சங்கப் புலவனுக்கு அகப்பொருளில் புறக்காட்சிகள் உள்ளடங்கிப் புதுப் பொருள்களைத்
தரும். கவிதையை வடிவமைப்பதில் கவிதையின் உணர்ச்சிக்கு முதன்மை இடம் தருகிறான்
அவன். இங்கு இக்கவிதைகளின் வெளிப்பாட்டு முறைகளைக் காணலாம்.
4.2.1 இயற்கைப் பின்னணியில் காதல் வாழ்வு
இயற்கைப் பொருள்கள், கருப்பொருள்கள் என்ற பெயரில் தலைவன் - தலைவியரது
அக ஒழுக்கங்களைச் சார்ந்து பொருள் விளக்கம் தருகின்றன என்பதை முன்னரே
கண்டோம். அடி எண்ணிக்கையில் அகநானூறு, நற்றிணை போன்ற தொகை நூல்
பாடல்களை விடக் குறுகியுள்ள குறுந்தொகையில் இயற்கைப் பின்னணியை
விரிவாகக் காட்டக் கவிஞனுக்கு வாய்ப்பு இல்லை என்றாலும், சுருக்கமாகவும்
பொருள் விளக்கம் நன்கு வெளிப்படுமாறும் இயற்கையைப் பயன்படுத்தத் தவறவில்லை.
பார்க்கும்
பொருளில் மட்டுமன்றிக் கேட்கும் ஒலியிலும் பிரிந்துசெல்லும் தலைமகனுக்குத்
தலைவியை நினைவூட்டும் தன்மை இருக்கிறது. பாலை பாடிய பெருங்கடுங்கோவின்
பாடலில் (குறுந்தொகை-16) தோழி தலைவிக்கு நம்பிக்கையூட்டும் விதமாகக்
காட்டும் பாலைக்காட்சி எளியதும் அருமையானதும் ஆகும். தலைவன் பிரிந்துசெல்லும்
வழியில் அந்த நிலத்துக்குரிய காதல் குரல் கேட்கும்; ஆண்பல்லி தன் பெண்பல்லியை
அழைக்கும் ஓசை அது. ‘அதைக் கேட்டதும் தலைவன் உன்னை நினைத்துத் திரும்பி
வருவான்’ என்று தலைவியைத் தேற்ற, பாலைநிலத்துப் பல்லிகூடத் தோழிக்கு
உதவுகிறது.
கபிலரது
குறிஞ்சித்திணைப் பாடலில் (குறுந்தொகை-18) பலாமரக் கிளையும்,
பழமும், வேர்ப்பலாவும் காதல் உணர்வில் எவ்வாறு ஊடாடுகின்றன என்பதைப்
பார்த்தோம். இரவுக்குறியில் வந்து தலைவியைச் சந்தித்துத் திரும்பும்
தலைவனுக்கு ஏதேனும் இடர் நேருமோ, களவுக்காதல் ஊரார்க்கு வெளிப்பட்டுவிடுமோ
என்ற அச்சம், மறுநாள் தலைவன் வரும்வரையிலான நேரத்தில் பிரிவு வேதனை -
என்று இவ்வாறு பலவகைச் சஞ்சலங்களில் ஆழ்ந்திருக்கும் தலைவியின் நிலையைத்
தலைவனுக்குப் புரிய வைப்பது எப்படி? தோழி ஒரு பலாமரத்தைத் தலைவனுக்கு
நேரில் சுட்டிக்காட்டுகிறாள். மற்றொரு பலாமரம் அவன் ஊரில் இருப்பது ;
அதனை அவன் மனக்கண்ணில் எழுப்பிக் காட்டுகிறாள். தோழி சுட்டிக் காட்டும்
பலாமரத்தில் ஒரு மென்மையான கிளையில் கனத்த பலாப்பழம் தொங்குகிறது; எப்போது
கிளை முறியுமோ என்ற நிலை. ‘தலைவனே! இந்தக் கிளை தான் தலைவியின் உயிர்
: இந்தப் பழம்தான் அவளது காமநோய். இனி நீ என்ன செய்ய வேண்டும் என்பதைத்
தீர்மானித்துக்கொள்’ என்பதுபோல் அமைகிறது தோழியின் பேச்சு. கிளையின்
வலியை அவன் அறிய மாட்டான் என்பதை உணர்த்தவே, அவன் நாட்டுப் பலாப்பழங்கள்
வேரில் காய்த்துத் தரையில் கிடப்பதைச் சுட்டிக்காட்டுகிறாள்.
பரத்தைமை
ஒழுக்கத்தையும் இல்லற ஒழுக்கத்தையும் ஒருங்கே கொண்ட தலைவன் ஒருவன். தலைவியும்
தோழியும் எவ்வளவு முயன்றும் அவனை மாற்றமுடியவில்லை. ஏனைய தலைவிகளைப்
போல ஊடல்கொண்டு தலைவனை மறுக்கும் தலைவி அல்லள் அவள். அவனது குறையுடனே
அவள் அவனை நேசிக்கிறாள். அவனும் அவள்மீது அன்பு மிகவுடையவன். ஆகவே அவன்
வரும்போது கூடிமகிழ்கிறாள். அவள் புரிந்துணர்வுடன் அவனை ஏற்றுக் கொள்வதை
விளக்குவதற்கு, அவர்கள் வாழும் நெய்தல் நிலத்துக் கழிமுள்ளிச் செடி கவிஞருக்குப்
பயன்படுகிறது. அணிற்பல் போன்ற முள்ளையும், தாதுவையும் ஒருங்கே கொண்ட
முள்ளிச் செடியைத் தலைவனின் இருமைக் குணத்துக்கு உள்ளுறையாகுமாறு காட்டுகிறார்
புலவர் அம்மூவனார் (குறுந்தொகை-49).
4.2.2 உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகள்
உணர்ச்சிகளை அழுத்திச்செறிவு செய்து முறுக்கேற்றிச்
சிறுசிறு
சொற்களில் வெளிப்படுத்துவது சங்கப்புலவர் உத்தி என்பதனை
முன்னரே கண்டோம். பதுமனாருடைய குறுந்தொகைப் பாடல்-6
அதற்குச் சரியான எடுத்துக்காட்டு. தலைவன் பிரிவால் உறக்கம்
இழந்து, உயிர்த்தோழியின் துணைகூடக் கிடைக்காத நள்ளிரவில்
தலைவி அனுபவிக்கும் தனிமையை, அவளது சுய இரக்கம் சார்ந்த
உளவியலைக் கவிஞர் அழகாகப் படம் பிடிக்கிறார். ‘முழு
உலகமும் உறங்குகிறது ; நான் ஒருத்தி மட்டுமே உறங்காதவள்’
என்ற தலைவி கூற்றில் எந்த அளவுக்கு அவள் அந்நியமாகித்
தனித்துப் போயிருக்கிறாள் என்பதை உணர்ந்துகிறார். ‘யாமம்
‘நள்’ என்னும் ஓசை எழுப்புகிறது’ எனத் தலைவி சொல்வதன்
பொருள் என்ன? நள்ளிரவுக்கு ஓசை ஏது? அது இரவின் ஓசை அன்று. தனித்திருக்கும்
சஞ்சலமான அவளது மனத்தின் ஓசை !
அவள் மட்டுமே உணரும் ஓசை ! அதை அவளால் தவிர்க்கவோ
தாங்கிக் கொள்ளவோ முடியவில்லை என்பதைக் கவிதை
செறிவாகச் சொல்கிறது.
ஆலங்குடி வங்கனாரின் பாடலில் (குறுந்தொகை-8)
வேறொரு
விதமான உணர்ச்சி வெளிப்பாடு காணலாம். ஒரு தலைவன் - இரு
காதலிகள் (ஒருத்தி மனைவி - மற்றொருத்தி காதற்பரத்தை) என்ற
நிலையில் பெண்களுக்கிடையே ஏற்படும் மனப்புழுக்கம்
கவிதையாகியிருக்கிறது. இருவரில் தலைவன் மீது
உரிமையுடையவள் மனைவி. பரத்தையோ தலைவனுடைய
அன்புக்குரியவள் எனினும் உரிமை இல்லாதவள். தன்னிடம்
இருக்கும்போது ‘பெருமொழிகள்’ பேசும் தலைவன்,
மனைவியிடம் கண்ணாடியில் தெரியும் பிம்பம் போல
உடனுக்குடன் அவள் விரும்புவதைச் செய்யும் பணிவுடையவனாக
இருக்கிறான் எனத் தன் சினத்தைத் தலைவன் மீது திருப்புகிறாள்
பரத்தை. தலைவனை இகழும் அவள் பேச்சில் அவளது சினம்,
ஏமாற்றம், தாழ்வு மனப்பான்மை எல்லாம் வெளிப்படச் செய்கிறார்
புலவர்.
கலையும் இலக்கியமும் தோன்றிய நாள் தொட்டுக் காதல்
உணர்வுகள் பற்றிய ‘ஆய்வு’ முடிவின்றித் தொடர்கிறது. ‘இன்ன
தன்மையுடையது’ என்று சொல்ல இயலாதிருப்பதால்தான் காதலை
‘அகம்’ (உள்ளிருப்பது) என்றனர். பழந்தமிழில் காமம் என்ற
சொல்லுக்குக் காதல் என்பதுதான் பொருள். கபிலர்
(குறுந்தொகை-18) காமத்தின் முதிர்நிலையைச் ‘செவ்வி’ என்ற
சொல்லால் காட்ட முயல்கிறார். திருவள்ளுவர் பயன்படுத்தும்
சொல் ‘செவ்வி’.
மலரினும் மெல்லிது
காமம் ; சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார் |
(திருக்குறள்-1289) |
காதல் மலரைவிட
மென்மையானது. அதன் பக்குவ முதிர்ச்சி நிலையை (செவ்வி) அறிந்து அனுபவிப்போர்
சிலரே என்கிறார் வள்ளுவர். கபிலர் பாடலில் தோழி தலைவனை நோக்கித் தலைவியின்
காம முதிர்ச்சி நிலையை (செவ்வி) அறியக்கூடியவன் நீதான். அச்செவ்வி வாடிப்
போகுமுன்பு அவளை மணந்துகொள் எனக் குறிப்புணர்த்துகிறாள். இங்கே காமமுதிர்ச்சி
- செவ்வி- எத்தகையது என வெளிப்படையான விளக்கம் இல்லை. தலைவன் - தலைவி
உள்ளங்களே அதனை அறியும். தோழியால் ஒன்றுமட்டும் சொல்லமுடிகிறது. செவ்வி
தவறினால் தலைவி இறந்து போகக்கூடும் என்பதுதான் அது. சிறுகோட்டுப்
பெரும்பழத்தை உவமையாக்கி அதனை வெளிப்படுத்துகிறாள். இவ்வாறு
சொல்லமுடியாத ஓர் உணர்வு நிலையைப் பேச்சு, காட்சி, உவமை ஆகியவற்றின்
வாயிலாகச் சொல்லி வெல்கிறார் கபிலர்.
வெள்ளிவீதியார் தமது சொந்தக் காதல் அனுபவத்திலிருந்து
கவிதை படைத்திருக்கக் கூடும் என்பதை முன்பு கண்டோம்
(குறுந்தொகை-27) ‘காதலனைக் காணாமல் தேடித்திரிந்த
வெள்ளிவீதி’ எனும் குறிப்பு ஒளவையார் பாடலில்
(அகநானூறு-147) வருகிறது. இந்த அனுபவம்,
வெள்ளிவீதியாருடைய பாடலில் உணர்ச்சிகரமாக
எதிரொலிப்பதைக் காணலாம். தாங்க முடியாத பிரிவு
வேதனையைத் தலைவி வெளிப்படையாகச் சொல்கிறாள்.
‘கன்றும் உண்ணாமல் கலத்திலும் படாமல் பாலை மண்
உண்பதுபோலத் தன் அழகு தனக்கும் பயன்படாமல்
தலைவனுக்கும் பயன்படாமல் பாலைக்கு உணவாகிறது’ என
அருமையான உவமை கொண்டு தன்
இழப்பு எவ்வளவு
கொடியது என்பதைப் புலப்படுத்துகிறாள். கபிலர் பாடலில்
பார்த்த காமத்தின் ‘செவ்வி’ தவறிக் கொண்டிருக்கும்
அவலத்தை வெள்ளிவீதியார் பாடல் நன்கு காட்டுகிறது.
4.2.3 காட்சித் தன்மை - நாடகத்
தன்மை
ஒளவையாருடைய
அகவன்மகளே எனும் பாடல் (குறுந்தொகை-23) ஓர் அழகிய, எளிமையான,
பொருள் பொதிந்த நாடகக் காட்சியாக நம் மனக்கண்ணில் விரிகிறது. தலைவி,
தோழி, செவிலி, கட்டுவிச்சி என்னும் நான்கு பாத்திரங்கள். இடம் ஒரு வீட்டு
முற்றமாகலாம். காட்சி தொடங்குமுன் கட்டுவிச்சி பாடிக் கொண்டிருந்தபோது,
தலைவனது மலையைப் பற்றிப் பாடுகிறாள். அப்போதிருந்து காட்சி தொடங்குகிறது.
கட்டுவிச்சியின் பாடலில் தோழி குறுக்கிட்டு அவள் வேறு பாட்டுக்குப் போய்விடாமல்
தடுத்து, ‘பாடு பாடு அந்தப் பாட்டையே பாடு ; அந்தப் பாட்டையே பாடு ;
அவருடைய மலையைப் பாடிய அந்தப் பாட்டையே பாடு’ என்று படபடப்பாகச் சொல்கிறாள்.
அத்துடன் காட்சி, கவிதை முடிகின்றன. தோழியின் திடீர்க் குறுக்கீடு, படபடப்பு,
வேகம், திரும்பத் திரும்பச் சில சொற்களையே சொல்லுதல் (அகவன் மகளே, பாடுக,
பாட்டு) - இவை கட்டுவிச்சியைத் திகைப்பில் ஆழ்த்துவதையும், செவிலியை
முதலில் திகைப்பிலும் பிறகு சிந்தனையிலும் ஆழ்த்துவதையும், தலைவியின்
முகத்தில் பாரம் இறங்கிய ஒரு நிம்மதி படர்வதையும் கவிதைக்கு அப்பாற்பட்ட
காட்சியாக நாம் மனக் கண்ணில் காணலாம். ‘அறத்தொடு நிற்றல்’ எவ்வளவு நாகரிகமாக
நடைபெறுகிறது! ஒரு கவிதைக் காட்சி, அதற்கு முன்னும் பின்னுமுள்ள காட்சிகளை
நாமே உருவாக்கிக் காணவிடுவதுதான் கவிதையின் சிறந்த வெற்றி. ஒளவையார்
அதனைச் சாதித்திருக்கிறார்.
அழகிய படிமக்
காட்சிகள் சிலவற்றையும் இப்பாடப் பகுதிப் பாடல்களில் காணலாம். கானம்
கார் எனக் கூறினும் (குறுந்தொகை-21) - காடு இது கார்காலம்
என்று சொன்னாலும் நான் நம்ப மாட்டேன்’ என்கிறாள் தலைவி. காடு இங்கே தன்
மலர்கள் மூலம் பேசுவதாகக் காட்டுவது படிமக்காட்சி. பசலை
உணீஇயர் வேண்டும் - ‘பசலை
என்அழகை உண்கிறது’ என்பதில் பசலை நோய் ஒரு படிமமாகிறது. தலைவியின் அழகை
உண்ணுகின்ற படிமமாகிறது (குறுந்தொகை-27). |