5.3 பாடல்களின் வடிவ ஒழுங்குகள் | |||
இப்பாடப் பகுதிப் பாடல்களில் அமைந்துள்ள வடிவ ஒழுங்குகளை எடுத்துக் காட்டுகளுடன் இங்குக் காணலாம்.
அள்ளூர் நன்முல்லையாரது பாடலைச் (குறுந்தொகை-202) சிறந்த ஆசிரியப்பா வடிவத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
தொடக்கமும் இறுதியுமாக வரும் நோமென்நெஞ்சே என்ற தொடரும், கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்கு எனும் அடியில் வரும் எதுகை அழகும், “இனிய இன்னா” எனவரும் முரண்தொடை அழகும் பாடலின் ஓசைநயமிக்க வடிவ ஒழுங்குக்குக் காரணமாக உள்ளன. முதல் - இறுதிக்குரிய தொடர்களை மாற்றி இறுதி - முதல் தொடர்களாக அமைப்பதன் மூலம், கவிதையின் உள்ளடக்கத்தையும் உணர்ச்சியையும் மனம் கொள்ள எடுத்துத் தரும் வடிவமைப்பைப் புலவர்கள் செய்து காட்டுவதை முன்பே கண்டுள்ளோம். இன்னளாயினள் நன்னுதல் (குறுந்தொகை-98) யாரணங்குற்றனை கடலே (குறுந்தொகை-163) எனும் தொடக்கங்கள் இத்தகையவை என்பதைப் பாடல்களைப் படித்து உணர முடியும்.
ஒளவையாரின் பாடல்களின் அடிகளைச் சற்று மாற்றியும், மாற்றாமல் அப்படியே மேற்கொண்டும் வருமுலையாரித்தியார் தம் நோக்கிற்கேற்ப அமைத்த கவிதை வடிவம் கவனிக்கத் தக்கது. ஒருநாட்செல்லலம் இருநாட்செல்லலம் பலநாட் பயின்று பலரொடு செல்லினும் என்ற ஒளவையாரின் அடிகளை ஒருநாள் வாரலன் இருநாள் வாரலன் பலநாள் வந்து பணிமொழி பயிற்றி எனச் சற்று மாற்றித் தருகிறார் குறுந்தொகைப் புலவர். ஒளவையார் பாடிய புறநானூற்றுப் (235) பாடல் அடி ஒன்று மாறாமல் இப்பாடலில் இடம் பெற்றிருக்கிறது. ஆசாகெந்தை யாண்டுளன் கொல்லோ என்பது அவ்வடி. புறப்பொருளில் பயன்பட்ட நல்ல வரிகளைப் பொருத்தமறிந்து அகப்பொருளுக்குப் பயன்படுத்திய திறம் பாராட்டுக்குரியது. |