|  
  இப்பாடப் பகுதிப் பாடல்களில் 
 புலவர்கள் பயன்படுத்தியுள்ள
 வெளிப்பாட்டு முறைகள் பற்றி இங்குக் காணலாம். 
 6.2.1 
 இயற்கைப் பின்னணியில் காதல் வாழ்வு 
 
 மனித வாழ்வின் 
 புற நிகழ்வுகளைப் (உழவு, வணிகம், 
 தொழில்கள், போக்குவரவு, உடை, உறையுள், உணவு) பருவங்கள் 
 தீர்மானிக்கின்றன என்பதனை அறிவோம். சங்க இலக்கியம் 
 
 காதல் அக நிகழ்வுகளிலும் பருவங்களை இணையச் செய்கிறது. 
 
 இன்னின்ன பருவங்களில், இன்னின்ன பொழுதுகளில் இன்னின்ன 
 காதல் நிகழ்வுகள் சொல்லப்பட்டால் பொருத்தமாக இருக்கும் 
 
 என வகுக்கப்பட்ட அக இலக்கண மரபுகளின் 
 வழியில் 
 புலவர்கள் தலைவன் - தலைவி தொடர்பான நிகழ்வுகளையும் 
 உணர்வுகளையும் பாடினர். எடுத்துக் காட்டாகத் தலைவனோ 
 
 தலைவியோ பிரிவு காரணமாக மனம் வெதும்பி வருந்தும் 
 
 மனவெம்மைக்குப் பொருத்தமாக வேனில் 
 பருவத்தையும், 
 நண்பகல் பொழுதையும் பின்னணியாக்குவர். அதே போலத்தான் 
 பிற திணைகளும் அமைகின்றன. 
           ஒரு பாடல் 
            முழுவதுமே காலப் பின்னணியைச் சொல்லித் தலைவியின் பிரிவுத் துயரை உணரச் 
            செய்வதைக் கங்குல் வெள்ளத்தார் பாடலில் (குறுந்தொகை-387) காணலாம். 
            ‘ஆற்றியிரு’ என அறிவுரை சொல்லும் தோழிக்குத் தலைவி மாலையையும் இரவையும் 
            சுட்டிக் காட்டுகிறாள். கதிர் சினம் தணிந்த 
            கையறு மாலை - ‘கதிரவனின் 
            வெப்பம் தணிந்த’ என்று சொல்லாமல் ‘சினம் தணிந்த’ என்கிறாள். கதிரவனுக்கு 
            யார்மீது சினம்? தன் மீது தான் என நினைக்கிறாள் தலைவி. சரி, மாலை எப்படி 
            இருக்கிறது?  கையறு மாலை 
            - வேறு எதையும் நினைக்க முடியாமல், எந்தச் செயலையும் செய்ய முடியாமல், 
            அவளைக் கையற்றுப் போகச் செய்யும் மாலை. மாலைக்காவது ஒரு வரம்பு, எல்லை 
            உண்டு. இரவுதான் அந்த எல்லை. ‘இரவு என்ற எல்லையைப் பார்த்துக் கொண்டே 
            மிகுந்த துன்பத்துடன் மாலையை ‘நீந்திக்’ கடந்து விடலாம். ஆனால் இரவு, 
            ‘கரைகாணாக் கடல்’ ஆகிவிடுகிறதே, அதை எப்படி நீந்திக் கடப்பேன்?’ என்று 
            தவிக்கிறாள் தலைவி. மன உளைச்சல் மிக்கவர்கள் இரவு உறக்கம் அற்றுப் போனால் 
            எத்தகைய துன்பத்துக்கு ஆளாவார்கள் என்பது நாம் அறிந்ததே. உறங்கிக் கடக்க 
            வேண்டிய இரவை உறங்காது கடக்க நேரிட்டவர்கள் தலைவி கூறும் “கங்குல் வெள்ளம்” 
            என்ற அனுபவத்தைப் புரிந்து கொள்ள முடியும். நண்பகலும், மாலையும், இரவும் 
            தலைவியின் உணர்வுகளுக்குள் புகுந்து அலைக்கழிப்பதைப் புலவர் மிக அருமையாகப் 
            படம் பிடித்திருக்கிறார். 
 6.2.2 
 உணர்ச்சி வெளிப்பாட்டு முறைகள் 
           காதல் என்பதை 
            வாழ்வின் ஒரு பகுதி என்றுதான் மன முதிர்ச்சியுள்ளவர்கள் கொள்வார்கள். 
            ஆனால் காதலர்கள்? அவர்களுக்கு வாழ்வின் ஒரே பகுதி காதல்தான். இதயத் துடிப்பைக் 
            கணிப்பது போல, காதல் மனத்துடிப்பைக் கணிக்கக் கருவி எதுவும் இல்லை. அத்துடிப்பு 
            மிகும்போது அவர்கள் வாழ்வின் எல்லைக்குச் சென்றுவிடுவதையும் பார்க்கிறோம். 
            நக்கீரனாரின் பாடலில் (குறுந்தொகை-280) வரும் தலைவன் வாழ்வையும் 
            சாவையும் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறான் என்பதைப் பார்க்கலாம். 
            அவனுக்குப் பிறவியின் ஒரே நோக்கம், பயன் ஒருமுறையாவது தலைவியைச் சேர்வதுதான். 
            அவன் நெஞ்சைப் பிணித்துக் கொண்டவள் அவள். அவளை “ஒருநாள் புணரப் புணரின் 
            அரைநாள் வாழ்க்கையும்” அவனுக்குத் தேவையில்லை. அவளைச் சேர்வதனாலோ, வேறு 
            காரணத்தாலோ அவன் உயிர் போவதாயிருந்தாலும் அவனுக்கு உடன்பாடே. என்ன விதமான 
            உணர்ச்சி இது? பிறருக்கு இது மிகை எனத் தோன்றலாம். அவனுக்கு அந்தக் கணத்தில் 
            அது உண்மையான உணர்ச்சி. இன்றுவரை இலக்கியங்கள், நாடகம், திரைப்படம், 
            தொலைக்காட்சித் தொடர்கள் இவைகளில் எல்லாம் இந்த மாதிரிச் சிந்தனை - காதல் 
            தான் வாழ்வு, உயிர் - எனும் கருத்து தொடர்ந்து வருவதைக் காண்கிறோம். 
            தூக்குத் தண்டனைக் கைதியை மணந்து கொள்ளத் துணியும் காதலியைப் பற்றிக் 
            கேள்விப்படுகிறோம். காதலை,  கொன்றிடும் 
            என இனிதாய், இன்பக் கொடுநெருப்பாய் என, பாரதி சொல்வதில், 
            காதல் சாவைக்கூட இனிதாக்கிவிடும் என்பதை உணரலாம்.  காதல் போயின் 
            சாதல் என்றார் பாரதி. ஆனால் நக்கீரர் காதலின் நிறைவேற்றம் வாழ்வின் 
            நிறைவேற்றம், ஆகவே அதன்பின் சாவு வரினும் அது இனியதே என்ற உணர்ச்சி நிலையை 
            எடுத்துக் காட்டுகிறார். காமம் என்ற சொல்லுக்கு நிறைவு எனப் பொருள் கூறிய 
            தொல்காப்பியரின் சிந்தனை இங்கு இணைத்துக் காணத்தக்கது. 
           கல்பொரு சிறுநுரையார் 
            பாடலில் (குறுந்தொகை-290)  காமம் தாங்கு - ‘பொறுத்துக் 
            கொள்’ என்னும் தோழியைப் பார்த்துத் தலைவி ‘தாங்கக்கூடிய வேதனையா அது? 
            உனக்குத் தெரியாதா’ என்னும் பொருள்படச் சொல்லிவிட்டுப் பிரிவுத் துயரத்தின் 
            உச்சநிலை ‘இல்லாமல் போவது’ என ‘முடிவு’ சொல்கிறாள். அவள், சாவை நெருங்குவதாக 
            உணர்வதைப் புலவர் அருமையான ஓர் உவமையின் மூலமாக எடுத்துக் காட்டுகிறார். 
            அவள் நினைக்கின்ற, அல்லது எதிர்பார்க்கின்ற சாவு கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி 
            வருவது. உவமை அதற்குப் பொருத்தமாக அமைகிறது. கல்லில் வெள்ளம் மோதும் 
            போது உருவாகும் சிறு நுரை ஒவ்வொன்றாகச் சிறிது சிறிதாக அழிந்து முற்றிலும் 
            இல்லாமல் போவது போல, ‘மெல்ல மெல்ல இல்லாமல் போவேன்’ என்கிறாள் தலைவி. 
            தலைவியின் உயிர்தவச் சிறிது, காமமோ பெரிதே” (குறுந்தொகை-18) என்று 
            சொன்ன தோழியின் உணர்வுதான் இங்கும் சொல்லப்படுகிறது. ஆனால், இங்கு  
            அணு அணுவாகச் சாதல் என்பது 
            ஒரு காட்சி போலச் சித்திரிக்கப்படுவதைப் பார்க்கிறோம். 
           குப்பைக் கோழியார் 
            பாடலிலும் (குறுந்தொகை-305) பிரிவுத்துயர் தாங்காத தலைவி ‘யாராலும் 
            கவனிக்கப்படாமல் நான் அழிந்து போகிறேன் ; என் முடிவுடன் தான் என் துயர்போகும்’ 
            -  விளிவாங்கு விளியின் அல்லது களைவோர் 
            இல்லையான் உற்ற நோயே என்று புலம்புவதைப் பார்க்கிறோம். 
  இந்த மூன்று பாடல்களிலும் 
 பிரிவின் துயரம் சாவை 
 எல்லையாகக் கொண்டிருக்கிறது எனத் தலைவன் - தலைவியர் 
 உணர்வதைப் பார்க்கிறோம். காதல் வயப்பட்டவர்களுடைய 
 
 இத்தகைய உணர்ச்சி நிரந்தரமானதன்று; இணைகள் சேரும் போது 
 இவ்வுணர்ச்சி மறையும் என்பதை வாழ்வைக் கவனிக்கின்ற 
 
 எல்லாருமே புரிந்துகொள்ள முடியும். 
          6.2.3 காட்சித் 
            தன்மை - நாடகத் தன்மை 
          அழகிய கவிதைப் 
            படிமங்கள் படிப்போர் மனத்தில் புதுமையான காட்சிகளை எழுப்பும் ஆற்றல் 
            பெற்றவை. ஓரிரு சொற்களே மனக் காட்சியை உருவாக்கப் போதுமானவை. குன்றியனார் 
            பாடலில் (குறுந்தொகை-238) வரும் ஒரு படிமம். அவலிடிக்கும் பெண்கள் விளையாடப் 
            போகும் போது உலக்கையை வரப்பில் போட்டுச் செல்கின்றனர். புலவர்   
            வரம்பணைத்துயிற்றி என்கிறார். 
            உலக்கையை ‘வரப்பாகிய அணையில் துயிலச்செய்து’ போனார்கள் என்பது பொருள். 
            உலக்கை துயில்வதாகக் காட்டுகிறார் கவிஞர். ‘துயிற்றுதல்’ என்ற காட்சிப் 
            படிமத்தின் மூலம் உலக்கையை உயிர்ப் பொருளாக்கி, உழைத்த அலுப்புத்தீர 
            உறங்கவும் வைக்கிறார். இதே பாடலில் தோழி தலைவனிடம் ‘உன் பரத்தமை ஒழுக்கம் 
            காரணமாக அழிந்துபோன தலைவியின் அழகைத் திருப்பிக்கொடு ; உன் பொய் வாக்குறுதியை 
            நீயே எடுத்துக் கொண்டு போ’ என்னும்போது அழகும், உறுதிமொழியும் கொடுக்கல் 
            வாங்கல் பொருள்களாகப் படிமப் படுத்தப்படுகின்றன. 
 கங்குல் வெள்ளத்தார் பாடலில் (குறுந்தொகை-387) 
 ‘கதிரவன் 
 சினம்  தணிந்தது’, தலைவி ‘மாலையை நீந்திக்கடப்பது’ 
 
 ‘கடலைவிடப் பெரிய, நீந்தமுடியாத வெள்ளமாக இரவு விரிவது 
 ஆகியவைகள் படிமக் காட்சிகளாக மனத்தைக் கவர்கின்றன. 
  |