தாம் வெளிப்படுத்த எண்ணும்
கவிதைப் பொருளை, தாம்
கருதிய அளவு உணர்ச்சிச் செறிவுடன் வெளிப்படுத்துவதற்குப் புலவர்கள்
பயன்படுத்தும் உத்தி முறைகளை இனிக் காணலாம்.
3.2.1
இயற்கைப் பின்னணியில் காதல் வாழ்வு
இதுவரை நாம்
படித்திருக்கின்ற அகப்பாடல்களில்
இயற்கைப் பின்னணி இருவிதமாக அமைந்திருப்பதை நீங்கள்
கவனித்திருக்கலாம். இயற்கை எப்போதும் அழகியது.
பாலை
நிலம் கூட ஓவியமாக, கவிதையாகச் சித்திரிக்கப்படும்
போது
நம் மனத்தில் அழகுணர்ச்சியை எழுப்பவே செய்யும். இத்தகைய
இயற்கையை மனித வாழ்வினிடையே ஊடாட
விடுகின்ற
கவிஞர் 1) அகவாழ்வின் இன்பத்துக்கும் 2)
அகவாழ்வின்
துன்பத்துக்கும் அதைப் பின்னணியாக்குகிறார். மானும், மயிலும்,
கோழியும், பூக்களும்,
மரங்களும், எருமையும்,
குளமும் எல்லாம் தாம் இருந்தவாறு இருந்து கொண்டே மேலே
குறிப்பிட்ட இருவகை உணர்வுகளுக்கும் பின்னணி ஆகின்றன.
அதாவது இன்பம் தரும் இயற்கைப் பொருளை இன்பமாகவே
எடுத்துக் கொள்வதும், இன்பம் தரும் இயற்கைப் பொருளைத்
தம்மைத் துன்புறுத்தும் பொருளாக எடுத்துக் கொள்வதும் அந்த
அகப்பாட்டுப் பாத்திரங்களின் அப்போதைய உணர்வுகளைப்
பொறுத்திருக்கின்றன. மழையும், ஈரநிலமும், பூக்களும்
ஒரு
முல்லைத்திணைப் பாடலில் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கின்றன
என்றால் வேறொரு முல்லைப் பாடலில்
அவலத்தைப்
பிரதிபலிக்கின்றன.
விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனாரது முல்லைத்
திணைப்
பாடலில் (நற்றிணை-242) மழையில் முல்லைநிலம்
குளிர்வது,
பிடவத்தின் ஈரமலர் அரும்புவது, முல்லை அரும்பு அவிழ்வது,
கொன்றை பொன்போல் பூப்பது, காயாம் பூ நீலமணிபோல்
மலர்வது என இவ்வாறு தலைவனுடைய
பார்வைபடும்
இடமெல்லாம் காடு, மலர்க்காடாகத்
தோற்றமளிக்கிறது.
தலைவனின் மன மலர்ச்சியும் இயற்கையின் மலர்ச்சியும் ஒன்றித்
தோன்றுகின்றன. பிரிவுக்குப் பின் தலைவியை
மீண்டும்
கூடவிருக்கும் தலைவனின் மனச் சிலிர்ப்பை ஒரு சொல்லில்
கூடச் சொல்லாமல் இயற்கையின் சிலிர்ப்பை மட்டுமே
காட்டுகிறார் புலவர். இதைப் போன்றே, முல்லையின் அழகுகள்
சேகம்பூதனார் பாடலில் (நற்றிணை-69) தலைவியின்
மனநிலைக்கேற்பத் துன்பம் தருவதாகக் காட்டப்பட்டிருப்பதை
முன்பு கண்டோம்.
மருங்கூர்ப் பட்டினத்துச்
சேந்தன் குமரனாரது முல்லைத் திணைப் பாடல் (நற்றிணை-289) பிரிவிடைப்
பருவம் கண்டு ஆற்றாத தலைவியின் நிலையைச் சொல்வது. பருவம் வந்து விட்டது.
அதன் தோற்றமோ, அழகோ அல்ல, அதன் வருகையே தலைவியைத் துன்புறுத்துகிறது.
தலைவர் வாய்மை தவறாதவர், பருவம்தான் முந்திவிட்டது எனக் கார்காலத்தைத்
தன் எதிரியாகப் பார்க்கிறாள். மழையையும் இடியையும் வருணிக்கப் பயன்படுத்தும்
வழக்கமான அடைமொழிகள்தாம் ‘கனைப் பெயல்’ என்பதும், ‘கடுங்குரல்’ என்பதும்.
இப்பாடலில் அவை தலைவியின் மனநிலையோடு ஒத்து இயற்கையைக் கொடுமையானதாகச்
சித்திரிக்கின்றன.
கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனாரது
முல்லைத்திணைப்
பாடலில் (நற்றிணை-364) மாரிக்கால
வருணனை சற்று
வேறுபட்டது. பருவம் வந்தும் தலைவன் வராததனால் வருந்தும்
தலைவிக்காகத் தாமும் வருந்துபவர் போலப்
புலவர்
இயற்கையைக் கடிந்து கொள்ளும் தொனியில் வருணிக்கிறார்.
அடர்ந்த மழைக்காலத்துப் பகற்பொழுதும்கூடச்
சூரியன்
வெளித்தெரியாமல் மாலைப்பொழுது போலக் காணப்படுவது
நாமறிந்ததே. புலவர் சொல்கிறார், ‘பகல் இரவுக்குள் நுழைந்து
விட்டது’ என்பதாக. மாலையும் இரவும்
தலைவியைத்
துன்புறுத்துபவை. பகற்பொழுதாவது வெளிச்சம், சுற்றுச் சூழலில்
மனித நடமாட்டம் இவை காரணமாக ஓர் ஆறுதலாக இருக்கும்.
இப்போதோ, பகலிலும் பகல் இல்லாமல் போய்
விட்டது
எனக் காட்டுவதன் மூலம், தாம் படைத்த
பாத்திரத்தின்
உணர்ச்சியைத் தம் உணர்ச்சியாகவே காட்டுகிறார்.
|
சொல்லிய பருவம் கழிந்தன்று
எல்லையும்
மயங்கிருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி |
(எல்லை = பகல் ;
நடுநாள் = நள்ளிரவு ; மங்குல்
= இருள்)
மழைக் காலத்தைத் தன்
எதிரியாகப் பார்க்கும் தலைவியின் உளவியல் சித்திரிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது.
பனி, தன் கோபம் முழுவதையும் தன்மீது வந்து இறக்குவதாக எண்ணுகிறாள் தலைவி.
பனியின் வாடையொடு
முனிவுவந் திறுப்ப
(முனிவு =
கோபம்)
தலைவி மீது
பனிக்கு என்ன கோபம்? இது அகவயமான பார்வை. எளிதாக விளக்க முடியாது. அவளுடைய
துயர நேரத்தில் அவள் தன்னைச் சூழ்ந்துள்ள எல்லாவற்றையும் சந்தேகக் கண்கொண்டு
பார்க்கிறாள். காமவேதனையைத் தரும் மழைப் பருவத்துக்குத் தன்மீது ஏதோ
கோபமிருக்கக் கூடும் என எண்ணிக்கொள்கிறாள். இது அவளது உளவுணர்வு.
மருதத் திணைப் பாடல்களில் பரத்தையிற்பிரிந்த தலைவன்
மீது
தலைவி ஊடல் கொண்டிருக்கும் நிகழ்ச்சிகளில்,
தலைவன்
அவனது நிலத்து விலங்கான எருமையோடு உள்ளுறையாக
உவமிக்கப்படுவது வழக்கம். பரணர் பாடலில் (நற்றிணை-260)
பரத்தை ஒழுக்கத்துக்காகத் தலைவனைக் கடிந்து பேசும் தலைவி
இவ்வாறுதான் உவமிக்கிறாள். எருமை தன் அருகிலிருக்கும்
தாமரையை மேயாமல் கழுநீர்ப்பூக்களை
மேய்ந்துவிட்டு
வெண்மணல் குன்றில் போய் உறங்கும் சாதாரணமான இயற்கைக்
காட்சியில், தலைவியை விரும்பாமல் காதற்பரத்தையை நுகர்ந்து,
பின்னர்ச் சேரிப்பரத்தையின் மனையில் சென்று
உறங்கும்
தலைவனின் செய்கையைக் குறிப்பால் உணர்த்துகிறார் புலவர்.
பல பாடல்களில் இதே மாதிரியாக எருமை குறியீடாவதால்,
சங்கப் பாடல்களைப் பயிலும் வாசகன்,
மருதத்திணைப்
பாடல்களில் எருமை வந்தால் உள்ளுறை இருக்கிறதா
எனக் கவனிக்கத் தொடங்கி விடுவான்.
முன்பு நாம் கண்ட விழிக்கண்பேதைப் பெருங்கண்ணனாரது
பாடலில் (நற்றிணை-242) கூட்டத்தினின்று
விலகி ஓடும்
குட்டிமானையும் பெண்மானையும் தேடும் ஆண்மான், தன்
குழந்தையையும் தலைவியையும் காண விரும்பும் தலைவனுக்குக்
குறியீடாகின்றது. இது வழக்கமான உள்ளுறையே. ஆண்மானுக்குக்
கவிஞர் தரும் அடைமொழி விளக்கம் தான் இங்குக் கவனிக்கத்
தக்கது. காமர் நெஞ்சமொடு அகலா...
இரலை ஏறு
ஆண்மானின் நெஞ்சம் காமர் நெஞ்சம் - அன்பு
நெஞ்சம்.
விலங்குக்குரிய இயல்பான உணர்ச்சியை (instinct)
விரிவும்
ஆழமும் செய்து மனித நெஞ்சத்தை மானுக்குள் படைத்துக்
காண்கிறார் கவிஞர்.
3.2.2
உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகள்
மதுரைப் பேராலவாயரின்
முல்லைத் திணைப் பாடலில் (நற்றிணை-361) பிரிந்திருந்த தவைனும்
தலைவியும் சந்தித்துக் கொண்ட உவகைச் சூழல் எங்கும் பிரதிபலிப்பதாகக்
காட்டுகிறார் புலவர். அதனால் பாடல் முழுவதிலும் உவகைச் சுவை நிறைந்து
கிடக்கிறது. தலைவனது மகிழ்ச்சியைப் புரிந்து கொண்ட அவனது வீரர்களும்
அவனைப்போல முல்லைப் பூவைச்சூடி மகிழ்கின்றனர். குதிரையும் தலைவனது மனவேகத்தைப்
புரிந்து கொண்டது போல வானத்தைத் தாண்டுவது போன்ற வேகத்துடன் வந்து அவன்
மாளிகை முற்றத்தில் மணல்விரிப்பில் தேரைக் கொண்டுவந்து நிறுத்துகிறது.
தலைவியின் மகிழ்ச்சி தோழியையும் தோழி வாயிலாக மற்றவர்களையும் தொற்றுகிறது.
தனி உள்ளங்கள் என்றில்லாமல் சூழல் முழுவதிலும் மகிழ்ச்சிப் பெருக்கு.
பாத்திரங்களின் தனித்தனிப் பேச்சைக் காட்டாமல், அவர்களது மனநடவடிக்கைகளைக்
காட்டாமல் சூழ்நிலையின் சுறுசுறுப்பைக் காட்டியே உள்ளத்து உணர்ச்சியைப்
புரியவைக்கிறார் புலவர்.
தேய்புரிப் பழங்கயிற்றினாரது பாலைத்
திணைப் பாடலில்
(நற்றிணை-284) பொருள் தேடச் செல்லும்
தலைவனுக்குள்
இடைவழியிலேயே ஒரு போராட்டம் நிகழ்கிறது. நடுவே நின்று
விடுகிறான் தலைவன். தலைவியிடம் திரும்பிப்
போகத்
தூண்டுகிறது நெஞ்சம். நெஞ்சத்தைப் பிணித்திருக்கின்றவள்
அவள். ‘அவளை வருந்தவிடலாமா? ஆகவே திரும்பிப்
போகலாம்’ என்கிறது நெஞ்சம். அவன்
அறிவோ இதனை
எதிர்க்கிறது. ‘எடுத்தசெயலை முடிக்காமல் திரும்புவது இழிவு,
அறியாமை. ஆகவே திரும்பாதே’ என்கிறது.
இவ்வாறு
அறிவுக்கும் மனத்துக்குமிடையே நிகழும் போராட்டத்தில்
இடையே சிக்கித் திணறும் தலைவன், இரண்டு
யானைகள்
எதிரெதிர் நின்று பற்றி இழுக்கும் தேய்புரிப்
பழங்கயிறு
போலத் தன்னை உணர்கிறான். இந்த உவமையே இப்பாடலின்
உணர்ச்சிச் சித்திரிப்புக்குத் தலையாய உத்தியாக அமைகிறது.
ஏறத்தாழத் தன் இறுதி நெருங்கிவிட்டதோ என
அஞ்சும்
தலைவனைப் பாடலில் காண்கிறோம்.
மடல் பாடிய
மாதங்கீரனாரது குறிஞ்சித் திணைப் பாடல் (நற்றிணை-377) தலைவனது
அவல உணர்ச்சியைச் சற்று எல்லை தாண்டியதாகக் காட்டுகிறது. தலைவியைச் சந்திப்பது
மறுக்கப்பட்ட நிலையில் அடுத்து என்ன செய்யலாம் என்ற சிந்தனை போகிற போக்கில்,
மடலேறலாமா? அல்லது இப்படியே காமநோய் முற்றி இறந்து போய்விட மாட்டோமா?
என்ற புலம்பலாக முடிகிறது. தோழியின் நோக்கம் அவனை வரைவுக்குத் (திருமணத்துக்கு)
தூண்டுவதுதான். ஆனால் ஏதோ தடை காரணமாக உடன் வரைய முடியாது போயிருக்கலாம்.
இந்தக் குற்றவுணர்வு காரணமாகவே தலைவி தன் எதிரே தோன்றிக் கடிந்து பேசுவதாக
அவனுக்கு உருவெளித்தோற்றம் உண்டாகிறது என்பதனை முன்னர்க் கண்டோம்.
ஒளவையாரது நெய்தல் திணைப் பாடல்
(நற்றிணை-295)
தலைவியின் மன உளைச்சலை வெளிப்படுத்துவது. தோழியின்
கூற்றில் அது வெளிப்படுகிறது. தலைவி இற்செறிக்கப்பட்டு
விட்டாள். தலைவன் விரைவாக வரைந்து கொள்ள வேண்டும்.
தவறினால் என்ன நடக்கும்? தோழி தலைவனிடம் உணர்ச்சி
ததும்பச் சொல்கிறாள் : ‘நாங்கள் எங்கள்
மனைக்குள்
செல்கிறோம். கள் சாடி போன்ற தலைவியின்
இளமையழகு
வீட்டின் சுவர்களுக்கிடையே கிடந்து அழிந்து
போகும்:
அங்கேயே முதிர்ந்து முடிந்து போவோம் நாங்கள். நீ
நீடு
வாழ்க’ இவ்வாறு, எதிர்காலத்து அவலத்தைத்
தலைவன்
மனக்கண்ணில் நிறுத்துமாறு அமைகிறது தோழியின் உணர்ச்சிக்
கூற்று.
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன்
குமரனாரது பாடல்
(நற்றிணை-289) தலைவி, பருவம் வந்தும் தலைவன்
வாராத
துயரத்திலிருப்பவள், கார்காலம் தன்னோடு தன்னுள்ளேயே
இருந்து கொண்டிருப்பதாக உணர்கிறாள்.
“கார் செய்து
என்னுழையதுவே” கார்காலம் தன்னுடனேயே
இருப்பதென்றால், இது என்ன விதமான உணர்வு? அவள்
மனத்தை, உணர்வை, உடம்பைப் பீடித்து அலைக்கழிக்கும்
பொருளாகி விடுகிறது பருவம். அடுத்து
அவள் தனது
ஆதரவற்ற நிலையைத் தெரிவிக்க ஓர் உவமை சொல்கிறாள்.
வெட்டப்பட்ட மரத்தின் வேரடியை இரவில்
கொளுத்தும்
கோவலர்கள் விடியலில் அதை அணைக்காமல்
விட்டுப்
போய்விடுவார்கள். அந்த நெருப்பு கனன்று கனன்று தானே
தான் அணைய வேண்டும். தலைவி, அந்தக் கனலும் மரவேரடி
போலத் தன்னைக் காண்கிறாள். தனது துன்பம்
அணைக்க
ஆளற்றது என்பதை எண்ணி நோகிறாள். தலைவியுடன் குளிர்ந்த
கார்காலமும் இருக்கிறது: அவளுக்குள் கனலும்
நெருப்பும்
இருக்கிறது : இரண்டும் ஒரேவகைத் துன்பமே எனக் காட்டும்
சேந்தன் குமரனாரது கவிதை, வாசகரிடம் அழுத்தமான உணர்வுப்
பாதிப்பை உண்டாக்கக் கூடியது.
ஆலங்குடி வங்கனாரின்
மருதத்திணைப் பாடலில் (நற்றிணை-330) தோழி தலைவனிடம் பேசும் பேச்சில்
அறிவும் உணர்ச்சியும் சமமாகக் கலந்திருக்கின்றன. பரத்தையிற் பிரிந்து
திரும்பி வந்த தலைவனிடம் தலைவிக்கு அவன் துரோகம்-துன்பம் இழைத்துவிட்டான்
என்ற கண்டனத்தைத் தெரிவிக்கலாம்; குத்திக் காட்டலாம்; இனிச் செய்யாதே
என்று அறிவுறுத்தலாம்; இங்கே திரும்பி வராதே என்று கூடச் சொல்லலாம்.
ஆனால் தோழி இத்தகைய வேக உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்டு அறிவார்ந்த வாதம்
ஒன்றைத் தொடுக்கிறாள். தலைவன் உள்ளத்தில் இருக்கிறதோ இல்லையோ அவளாக ஒரு
கற்பனை நிகழ்வைப் படைத்துக் காட்டுகிறாள். ‘ஒருவேளை, உனக்கு விருப்பமானால்,
பரத்தையரை வீட்டுக்குக் கொண்டு வந்து மணம்செய்து வாழ்ந்து பார். கீழ்த்தரமான
அவர்கள் மனத்தில் கபடமில்லாத உண்மை அன்பு இருக்குமா? இராது. அவர்கள்
உன் குழந்தைகளையும் பெறக்கூடும். ஆனால் எக்காலத்தும் அவர்கள் கற்புடைய
குலமகளிர் வரிசையில் அமரத் தகுதி பெற்றவர்களாக முடியாது’. தலைவன் போக்கிலேயே
சென்று, தவறு என்று காட்டித் திருப்பிக் கொண்டு வரும் இந்த வாதத் திறமைக்குள்
தோழியின் சின உணர்ச்சியும், வாயில் மறுப்பதில் அவள் கொண்டுள்ள உறுதியும்
உள்ளடங்கியிருப்பதைக் காணமுடியும்.
இவ்வாறு அன்றி முகத்துக்கு
நேராகக் கடுஞ்சொல் கூறும் உணர்ச்சி வெளிப்பாடும் உண்டு. பரணரின் மருதத்திணைப்
பாடல் (நற்றிணை-260) இத்தகையது. பரத்தையிற் பிரிந்து திரும்பிய
தலைவன், அவளைச் சமாதானப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அவளைத் தழுவுகிறான்.
தலைவி வெடிக்கிறாள். வெய்யைபோல முயங்குதி - உண்மையான
விருப்பமுள்ளவன் போலத் தழுவுகிறாயே என அவன் பொய்யன் என்பதை நேரடி வார்த்தைகளில்
உணர்த்துகிறாள். அதனினும் கடுமையாகச் சொல்கிறாள். ‘என் அழகு உன் அன்புக்காகக்
காத்திருந்தது. அதை வீணே வாட விட்டாய் ; உனக்காக என் கூந்தலில் சூடியிருந்த
மலர்களையும் என் மனத்தையும் வாடவிட்டவன் நீ ; நீ என் பகைவன். இதை
நான் மறக்கவே மாட்டேன்’ எனச் சாடுகிறாள். ‘பகைவன்’ என்பதை விடக்
கடுமையான சொல் இருக்கமுடியுமா? இச்சொல் வெடித்துப் புறப்படும் மனத்து
உணர்ச்சிகளின் கொதிநிலை நன்கு புரிகிறதல்லவா !
3.2.3 காட்சித் தன்மை - நாடகத் தன்மை
படிமங்கள்
சிறு சிறு காட்சிகளாவதை முன்னர்க் கண்டோம். கருங்கூந்தலை இருண்ட
கூந்தல் (நற்றிணை-284) என்பது படிமம். இருளையும் கூந்தலையும்
ஒன்றிணைத்துக் காணச்செய்யும் படிமம். இருள்புனை மருது (நற்றிணை-330)
என்பது இயக்கம் கொண்ட ஒரு படிமம். பகலில் இருளைத் தன்மேல் புனைந்துகொண்டு
நிற்கிற மரமாகப் பார்க்கிறார் புலவர். மரத்தடியில் நின்று நிமிர்ந்து
பார்த்தபோது கவிஞருக்குக் கிடைத்த காட்சி அனுபவம், இருளைப் பூசிக்கொண்டு,
நிற்கிறது மரம் என்பது.
ஷேக்ஸ்பியர் நாடகங்களில், கம்பராமாயணம்
போன்ற
காப்பியங்களில், இக்கால நாவல்களில், திரைப்படங்களில்
பயன்படுத்தப்படும் ஓர் உத்தி, உருவெளித்தோற்றக் காட்சி.
மனத்துக்குள் தோன்றும் காட்சியை
வெட்ட வெளியில்
தோன்றுவதாகப் படைப்பாளி படைத்துக்
காட்டுகிறான்.
நாடகத்துக்கு இவ்வுத்தி மிகப் பொருத்தமானது. பாத்திரத்தின்
மனக்குழப்பம், அச்சம் போன்றவற்றைப் பாத்திரப்
பேச்சு
இல்லாமல் காட்சிப்படுத்த ஏற்ற உத்தி இது.
மடல்பாடிய
மாதங்கீரனார் பாடலில் (நற்றிணை-377)
குழம்பிக்
கலங்கியிருக்கின்ற தலைவன் முன்னால் உருவெளிக் காட்சியாகத்
தலைவி தோன்றுகிறாள். பாதிக்குமேல் விழுங்கப்பட்ட நிலவும்
விழுங்கிய பாம்பும் நினைவில் தோன்றுமாறு இருக்கின்றன
அவளது அடர்கூந்தலும் நெற்றியும். இக்காட்சியில்
அவள்
அவனைக் கடிந்து பேசுகிறாள். இந்த உருவெளிக்காட்சியே
தலைவனை மெலியச் செய்கிறது.
|