பாடம் – 6

D01116 குறுந்தொகை - 3

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

குறுந்தொகை - பாடப்பகுதியின் இறுதி 14 பாடல்களின் உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்பு ஆகியவற்றை இப்பாடம் விளக்கிச் சொல்கிறது.

காதல் உணர்வின் உச்ச நிலையில் வாழ்வின் மிக அருகில் சாவு நிழலாடுவதாகக் காதலர்கள் உணர்வர் என்பதை இப்பாடப்பகுதியில் மூன்று பாடல்கள் காட்டுகின்றன.

சிறந்த உவமைகள் இப்பாடல்களில் இடம் பெற்றுள்ளன.

பெற்றோர் தேடிய செல்வம் மிகுதியாக இருந்தாலும், தாம் ஈட்டாமல் பெற்றோர் செல்வத்தைச் செலவு செய்வோரை ‘வாழ்வோர்’ எனச் சொல்ல முடியாது எனும் கருத்தை ஒரு தலைவி அழுத்தமாகச் சொல்கிறாள்.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
‘குப்பைக் கோழித் தனிப்போர்’, ‘கவைமக நஞ்சுண்டாங்கு’, ‘கங்குல் வெள்ளம்’, ‘பாசியற்றே பசலை’, ‘கல்பொரு சிறுநுரை’ போன்ற உவமைகளின் ஆற்றலால் இப்பாடல்களில் கவிதை இன்பம் எவ்வாறு பெருகுகிறது என்பதை அனுபவித்து உணரலாம்.

மாலையும், இரவும் வெறும் பொழுதுகள் மட்டுமல்ல; அவை உணர்வுகளுள் புகுந்து அலைக்கழிக்கின்றன எனத் தவிக்கும் காதலரைச் சந்திக்கிறோம் ; அவர்கள் மூலம், இயற்கை ஆளப்படுவது மட்டுமன்று, ஆள்வதும் கூட எனப் புரிந்து கொள்ளலாம்.

புலவர்களின் படிமங்கள் எந்தக் கருத்துக்கும் உணர்வுக்கும் புதிய வடிவைத் தந்துவிடுவதைப் புரிந்து மகிழ்வோம்.
பேச்சு, ஏச்சு, ஆற்றாமை, வருத்தம் எனும் பல்வேறு உணர்வுகளுக்கும் அடி இழையாகத் தெரிவது மாசற்ற அன்பே என்பதை இப்பாடல்களை ஆழ்ந்து படிக்கும்போது உணரலாம்.