3.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள் | |||||||||
புலவன் தன் பாடல் மூலம் வாசகனிடம் தான் விரும்பும் விளைவை உருவாக்க வேண்டுமானால் அப்பாடலின் வடிவம் அதற்குத் துணை நிற்க வேண்டும். இப்பாடல்களில் புலவர்கள் அமைத்துக் காட்டியிருக்கும் வடிவ ஒழுங்குகளை இனிக் காணலாம்.
நற்றிணைப் பாடல் எண். 242. தலைவியைக் காண விரைந்து வந்து கொண்டிருக்கும் தலைவனின் வேகத்தையும் மகிழ்ச்சியையும் பாடல் உள்ளடக்கியிருக்கிறது. இதனை உணர்த்தக் கவிதைக்கு ஒரு வேகத்தைத் தருகிறார் புலவர்.
அரும்ப, அவிழ, மலர, கஞல என வரும் வினைஎச்சங்களின் தொடர்ச்சி கவிதைக்கு ஒரு நடைவேகத்தைத் தருகிறது அல்லவா! தலைவனின் உணர்வு வேகத்துக்கு இணைகோடு போலக் கவிதை நடைவேகம் அமைகிறது. வடிவம் இங்கு உள்ளடக்கத்தைச் சிறப்புறச் செய்கிறது. நற்றிணை 289ஆம் பாடலில் பெரும் முழக்கத்தோடு பொழியும் மழைக்கு ஏற்ற ஓசையமைப்பைக் காணலாம்.
கவிதைப் பொருளுடன் கவிதைப் புறவடித்தின் ஓசை பொருத்தமாக இணைகிறது. நற்றிணை 294ஆம் பாடல். கவிதையின் முதல் இரண்டடிகள் ஆர்வக் கிளர்ச்சியைத் தோற்றுவிக்கின்றன.
கவிஞர் என்ன சொல்ல வருகிறார்? ‘வானம் தீயையும் காற்றையும் தன்னிடத்தில் கொண்டிருப்பது போல அது நோயாகவும் இன்பமாகவும் இருக்கிறது’ என்பது பொருள். இந்த ‘அது’ எது? கவிதையோடு கூடவே போய் இறுதியடியில் விடை கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. ‘அது’ இலங்குமலை நாடன் மார்பே - தலைவனது மார்பு. இவ்வாறு முன்னும் பின்னுமாக வரவேண்டியதைப் பின்னும் முன்னுமாக மாற்றி வைக்கும் வடிவம் பல கவிதைகளில் காணக்கிடைப்பது. இது கூட வேண்டுமென்றே செய்யப்படுவதன்று. பேச்சிலும், மன ஓட்டத்திலும் கருத்துகள் இப்படி இடம்மாறி வருவதைப் பார்க்கிறோம். இப்படி நடக்குமென்று நான் நினைக்கவேயில்லை என்று தொடங்கும் ஒருவர், பிறகுதான் எது, எப்படி, ஏன் நடந்தது என்பதை விவரிக்கிறார். மனஓட்டத்தையும் பேச்சு முறையையும் பின்பற்றி அமைந்தவை சங்கப்பாக்கள். அதற்கேற்ப அவை வடிவம் கொள்கின்றன. அதேபோல், நற்றிணை 361ஆம் பாடலில்,
எனவரும் தொடக்கமும் அமைந்துள்ளது. இது தலைவன், அவனுடைய வீரர்கள் ஆகியோரின் தோற்றத்தைக் குறிக்கிறது. இந்த அடிகளுக்குப் பின்னர்த்தான் அவர்கள் தேரில் வந்து இறங்கும் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. அவர்கள் வந்த பிறகுதான் தோழி அவர்கள் பூச்சூடி வந்ததைக் கண்டிருக்க முடியும். ஏன் இப்படி அடிகள் மாறியுள்ளன? தோழியைச் சார்ந்தவர்கள் தலைவி வருந்துவாளோ என்ற ஐயத்தில் இருந்தனர். அவர்களை மனம் தெளியச் செய்யவே, தலைவன் மகிழ்ச்சி மிக்க, கண்டவுடன் எந்தக் கோபமும் மறைந்து விடுமாறு புத்துணர்ச்சிமிக்க தோற்றத்தில் இருப்பதை முதலில் சொல்கிறாள். கம்பராமாயணத்தில் தூது சென்று திரும்பிய அனுமன் இராமனின் மனநிலை அறிந்து ‘கண்டனென்’ என்ற உடன்பாட்டுச் சொல்லால் தொடங்கிப் பிறகு மற்ற விவரங்கள் சொல்வதை இங்கு ஒப்பிடலாம். கவிதையை வடிவமைக்கிற கவிஞன் வெறும் சொற்களை அடுக்கிக் கட்டுகிறவன் அல்லன். கவிதை வடிவத்தின் மூலம் மனங்களை, உணர்ச்சிகளை வடிவமைப்பவன். |