண்டிய தலைவனைத் தோழி
சேட்படுத்தது.
அதாவது, தலைவன்
தன் குறை கூறிப் பாங்கியிடம் தலைவியைச் சந்திக்க உதவுமாறு பணிந்து வேண்டுகிறான்.
‘எம்மைவிட உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவன் நீ. நாங்கள் உனக்குப் பொருத்தமானவர்கள்
இல்லை' எனப் பாங்கி குலமுறை கூறி மறுத்து விலக்குவது. (சேட்படை - விலக்குதல்)
தோழி தலைவனிடம், ‘கடற்கரைச்
சோலையில் உள்ள அழகிய சிறுகுடியில் வாழ்வோர் பரதவர்கள். நீலப் பெருங்கடல்
கலங்க அதன்மீது சென்று வலைவீசி மீன் பிடிப்போர். இத்தகைய பரதவர்குலப் பெண்
இவள். ஆனால் நீயோ, பெருங்கொடிகள் அசைந்தாடும் வீதிகளையுடைய பழைமையான ஊரில்,
விரைந்து செல்லும் தேர்களையுடைய செல்வனுக்கு அன்பு மகன். இங்கே காய வைக்கப்பட்டிருக்கின்ற
சுறாமீன் தசைகளைப் பறவைகள் கவர்ந்து செல்லாமல் ஓட்டிக் காக்கின்ற எமக்கு
நீ என்ன நன்மை செய்துவிட முடியும்? சுறாவை அறுத்துப் பரப்பியுள்ள எங்கள்
மீது நாறும் புலால் நாற்றத்தை உன்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஆகவே
எங்கள் அருகே வராதே. அகன்று போய்விடு. கடல்நீரையே விளைநிலமாகக் கொண்டு
வாழும் எமது சிறிய வாழ்க்கை உன்னோடு ஒத்ததன்று. எமக்கு, எம் போன்ற பரதவர்
குலத்திலும் உன்னைப் போன்ற செல்வர்கள் உண்டு ! என்று கூறுகிறாள்.
பெருநீர் விளையுள்எம் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்மனோரின் செம்மலு முடைத்தே |
(புரைவது
= ஒப்பது) இவ்வாறு தோழி
தலைவனை விலக்குவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உண்மையான மறுப்பா இது?
இல்லை. அகப்பாடல் மரபு அறிந்தோர் இதனைப் புரிந்து கொள்ள முடியும். தலைவியைச்
சந்திக்க எளிதில் இடம் கொடாமல் தவிர்ப்பதன் மூலம், அவள் (கிடைத்தற்கு)
அரியவள் என்பதை அவன் உணரவேண்டும்; மணந்து கொள்வதன் மூலமாக அன்றி அவளை எளிதில்
அடையமுடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே தோழியின் நோக்கம்.
மலைகண்டன்ன
எனத் தொடங்கும் தூங்கலோரியார் பாடல் (நற்றிணை-60)
தூங்கலோரியார்
ஓரான்
வல்சிச் சீரில் வாழ்க்கை -
அதாவது ஒரு பசுவினால் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழும் வாழ்க்கை
சிறப்பில்லாதது எனப் பாடியதன் மூலம் பொருளாதார வாழ்வுக்கு இவர் கொண்ட அளவுகோல்
எது என்பது புலப்படுகிறது. நற்றிணையில் ஒன்றும் குறுந்தொகையில் இரண்டுமாக
இவர் பாடிக்கிடைத்த பாடல்கள் மூன்றேயாகும்.
திணை : மருதம்
கூற்று
: சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது.
தோழி உழவனோடு பேசுவது போலத் தலைவனுக்குக் கருத்து
உணர்த்துகிறாள். வேலிப்புறமாகக் காத்து நிற்கும் தலைவனுக்குத்
தலைவி இற்செறிக்கப்பட்டதை மறைமுகமாகத்
தெரிவித்து,
விரைவில் அவன் தலைவியை மணந்து கொள்ள வேண்டும்
என்பதையும் உணர்த்துகிறாள்.
(இற்செறிப்பு
:- தலைவியை அன்னை இல்லத்திற்குள் தடுத்து வைத்தல்)
உழவனை நோக்கித் தோழி
சொல்கிறாள்: எருமைகளைப் பூட்டி உழுகின்ற உழவனே! மலைபோல உயர்ந்து தோன்றுகின்ற
நெற்கதிர்க் குவியல்களை உடையவனே! விடியலிலேயே வயலுக்குச் செல்ல வேண்டும்
என்பதனால் இரவில் உறங்காமல் காத்திருந்திருக்கிறாய்! குளிர்ந்த வைகல் பொழுதில்,
குழம்பில் கிடக்கும் கருங்கண் வரால் மீனின் பெரிய துண்டுகளோடு அரிசிச்
சோற்றை விருப்பமிக்க கையால் நிறைய அள்ளி மயக்கமேற உண்டு, நீர்நிறைந்த கழனிச்
சேற்றில் நாற்று நடுவதற்காக உழத்தியரோடு செல்கின்றாய். அவ்வயலில் உள்ள
வளமான கோரைகளையும் நெய்தல்களையும் ‘களை’ என்று களையாமல் விட்டுவிடு. இப்போது
வெளிவர முடியாத எங்கள் வீட்டுக் கருங்கூந்தல் மடந்தை பின்னர் வந்து கோரையை
வளையலாகப் பூண்டுகொள்வாள்; நெய்தல் தழையை ஆடையாக அணிந்து கொள்வாள்!
இவ்வாறு தலைவி வீட்டுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதைத்
தோழி மறைமுகமாகத் தலைவனுக்கு உணர்த்துகிறாள்.
அமுதம் உண்க நம் அயலிலாட்டி
எனத் தொடங்கும் கபிலர் பாடல் (நற்றிணை-65)
கபிலர் : இப்புலவர் பற்றிய குறிப்பை நற்றிணை - பாடம்
எண் 1-இல் காண்க.
திணை : குறிஞ்சி.
கூற்று : விரிச்சி பெற்று வந்த தோழி, தலைமகட்குச்
சொல்லியது.
வருவதாகக் குறித்த பருவத்தில் தலைவன் வரவில்லை. தலைவி
வருந்தியிருக்கிறாள். தலைவன் வந்துவிடுவான்
என்று
தலைவியைத் தேற்றும் தோழி, அதற்கு
ஆதாரமாக ஒரு
நற்சொல் கேட்டுவந்திருப்பதைச் சொல்கிறாள். பக்கத்து வீட்டுப்
பெண்மணி வேறொருத்தியோடு பேசிக்கொண்டிருக்கும் போது
அவள் தன் போக்கில் ‘அவன் இப்போதே வந்துவிடுவான்’
என்று சொன்னதைக் கேட்ட தோழிக்கு, அது தங்களுக்கு வந்த
நற்சொல்லாகத் தோன்றுகிறது. தலைவியிடம்
அதனைத்
தெரிவிக்கிறாள்.
(விரிச்சி கேட்டல் :- நல்ல நிமித்தமாக ஒரு நற்சொல்
கேட்டல்.
இது அக்காலத்து நம்பிக்கை. மணியடித்தால், ‘நல்ல சகுனம்’
என்று இப்போது சொல்வது போன்றது.)
தோழி தலைவியிடம்,
‘காட்டாற்றில் உள்ள பாசி அலையால் அடித்துச் செல்லப்பட்டு எங்கும் கலக்குமாறு
வெள்ளருவி பாயும் துறையில் யானை புலியோடு பாய்ந்து போரிட்டுப் புண்பட்டுத்
தளர்ந்து கிடக்கிறது. அந்த நிலையில் அதன் தந்தத்தை எடுக்க விரும்பும் அன்பற்ற
வேடர்கள் யானையின் மீது அம்புகளைப் பாய்ச்சுகின்றனர். வலியால் பிளிறும்
யானையின் பேரொலி இடிமுழக்கம் போல இருக்கிறது. இத்தகைய காட்சிகளையுடைய பெரிய
மலைநாடன் இன்னும் வரவில்லையே என்ற கவலையுடன் நாம் இருக்கும்போது, நம் அயல்வீட்டுப்
பெண்மணி, நமக்கு ஒரு நல்ல நிமித்தமாகக் கிடங்கில் என்ற ஊரைப் போன்ற இனிமையுடைய
சொல்லால், ‘அவன் இப்போதே வருவான்’ என்று சொன்னாள். அவள் 'அமுதம் உண்பாளாக’
என்று கூறுகிறாள்.
அமுதம் உண்கநம் அயலிலாட்டி
(அயல் இல் ஆட்டி = அடுத்த
வீட்டுப் பெண்மணி)
ஒருவரை மகிழ்ந்து வாழ்த்தும்போது ‘அமுதம்
உண்க’ என
வாழ்த்துவது அக்கால மரபு. இப்பொழுது கூட நல்ல விதமாகச்
சொல்பவரிடம் ‘உங்கள் வாய்க்குச் சர்க்கரை போட வேண்டும்’
என்கிறோமல்லவா ! விரிச்சி கேட்பது, நம்புவது போன்றவை
இப்போதும் உண்டு.
புலியோடு யானை போரிட்ட
வர்ணனை உள்ளுறைப் பொருளுடையது. புலியோடு போரிட்டுப் புண்பட்ட யானை, காமநோயோடு
போரிட்டுப் புண்பட்ட தலைவியையும், யானையின் கொம்புக்காக வேடர் அம்பு எய்துவது
தலைவி உயிருக்கே அழிவு உண்டாகுமாறு அயலார் அலர் தூற்றுவதையும், யானை அலறுவது
தலைவி வருந்துவதையும், யானை முழக்கம் இடிபோல மலைப்பக்கங்களில் சென்று கேட்பது
தலைவியின் நிலை பற்றித் தலைவன் அறிந்ததையும் குறிப்பாக உணர்த்துகின்றன.
பல்கதிர் மண்டிலம்
எனத் தொடங்கும் சேகம் பூதனார்
பாடல் (நற்றிணை-69)
சேகம் பூதனார்
மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார்
எனவும் இப்புலவர்
அழைக்கப்படுகிறார். சேந்தன் என்பது இவர் தந்தையைக்
குறிக்கலாம். பெரியோரைப் போற்றும் பண்புள்ளவர்
இவர். திறவோர் செய்வினை அறவதாகும் என இவர்
பாடுவது
கொண்டு இதனை உணரலாம்.
திணை : முல்லை
கூற்று : வினைவயிற் பிரிதல் ஆற்றாளாகிய தலைவி
சொல்லியது.
பிரிந்து போன தலைவன்
குறித்த பருவத்தில் வரவில்லை. தலைவி ஆற்றாதவளாகிறாள். மாலைப் பொழுதில்
வளரும் காதல் உணர்வுகளால் துன்புறுகிறாள். ‘இதே வகையிலான மாலைப் பொழுது
தலைவர் இருக்கும் நாட்டிலும் வந்திருந்தால் அவர் வினையை விட்டு இங்கு வந்திருப்பாரே
! இத்தகைய மாலைப் பொழுது அங்கு வரவில்லை போலிருக்கிறது’ எனக் கூறி வருந்துகிறாள்.
(வினைவயிற்பிரிவு: ஓதல், பகை ஒழித்தல், தூது போன்ற காரணங்களுக்காகப் பிரிதல்.)
தலைவி தனக்குள் பேசிக்கொள்கிறாள் :
‘கதிரவன் பகலை
உருவாக்கி முடித்து உயர்ந்த பெரு மலையின் பின்னே சென்று மறைகிறான்; பறவைகள் தம் குஞ்சுகள் இருக்கும் கூடுகளை அடைகின்றன; காட்டில், கரிய பிடரியையுடைய கலைமான்
தன் இளம் பெண்மானைப் போய்த் தழுவுகிறது; முல்லை
மொட்டு வாய் திறக்கிறது; புதர் தோறும் காந்தள் தழைத்துத்
தன் மலர்களை விளக்குப்போல் ஏந்தி நிற்கின்றது; மதர்த்த
பசுவினது கழுத்து மணியோசை வளைந்த கோலையுடைய
இடையர்களின் குழலோசையோடு இணைந்து மென்மையாகக் கேட்கிறது.
தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் எனக்கு இந்த அழகிய மாலை
அருளில்லாத (இரக்கமற்ற) மாலை.
வினைமுடிக்கச் சென்றிருக்கும் தலைவர் இருக்கும் நாட்டிலும்
இந்த ‘அருளில்மாலை’ இதே தன்மையுடன்
தோன்றினால் வினைமேல் உறுதியோடு அங்கே தங்கியிருக்கக்
கூடியவர்
அல்லர் அவர். ஆகவே அங்கே
மாலைப்பொழுது
இத்தகையதாக இல்லைபோலிருக்கிறது !
பருவம் தாண்டியும்
தலைவன் மீண்டுவராத போது தலைவியைத் துன்புறுத்தும் மாலையை ஓர் உயிர்ப்பொருள்
போல ‘அருளில்மாலை’ என வருணிக்கிறார் புலவர். ‘உரன்மாய் மாலை’ என இளங்கீரனார்
(நற்.3) வருணித்திருப்பதை இங்கு ஒப்பிடலாம். ‘பிரிந்து சென்றவர் இருக்கும்
நாட்டில் தீப்போன்ற இந்த மாலை வருவதுண்டோ’ என இளங்கோவடிகள் காட்டும் தலைவி
கூறுவதும் ஒப்பிடத்தக்கது.
தணந்தார்
நாட்டு உளதாங்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருண் மாலை
(சிலப்பதிகாரம், கானல் வரி)
சிறுவெள்ளாங்குருகே
எனத் தொடங்கும் வெள்ளிவீதியார்
பாடல் (நற்றிணை-70)
வெள்ளிவீதியார்
இவர் பெண்பாற் புலவர். இவர்
பாடிய பல பாடல்கள் தம்
சொந்த வாழ்வு அனுபவங்களிலிருந்து பிறந்தவை
எனச் சொல்லப்படுகிறது. ஏதோ காரணத்தால் கணவனைப்
பிரிந்து வாழ்ந்தவர்; ‘வெள்ளிவீதியைப் போலத் துன்புற்று அலைகிறேன்’
என ஒளவையார் பாடலில் வருவது கொண்டு இதை உணரலாம்.
பிரிவின் அவலம் மிகக் கூர்மையான வடிவு பெறுகிறது இவர்
பாடல்களில்.
திணை : மருதம்
கூற்று : காமம் மிக்க கழிபடர்
கிளவி.
இரவுக்குறியிலோ பகற்குறியிலோ தலைவியைச்
சந்தித்து வந்த
தலைவன் சிலநாட்களாக வரவில்லை. காதல் வேட்கையால்
தலைவி வருந்துகிறாள். தலைவன் தன்னை வரைந்து (மணந்து)
கொள்ள வேண்டும் எனும் விருப்பத்தை நாரைக்குச் சொல்வது
போலத் தோழிக்கு உணர்த்துகிறாள். காமம் மிக்க
கழிபடர்
கிளவி : காமம் மிகுவதனால் உண்டாகிய மிகுந்த துயரத்தை
உணர்த்தும் கூற்று.
தலைவி நாரையை நோக்கி ‘சிறுவெள்ளைக்
குருகே ! சிறு வெள்ளைக் குருகே ! சலவைத்
துறையில் துவைத்த தூய வெள்ளாடைமடி போன்ற ஒளிவிடும் சிறுவெள்ளைக்
குருகே ! தலைவருடைய ஊரின் இனிய நீர்
இங்குவந்து பரவும்
அளவுக்கு அது அருகிலேயே உள்ளது; அங்கும் நீ
இரைபெற முடியும். கழனிகள் மிகுந்த
அவ்வூர்த்
தலைவராகிய என் தலைவரிடம் சென்று என் அணிகலன்கள்
கழலுமாறு நான் மெலிந்து வருந்துவதைச்
சொல்லாமல்
விட்டுவிட்டாயே ! வா ! எம்மூர்க்கு வந்து எமது பொய்கைத்
துறையில் புகுந்து சினையுள்ள கெளிற்று மீனைத் தின்றுவிட்டு
அவர் ஊர்க்குப் போ. இந்த நன்றியை மறவாமல் அவரிடம்
என் துயரைச் சொல்லக்கூடிய அன்பு உன்னிடம் இருக்கிறதா?
அல்லது பெரும் மறதிக்கு ஆட்படுவாயா?’ எனக் கேட்கிறாள்.
காம உணர்வு மறைவாக
மனத்துள் இருப்பது; அதை வெளிப்படுத்துவது பண்பாட்டுக்குறைவே. ஆயினும் துயரம்
மிகுதியாகி விடும்போது ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’யை மரபு அனுமதிக்கிறது.
அவள் துயரத்தின் வெளிப்பாடாக மட்டுமன்றி, தோழி கேட்கக் கூறுவதனால் வரைதல்
வேட்கையாகவும் அமைகிறது.
பிரசங் கலந்த
எனத் தொடங்கும் போதனார் பாடல்
(நற்றிணை-110)
போதனார்
9 அடி முதல் 12 அடி
வரையுள்ள பாக்களின் தொகுப்பு நற்றிணை. விதிவிலக்காக இருபாடல்கள்
13 அடி கொண்டு அமைந்தவை. அவற்றுள் ஒன்றைப் பாடியவர் இப்புலவர். இவரைப்
பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. இவருக்குப் போத்தனார் எனும் பெயரும் உண்டு.
இப்பாடல் பாலை, மருதம் எனும்
இரண்டு திணைகளுக்கும்
பொருந்துவதாக உள்ளது. தலைவனுடன் தலைவி உடன் போக்கில்
சென்றுவிடும் நிகழ்வைக் குறிக்கிறது எனக்கொண்டால்
இது
பாலைத்திணை; துறை: மனைமருட்சி. மணம் புரிந்து வாழும்
தலைவி தன் மனையில் எவ்வாறு வாழ்கின்றாள் என்பதைச்
செவிலியோ, தோழியரோ கண்டு கூறுவது எனக்கொண்டால் இது
மருதத்திணை. மருதத்திணையில் செவிலி கூற்றாகக் கொண்டால்
‘மகள் நிலையுரைத்தல்’ என்னும் துறை. தோழியர் கூற்றாகக்
கொண்டால் ‘வாயில்கள் தமக்குள் கூறிக்கொண்டது’ என்னும்
துறை.
அ) பாலை : மனைமருட்சி
தலைவி தலைவனோடு உடன்போக்கில்
சென்று விட்டாள்
என்பதை அறிந்த நற்றாய்
(பெற்றதாய்) மிகுந்த இளமைத்தன்மையுடைய
மகள் கணவனின் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளுமளவு அறிவும்
ஒழுக்கமும் எப்படிப் பெற்றாள்
என வியந்தும் வருந்தியும் பேசுகிறாள். (மனைமருட்சி : மனையில் இருந்துகொண்டு வருந்துதல்.)
ஆ) மருதம் : மகள் நிலையுரைத்தல்
தனது மகளின் இல்வாழ்க்கைச் சிறப்பைப் பார்ப்பதற்காக
மகள்
வீடு சென்று திரும்பிய செவிலி, நற்றாயிடம், இளமை மாறாத
மகள் கணவன் வீட்டு நிலைமைக்கேற்ப, குடும்பம் நடத்தும்
அறிவும் ஒழுக்கமும் எங்குப் பெற்றாள் என வியந்து கூறுகிறாள்.
இ) மருதம்
தோழி முதலிய வாயில்கள்
தம்முள் கூறிக்கொண்டது.
இளமைத்தன்மை மாறாத தலைவி, கணவன் வீட்டுக்கு வந்தவுடன்
இங்குள்ள நிலைமைகளுக்கேற்ப நடந்து கொள்ளும் அறிவும்
ஒழுக்கமும் எவ்விதம் அறிந்தாள் என வியந்து தம்முள் பேசிக்
கொள்கின்றனர். (வாயில் : சிலவேளைகளில் கணவன் சார்பாக
மனைவியிடம் பேசுவோர்.) மூன்றாவதாகச் சொல்லப்பட்ட துறையே
மிகவும் பொருத்தமானது எனலாம்.
பாடல்பொருள் : (செவிலி அல்லது நற்றாய் அல்லது தோழியர் கூற்று)
‘தேன்கலந்த சுவைப்பாலைப்
பொற்கிண்ணத்தில் இட்டு ஏந்திக் கொண்டு, மற்றொரு கையில் பூங்கொத்தை நுனியிலுடைய
சிறிய கோலை ஓங்கி வீசிப் ‘பாலை உண்ணு’ என்று சொல்லி அடித்தால், முத்துப்
பரலையுடைய பொற்சிலம்பு ஒலிக்கப் பாய்ந்தோடுவாள். கூந்தல் நரைத்த முதிய
செவிலியர்கள் பின்தொடர்ந்து ஓடிப் பிடிக்கமுடியாமல் தவிப்பார்கள். முன்றிலிலிருக்கும்
பந்தலின் கீழே ஓடி நின்று கொண்டு ‘பாலை உண்ணமாட்டேன்’ என மறுத்துரைப்பாள்.
அப்படிப்பட்ட விளையாட்டுச் சிறுமி பக்குவமான அறிவு முதிர்ச்சியையும் ஒழுக்கத்தையும்
எங்குக் கற்றாள்? தன்னைக் கைப்பிடித்த கணவனின் குடி வறுமையுற்ற நிலையில்
தன்னை ஈன்ற தந்தையின் வளமான உணவை, செல்வத்தை நினைக்காமல், ஓடும் ஓடைநீரில்
இடையிடையே நுண்மணல் திட்டு கிடப்பது போல் ஒரு நேரம் விட்டு ஒரு நேரம் உண்ணுகின்ற
மனவலிமை பெற்று விட்டாளே !’
|
கொண்ட கொழுநன் குடிவறன்
உற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்....
பொழுது மறுத்து உண்ணும் சிறுமதுகையளே |
(வறன் = வறுமை; உள்ளாள்
= நினையாள்; மதுகையள்
= மனவலிமை உடையவள்.)
‘அவளா இவள்?’ என்பதைப் போன்ற வியப்பைக் காட்டும் பாடல்
இது.
சிலரும் பலரும்
எனத்தொடங்கும் உலோச்சனார் பாடல்
(நற்றிணை-149)
உலோச்சனார்
இவர் நெய்தல் திணையை மிகுதியாகச்
சிறப்பித்துப் பாடுவது கொண்டும், அழகிய நெய்தல் நில
வருணனைகள், பரதவர்
பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைத் தருவது
கொண்டும்
இவரைப் பரதவ மரபினர் எனக் கருதுவது உண்டு. உலோச்சு
என்பது சமணர் செய்து கொள்ளும் கிரியை. ஆகவே இவர்
சமணர் என்று கொள்ளுவதற்கும் இடம் உண்டு. இப்பாடலுக்கும்
இரு துறைகள் சொல்லப்படுகின்றன.
திணை : நெய்தல்
துறை 1
தலைவி உடன்போக்கை ஏற்றுக்கொண்டு, தலைவனோடு செல்ல
விரும்புவதைத் தோழியிடம் கூறுவது.
துறை 2
தோழி தலைவியை உடன்போக்கில் செல்லுமாறு வலியுறுத்துவது.
இக்கருத்தை நேரடியாகத் தலைவியிடம்
சொல்வதாகவும்
கொள்ளலாம். தலைவன் சிறைப்புறமாக நிற்க, அவன் கேட்குமாறு
சொல்வதாகவும் கொள்ளலாம்.
பாடல்பொருள்
தலைவி தோழியை நோக்கிக்
கூறுகிறாள்: ‘தோழி ! நம்
தெருவிலுள்ள பெண்கள் சிலரோ பலரோ
ஆங்காங்குக்
கூடிநின்று, கடைக்கண்ணால் நோக்கி, மூக்கில் விரல் வைத்துப்
பழிச்சொல்லால் தூற்றுகிறார்கள். அதைக் கேட்ட அன்னை
சிறுகோலால் என்னை அடிக்கிறாள். மிகவும் துன்புறுகிறேன்.
இதிலிருந்து விடுபட ஒருவழிதான் உண்டு.
பூமணம் வீசும்
பிடரிமயிரையுடைய, விரைந்து செல்லும் குதிரை பூட்டிய
நெடுந்தேரைச் செலுத்திக் கொண்டு நடுயாமத்தில்
வரும்
தலைவனுடன் உடன்போக்கில் செல்வதற்கு நான் உடன்படுகிறேன்.
நான் போனபிறகு இந்த ஊர் என்ன செய்யும்? வேண்டுமானால்
அலரைச் சுமந்து கொண்டு ஒழியட்டும் !’
|
செலவயர்ந் திசினால்
யானே
அலர்சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே |
(அழுங்கல் ஊர் = இரக்கத்துக்குரிய
ஊர்.)
தோழி கூற்றாகக் கொண்டால், ‘நீ உடன்போக்கில் செல்ல
நான்
உடன்படுகிறேன்’ என்று தலைவியிடம் கூறியதாகக்
கொள்ள வேண்டும்.
விளையாடு ஆயமொடு
எனத்தொடங்கும் பாடல்
(நற்றிணை-172) ஆசிரியர் பெயர் காணப்படவில்லை
திணை : நெய்தல்
கூற்று : பகற்குறி வந்த தலைமகனைத் தோழி வரைவு கடாயது.
குறிப்பிட்ட பகற்குறியில் இனிச்சந்திக்க
வேண்டாம் எனச்
சொல்வதன் மூலமாகத் தவைனிடம் தலைவியை
மணந்து
கொள்ளுமாறு வேண்டுகிறாள் தோழி.
இப்பாடலுக்குக்
‘குறிபெயர்த்தீடு’ எனும் துறையும் சொல்லப்படுகிறது.
குறியிடத்தை மாற்றி வேறொரு குறியிடம்
கூறல் என்பது
இதன்பொருள். பாடலில் இவ்விரு துறைக்கருத்துகளும்
உள்ளன. (பகற்குறி : பகலில்
தலைவன் தலைவியைச்
சந்திக்க ஏற்பாடு செய்து வைத்த இடம்.)

தோழி
தலைவனை
நோக்கி, ‘புதியராக வந்த பாணர் பாடும்
மெல்லிய இசைபோல வலம்புரிச் சங்கு ஒலி
உண்டாக்குகின்ற
நெய்தல் நிலத்
தலைவனே !
முன்பொரு நாள்
நாங்கள் தோழிகளோடு
விளையாடிக் கொண்டிருக்கும்போது வெண்மணலில் முற்றிய
புன்னை விதை ஒன்றைப் புதைத்து வைத்து மறந்துவிட்டுப்
போய்விட்டோம். பின்னொரு நாள் பார்த்தபோது
அது
முளைவிட்டிருந்தது. மகிழ்ந்த நாங்கள் நெய் கலந்த
பால்
ஊற்றி அப்புன்னையை அன்பாக வளர்த்தோம்.
அதைப்
பார்த்த எங்கள் அன்னை எங்களிடம் ‘நீங்கள் வளர்த்துவரும்
புன்னை உங்களை விடச் சிறந்தது; உங்கள் தங்கை
போன்றது’ என்றாள். இதோ நிற்கும் இந்தப் புன்னை எங்கள்
தங்கை. இதன் எதிரில் உன்னோடு
சிரித்து விளையாடி
மகிழ்வதற்குத் தலைவி வெட்கப்படுகிறாள்.
நீ இவளை
அணைத்து அருள் செய்ய விரும்பினால்
வேறு மரநிழல்
எவ்வளவோ உள்ளன’ என்று கூறுகிறாள்.
|
நும்மினும் சிறந்தது
நுவ்வை ஆகுமென்று
அன்னை கூறினள் புன்னையது சிறப்பே
அம்ம நாணுதும் நும்மொடு நகையே |
(நுவ்வை - நும் தங்கை.)
சந்திக்க வேறு மரநிழலும் உண்டு எனத்
தோழி கூறினாலும்
இனிப் பகற்குறிச் சந்திப்பு வேண்டாம் என்பதுதான் குறிப்பான
வேண்டுகோள். அதன் உட்கருத்து தலைவன்
தலைவியை
மணந்து கொள்ள வேண்டும் என்பதாகும்.
தன் மதிப்பீடு : வினாக்கள்
- I
|
1.
| இதுவரை பயன்படுத்தாத
தாற்றுமுள்ளைப்
பயன்படுத்துமாறு தலைவன் பாகனை வேண்டுவது
ஏன்?
|
|
2.
| மாயோனன்ன எனும் கபிலர் பாடலில் இடம்பெறும்
திருக்குறள் கருத்தை எடுத்துக்காட்டுக.
|
|
3.
| விரிச்சி கேட்டல் என்றால் என்ன?
|
|
4.
| பொழுது மறுத்து
உண்ணும் தலைவி
பாராட்டப்படுவது ஏன்?
|
|
|