இப்பாடப் பகுதிப் பாடல்களில்
புலவர்கள் பயன்படுத்தியுள்ள வெளிப்பாட்டு முறைகள் பற்றி இங்குக் காணலாம்.
5.2.1 இயற்கைப்
பின்னணியில் காதல் வாழ்வு
துன்பத்திலிருப்போர்க்கு
அதே போன்ற துன்பத்திலிருப்போர் அல்லது பொருள்கள்பால் ஒருவகை அனுதாபத்
தோழமை ஏற்பட்டு விடும். அல்லது சூழலில் இருக்கின்ற எல்லாப் பொருள்களிலும்
கண்ணாடி பார்ப்பதுபோலத் தன்னையே - தன் துயரையே காணுகின்ற உறவு நிலையும்
ஏற்பட்டுவிடும். இயற்கைப் பொருளின் இயல்பான தன்மையைத் தலைவி அல்லது தலைவனின்
அகச் சூழலோடு பொருத்திக்காட்டி, அந்தத் தற்குறிப்பேற்றத்தின் மூலமாகப்
பாத்திர உணர்வுகளைப் படிப்போர் மனத்தில் புலவர் பதிப்பர் என்பதைக் கண்டுள்ளோம்.
நெய்தல் திணைப் பாடல்களைச் சிறப்பாகப் பாடும் திறனுள்ள அம்மூவனார் இரவுத்தனிமை
- தலைவியின் குமுறல் - கடலின் ஓயாத அலைஓசை மூன்றையும் அழகாக இணைத்து
ஒரு துன்பச் சூழலை உருவாக்கிக் காட்டுகிறார். (குறுந்தொகை-163)
தன் செயலற்ற தன்மையை, வேறு யாரிடமும் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முடியாத
இரவின் தனிமையில் நினைத்து வருந்தும் தலைவி யாரிடமாவது பேசியாக வேண்டும்.
யாரோடு பேசுவது? எதிரே இருப்பது கடல்தான். அதுவும் அவள் உள்ளம் போலவே
இரவு முழுவதும் குரல்கொடுத்துக் கொண்டிருக்கிறது. உடனே தலைவி தன்னோடு
கடலை இணைத்துக் காண்கிறாள். ‘ஆம், பாவம், கடலும் நம்மைப்போலவே இரவு முழுதும்
ஓய்வில்லாமல் வேதனைக்குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது! தனது வேதனைக்குக்
காரணம் தலைவனது பிரிவு ! கடலின் வேதனைக்குக் காரணம்? கடலையே நோக்கிக்
கேட்கிறாள் தலைவி. “யாரணங் குற்றனை கடலே?” - ‘யாரால் இத்துன்பத்தை அடைந்தாய்?’
- நேரடியாக ‘யார் அவன்’ என்பது வெடித்து வரும் வினா. அவளைப் பொறுத்தவரை
கடல் பிரிவுத் துயரில் ஆழ்ந்துள்ள இன்னொரு தலைவி. ஒருவருக்கொருவர் உணர்வு
பரிமாறிக் கொள்ளத் தலைவிக்கு இப்போது ஒரு ‘தோழி’ கிடைத்துவிட்டாள். அம்மூவனாரின்
கவித்துவம் இப்படி இயற்கை - மானிட வாழ்வு உணர்வு ஒன்றிப்பைக் கண்டிருக்கிறது.
இதேவித வெளிப்பாடு கலித்தொகைப் பாடலில் (129) வருவதை இங்கு ஒப்பிட வேண்டும்.
தலைவி கடலை நோக்கிக் கேட்கிறாள். “எம்போலக் காதல்செய்து அகன்றாரை உடையையோ
நீ” - இது நல்லந்துவனாரின் கலித்தொகைப் பாடல்.
அன்பு -
காதல் உண்மையானது என்றால் கால மாற்றங்களைத் தாண்டி அது ஒரே நிலையில்
நிலைத்திருக்கும். அல்லவா! அவ்வாறு நிலைத்திராமல் மாறிப் போய்விட்டால்
என்ன முடிவுக்கு வருவோம்? அந்தக் காதல் உண்மையானதன்று என முடிவு செய்வோம்.
அதைத்தான் ஒரு தோழி தலைவனிடம் தெரிவிக்கிறாள் (குறுந்தொகை-196)
பரத்தையிற் பிரிந்திருந்தவன், திரும்பிவந்து வாயில் வேண்டுகிறான். தோழி
சொல்கிறாள்: ‘களவுக் காலத்தில் தலைவி வேப்பங்காயைக் கொடுத்தால் கூட அதைக்
கற்கண்டு என்றாய்!, இப்போது பாரிமலைச் சுனைநீரைக் கொடுத்தால் கூட வெப்பமானது,
உவர்க்கிறது என்கிறாய்! எப்படியிருக்கிறது உனது அன்பின் நேர்மை, பார்த்தாயா?’
- ஆக, இரண்டு சந்தர்ப்பங்களிலுமே தலைவன் போலித்தனமே செய்திருக்கிறான்
என்று குற்றம் சாட்டுகிறாள் தோழி. தலைவனது போலித்தனத்தை அம்பலப்படுத்த
மிளைக்கந்தனாருக்கு வேப்பங்காயும் பறம்புமலைச் சுனை நீரும் கை கொடுத்திருக்கின்றன.
ஒருவருடைய தோற்றமும்
மனத்து உண்மையும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கக் கூடும். முன்பு அன்பாக
இருந்தவன்தான்; இப்போது பரத்தையிற் பிரிந்து தலைவியைத் தவிக்கச் செய்கிறான்.
அள்ளூர் நன்முல்லையார் (குறுந்தொகை-202), அழகிய பூவாக இருந்து
அதுவே முள்ளாக மாறிவிடும் நெருஞ்சியைத் தலைவனுக்கு உவமையாக்கி அவனருகில்
நிறுத்துகிறார். தலைவனுடைய இரட்டை நிலையைச் சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறது
நெருஞ்சி.
5.2.2
உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகள்
கோக்குள முற்றனார்
பாடலில் (குறுந்தொகை-98) தலைவியின் பிரிவுத்துயர் வெளிப்படும்
முறை சற்று வேறுபட்டிருக்கிறது. தனது ஆற்றாமையை அதற்குரிய சொற்களால்
அவள் வெளிப்படுத்தவில்லை. அதற்கு மாறாகத் தோழியிடம் ‘அவரிடம் சென்று
பேசக்கூடிய யாராவது கிடைத்தால் நன்றாயிருக்கும்’ என்கிறாள். என்ன பேச
வேண்டும்? ‘தலைவி பெரும் துயரத்திலிருக்கிறாள், வாடிப்போய்விட்டாள்,
நீ வராவிட்டால் அவள் நிலை என்னாகுமோ?’ என்றெல்லாம் வழக்கமான வார்த்தைகள்
சொல்ல வேண்டியதில்லை. தலைவி வீட்டுத் தோட்டத்தில் பூத்துள்ள பீர்க்கம்
பூக்கள் சிலவற்றை எடுத்துச் சென்று தலைவனிடம் காட்டி ‘இப்பூக்களைப் போல்
ஆகிவிட்டாள் உன் தலைவி’ என்று சொன்னால் போதுமாம்.
|
இன்னள்
ஆயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழிதோழி |
பிரிந்து போகும்போது தலைவன் பார்த்திருந்த
தலைவியின்
அழகுத் தோற்றத்திற்கும், பீர்க்கம் பூவைக் காட்டி
“இன்னள்
ஆயினள்” என்று சொன்னால் அவன் மனக்கண்ணில் தோன்றும்
பசலை படர்ந்த, வாடிய தோற்றத்திற்கும் இடையேயுள்ள பெரிய
இடைவெளியைப் புலவர் உணரச் செய்கிறார்.
மாலையை
உரன்மாய் மாலை (நற்றிணை-3), அருளில்
மாலை (நற்றிணை-69) என்று தலைவன் தலைவியர் சார்பாகப்
புலவர்கள் வருணித்துள்ளனர். பிரிந்திருக்கும் நிலையும் உணர்வுக் கொதிப்பும்
தரும் துன்பத்தை மாலை தரும் துன்பமாகத் தலைமக்கள் உணர்கின்றனர். கச்சிப்பேட்டு
நன்னாகையார் பாடலில் (குறுந்தொகை-172) தலைவி பிரிவுத்துயரம் பொறுக்க
முடியாதவளாய்ப் பையுள் மாலை என
மாலையை வருணிக்கிறாள். (பையுள் = இடும்பை, துன்பம்) தலைவி அனுபவிக்கும்
மாலை, இரவு விழித்து இரைதேடும் பறவையான வௌவால்களோடு சேர்ந்து வருகிறது.
வௌவால்கள் மாலையின் தோற்றத்தில் மேலும் ஒரு கொடுமையைக் கூடுதலாக்குகின்றன.
இத்தகைய கொடிய மாலை தலைவன் இருக்குமிடத்தில் அவனை என்ன செய்துவிடுமோ
என்பது தலைவியின் வருத்தம். மாறிமாறித் தனக்காகவும் அவனுக்காகவும் இடைவிடாது
வருந்தும் அவள் நிலைக்குப் பொருத்தமான உவமை தருகிறார் புலவர். ஏழு ஊர்
மக்களுக்கு வேலை செய்வதற்கு அமைந்த ஒரே ஒரு கொல்லன் உலையில் உள்ள துருத்தி
எவ்வாறு பெருமூச்சு விட்டு நெருப்பை ஊதிக் கொண்டே இருக்குமோ அவ்வாறிருக்கிறாள்
தலைவி எனக்காட்டும் போது, புலவர் தலைவியின் உணர்ச்சியை முழுமையாக வெளிப்படுத்தி
விடுகிறார்.
அடுத்துத் தலைவர்களின் உணர்ச்சி வெளிப்படப்
புலவர்கள்
என்ன உத்திகளைக் கையாளுகிறார்கள் என்பதைக் காணலாம்.
ஓரேருழவனாரின் பாடலில் (குறுந்தொகை-131) தலைவியைப்
பிரிந்து வினைமேற் சென்ற தலைவன் வினையை
முடித்து
விட்டான். திரும்ப முனையும்போதே அவன் குறித்த பருவம்
வந்துவிட்டது. உடனே தலைவியைக் காண வேண்டும் ; அவள்
துயரைப் போக்க வேண்டும். ஆனால் இடையிலுள்ள
தூரம்
மிகப்பெரியது நெடுஞ்சேண் ஆரிடையது.
எளிதில்
கடக்கமுடியாத பாதையும் கூட. தவிக்கிறான் தலைவன். புலவர்
தலைவனுடைய மனவெளியைக் காட்டுகிறார்.
அங்கே
தலைவியின் மூங்கில் போன்ற
தோள்களும், பெரும்
விருப்பத்தை உண்டாக்கும் விழிகளும்
தாம் சுற்றிச்
சுழல்கின்றன. அழைக்கும் கண்களையும்
அணைக்கும்
தோள்களையும் நினைத்துக் கலங்கும் தலைவனின் செயலற்ற
தன்மையை உணர்த்த அருமையான உவமையைக் கையாளுகிறார்
புலவர். மழைபெய்து உழவுக்குரிய பக்குவத்தில் உள்ள பெரிய
நிலம் - பக்குவம் மாறுமுன் உழவேண்டிய உழவனோ, தனித்த
ஓர் ஏர் உழவன் ! அந்த உழவனைத் தவிக்கும் தலைவனுக்கு
உவமையாக்குகிறார் புலவர்.
கோப்பெருஞ் சோழனின் பாடல் தலைவன் (குறுந்தொகை-147)
பிரிந்து சென்ற இடத்தில் இருந்து
கொண்டு பிரிவின்
வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பவன். கனவில்
தலைவியைக் கண்டு, விழித்து,
‘கனவின்பத்தையும்
இழந்துவிட்டோமே’ என்று வருந்துகிறவன்.
‘மடந்தையைத்
தந்ததுபோலக் காட்டித் துயிலைக் கலைத்தும் விட்டாயே’ என்று
கனவைக் கடிந்து கொள்கிறான். கனவை முன்னிலைப்படுத்தி
அவன் பேசுவதாகக் கவிஞர் காட்டுவது புதுமையாக இருக்கிறது.
இது மனத்தின் மிகமிக நுட்பமான (Abstract)
இயக்கம்.
கனவில் தலைவியை அவன் காணும் தோற்றம்
கவனிக்கத்
தக்கது. பாதிரி மலரின் மெல்லிய துய் (நார் போன்றிருப்பது)
போன்ற உடல் மயிர் ஒழுங்கு, அழகு ஒழுகும் மாமை நிறம்,
அணிகலன்கள் அணிந்த தோற்றம் இவை காமத்தூண்டலானவை.
இது புலவர் படைத்த கனவுதான். எனினும் கனவுபற்றி உளவியல்
அறிஞர் ஃபிராய்டு சொன்ன கோட்பாட்டை ஒத்திருக்கிறது.
நிறைவேறாத ஆசைகள், ஏக்கங்கள் உறக்கத்தின்போது
அடிமனத்திலிருந்து கிளம்பி, தளர்ந்திருக்கும் கட்டுப்பாட்டைத்
(censorship) தாண்டி மேல்மனத்தில் நுழைந்து கனவாகக் காட்சி
தருகின்றன. இவ்வாறு வெளிவருவது மன இறுக்கம் தளர்வதற்கு
உதவும் என்பது அவர் கோட்பாடு.
இந்தத் தலைவனும்
இக்கனவில் அடிமன உணர்ச்சி வெளிப்பட்டுவிட்டதன்
மூலம்
மனநோயாளியாவதினின்றும் தப்பினான் என ஊகிக்கலாம்.
5.2.3
காட்சித்தன்மை - நாடகத்தன்மை
காதலில்
இன்பமும் துன்பமும், ஆர்வமும் ஏமாற்றமும், நம்பிக்கையும் அவநம்பிக்கையும்,
மனநிறைவும் ஏக்கமும்- என்று இவ்வாறு தீவிரத்தன்மை வாய்ந்த உணர்ச்சிகளையும்
பேச்சுக்களையுமே இப்பாடல்களில் நாம் பார்த்து வந்திருக்கிறோம். ஐயூர்
முடவனார் பாட்டு (குறுந்தொகை-123) வேறுபாடானது. விளையாட்டான,
நகைச்சுவையான தந்திர நிகழ்ச்சி ஒன்று பாடலில் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
காட்சியில் உள்ள பாத்திரங்கள் தலைவன், தலைவி, தோழி ஆகியோர். திட்டமிடாமல்,
எதிர்பாராமல் நடந்த ஒரு நிகழ்வு இக்காட்சி. தலைவன் பகற்குறியில் தலைவியைச்
சந்திக்க வருகிறான். நேராகத் தலைவியருகே செல்லாமல் ஒரு பக்கமாக மறைந்து
நின்று, தலைவி தன்னைத் தேடித் தவிப்பதைப் பார்க்கும் ஆவலில் இருக்கிறான்.
தோழி அவனைப் பார்த்துவிடுவதோடு அவன் நோக்கத்தையும் புரிந்து கொள்கிறாள்.
அவனைப் பார்க்காத பாவனையில், அவனைப் பதிலுக்கு ஏமாற்றி நகைக்க முடிவு
செய்கிறாள். தலைவியிடம் சொல்கிறாள் : “தலைவர் இன்னும் வரவில்லை. ஆனால்
அதோ தமையன்மாரது மீன்பிடி படகுகள் திரும்பி வந்துகொண்டிருக்கின்றன.”
பேச்சுடன் காட்சி - கவிதை முடிந்து விடுகிறது. ஏமாற்ற நினைத்த தலைவன்
திடுக்கிட்டு இனித் தலைவியைச் சந்திக்க முடியாதே எனப் பதைபதைத்திருப்பான்
என்பதை உணர முடியும்.
தலைவியைத்
தோழி துப்பறியும் காட்சியை ஒரு நாள்
வாரலன் என்ற பாடலில் காணலாம் (குறுந்தொகை-176).
பாடல் முழுமையும் ஒரு மறை நாடகம்; ஒருவரையொருவர் புரிந்துகொண்டு, புரியாதது
போன்ற பாவனை காட்டி நடிக்கும் நாடகம். அகப்பொருள் மரபுகள் காதலை மிக
மிக நளினமாக, நாகரிகமாக எடுத்துக்காட்டும் உத்திகளை உள்ளடக்கியிருக்கின்றன.
வெளிப்படையான பேச்சுகளும் செய்கைகளும் குறைவு. குறிப்பு மொழிகள், சொல்லாத
சொற்கள் அதிகம். தலைவி தன் காதலைத் தோழிக்கு மறைக்கிறாள். தலைவன் மூலமாக
உண்மை அறிந்த தோழி நேரடியாகத் தலைவியிடம் கேட்காமல், அவள் வாயிலிருந்தே
உண்மையை வரவழைக்கும் நோக்கில் ஒரு கற்பனைக் காட்சியை உருவாக்கித் தலைவியிடம்
சொல்கிறாள். அதாவது தோழியை ஒருவன் விரும்பிப் பல நாட்கள் திரும்பத் திரும்ப
வந்து பணிந்துபேசி அவள் உள்ளத்தை நெகிழச்செய்ததாகவும், அவளிடமிருந்து
சரியான பதில் கிடைக்காததால் மாயமாக மறைந்து போனதாகவும் சொல்லி, ‘பாவம்,
இப்போது எங்கிருக்கிறானோ என்று கலங்குகிறேன்’ என்றும் சொல்கிறாள். உண்மைக்
காதலை வெளிக்கொணர ஒரு கற்பனைக் காதலைப் படைக்கிறாள். அகப்பொருளில் இந்த
விதமாகத் தோழி நடிப்பது, ‘பல்வேறு கவர்பொருள் சொல்லி நாடல்’ எனப்படும்.
இருபொருள் படும்படியாகப் பேசித் தலைவியின் மனமறைவை அறிந்து கொள்ள முயலுதல்
என்பது பொருள். ஒளவையார் அதியமான் இறந்தபோது மனம் உருகிப் பாடிய பாடலில்
வரும் ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ?
என்ற சோக அடியை இங்கே ஒரு கற்பனைத் துயரத்திற்கு - நாடகமாடலுக்குப்
பயன்படுத்துகிறாள். irony எனப்படும் குறிப்பு முரண் இக்காட்சியில்
அழகாகச் செயல்படுகிறது.
கூடலூர்
கிழாரின் முளிதயிர் பிசைந்த என்ற
பாடல் (குறுந்தொகை-167) மிகச்சிறந்த சங்கப் பாடல்களுள் ஒன்று.
பரவலாகப் பலராலும் படித்துச் சுவைக்கப்படுவது. காட்சிச் சிறப்பினாலும்
காட்சியினூடே நிறைந்து கமழும் அன்பின் மணத்தினாலும் அனைவரையும் கவர்வது.
தன் இளம் மகள் - தற்போதுதான் திருமணமானவள் கணவன் வீட்டில் எப்படி இல்லறம்
நடத்துகிறாள் என்பதைப் பார்க்கப் போன செவிலிக்குக் கிடைத்த அருமையான
காட்சி கவிதையாகிறது. செவிலி நற்றாய்க்கு விவரிக்கும் முறையில் பின்னோக்காகக்
(Flash Back) காட்சி சித்திரிக்கப்படுகிறது. அடுத்தடுத்த இரண்டு
காட்சிகள். முதல் காட்சியில் தலைவி சமையல் செய்கிறாள். கெட்டித் தயிரைப்
பிசைகிறாள்; செவிலியின் கண்கள் தலைவியின் விரலை நோக்குகின்றன. “காந்தள்
மென்விரல்” என்று வருணனை தருகிறார் புலவர். தலைவி திடுமென எழுகிறாள்.
எழும்போது ஆடை நெகிழ்கிறது. உடனே தயிர் பிசைந்த கையால் பற்றி ஆடையை உடுத்துக்
கொள்கிறாள். தாளிக்கும்போது கண்களில் புகை நிறைகிறது ; செவிலி ஆதங்கத்தோடு
பார்க்கிறாள். ‘குவளைக்கண்கள் அல்லவா’ என்று புலவர் குறிப்புத் தருகிறார்.
இவ்வாறு புளிக்குழம்பு செய்து முடிக்கிறாள் தலைவி. அடுத்த காட்சியில்
தலைவன் உண்டு கொண்டிருக்கிறான். ‘இனிது’ என்கிறான். செவிலி கண் தலைவியின்
முகத்தைப் பார்க்கிறது. அந்த முகத்தில் வார்த்தைகளில் சொல்ல முடியாத
மிக நுட்பமான மகிழ்ச்சி பரவுகிறது. நுண்ணிதின்
மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.
தலைவியின் ஆடை நெகிழ்தல், கைகழுவாமல் அவள் உடுத்துக் கொள்ளல், தாளிப்புப்
புகையைக் கண்களில் நிறைய விடல் - என்பன தலைவி சமையலுக்கு மிகவும் புதியவள்,
இளையள் என்பதை உணர்த்துவன. செவிலி வருணிக்கும் காட்சியில் கேட்கும் ஒரே
பேச்சுக்குரல் தலைவன் சொன்ன “இனிது” என்ற ஒற்றைச் சொல்தான். மற்றபடி
இது அன்பினால் இயக்கப்பட்ட ஒரு மௌன நாடகம்.
குறுந்தொகையின் இக்காட்சியைப்
பார்ப்போர்க்குச்
சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனுக்குச்
சமைத்துப்
பரிமாறும் காட்சி நினைவுக்கு வராமல் போகாது.
கண்ணகி
மென்விரல் சிவப்பக் காய்களை அரிந்ததும், முகம் வியர்ப்பச்
செங்கண் மேலும் சிவப்ப அடுப்பின் முன் நின்றதும், “கையறி
மடைமையின் காதலற் காக்கியதும்” இங்கு ஒப்பிடத்தக்கவை.
|