2.2 பாலை நிலம் பற்றிய செய்திகள்

சிறுபாணனை வறுமைத் துன்பம் வாட்டுகிறது. தன் துன்பத்தைப் போக்குவதற்கு வழி அவனுக்குத் தெரியவில்லை. யாராவது உதவ மாட்டார்களா என்னும் எண்ணத்தில் நடைப் பயணமாக அவன் சென்று கொண்டிருக்கிறான். அவன் செல்லும் பகுதி பாலை நிலமாக உள்ளது. இந்நிலம் பற்றி, சிறுபாணாற்றுப்படை முதல் 12 அடிகளில் கூறுகின்றது. அச் செய்திகளைப் படிப்பதற்கு முன்பு பாலை நிலம் பற்றிய சில செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

2.2.1 நில அமைப்பும் இயல்பும்

இயற்கை அமைப்பை அடிப்படையாகக் கொண்டு நிலப் பகுதியை ஐந்து வகையாகப் பிரிப்பர். அவை:

குறிஞ்சி - மலையும் அதனைச் சார்ந்த பகுதியும்

முல்லை - காடும் அதனைச் சார்ந்த பகுதியும்

மருதம் - வயலும் அதனைச் சார்ந்த பகுதியும்

நெய்தல் - கடலும் அதனைச் சார்ந்த பகுதியும்

பாலை - மணலும் அதனைச் சார்ந்த பகுதியும்

இவற்றுள் பாலைவனம் என்பது தமிழகத்தில் இல்லை. ஆயினும், குறிஞ்சி நிலமும் முல்லை நிலமும் தமது இயல்புகளில் இருந்து மாறுபடுவது உண்டு. இங்ஙனம் மாறுபட்ட நிலப் பகுதி பாலை என்று அழைக்கப்பட்டது.

பாலை நிலத்தின் இயல்பு

விரிந்து பரந்த நெடிய மணல் பரப்பு.

பொதுவாக உயிரினங்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற சூழல்.

நீர் அற்ற வறண்ட பகுதி.

வெப்பம் மிக்க நிலப் பகுதி.

சுழல் காற்று (சுழன்று வேகமாக வீசும் காற்று) மிகுந்த பகுதி.

வழிப்பறிக் கொள்ளையர்கள் (வழிப் போக்கர்களைத் தாக்கி அவர்களின் பொருள்களைக் கவர்ந்து செல்வோர்) வாழும் பகுதி.

2.2.2 நிலமும் பொழுதும்

மேலே கூறியது போல நீரற்ற - வறண்ட - உயிர் இனங்கள் வாழ்வதற்குத் தகுதி அற்ற - வெப்பம் நிறைந்த நிலப் பகுதியே பாலை நிலம் ஆகும். அங்கே, வெப்பம் நிறைந்த மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி (மார்ச் - ஆகஸ்டு) ஆகிய மாதங்களில் கடுமையான வெப்பம் நிலவும். இம் மாதங்கள் அந்நிலத்துக்கு உரிய பெரும்பொழுதுகள் (1) என்று கூறப்படுகின்றன. அதுபோல் நண்பகல் பொழுது இதற்கான சிறுபொழுது (2) ஆகும்.

(1) பெரும்பொழுது - ஓர் ஆண்டின் பிரிவுகள்

(2) சிறுபொழுது - ஒரு நாளின் பிரிவுகள்

ஐவகை நிலங்களுக்கு உரிய பொழுதுகள்

நிலம்

பெரும்பொழுது

சிறுபொழுது

குறிஞ்சி

கூதிர்காலம் (ஐப்பசி, கார்த்திகை) முன்பனிக் காலம் (மார்கழி, தை)

யாமம் (இரவு 10 மணி - 2 மணி)

முல்லை

கார்காலம் (ஆவணி, புரட்டாசி)

மாலை (மாலை 6 மணி - இரவு 10 மணி )

மருதம்

பெரும்பொழுது ஆறும்

வைகறை (இரவு 2 மணி - காலை 6 மணி) விடியல் (காலை 6 மணி - 10 மணி)

நெய்தல்

பெரும்பொழுது ஆறும்

எற்பாடு (பிற்பகல் 2 மணி - மாலை 6 மணி)

பாலை

இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற்காலம் (ஆனி, ஆடி), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி).

நண்பகல் (காலை 10 மணி - பிற்பகல் 2 மணி)

பாலை நிலம் பற்றிய இப் புரிதலோடு சிறுபாணாற்றுப்படை தரும் பாலை நிலச் செய்திகளைத் தொடர்ந்து பார்க்கலாம்.

2.2.3 பாலை நிலக் காட்சி

பாணர்கள் வறுமைத் துன்பத்தில் தவிக்கின்றனர். அவர்களது துன்பத்தை மேலும் அதிகப்படுத்துவதாகப் பாலை நிலத்தின் இயல்புகள் உள்ளன. பாணர்களின் நெஞ்சத்தில் ஏற்பட்டுள்ள துன்பத்தை மிகுதிப்படுத்திக் காட்டும் வகையில் பாலைநிலப் பின்னணியைப் புலவர் நத்தத்தனார் அமைத்துள்ளார்.

நில மடந்தை

நிலத்தைப் பெண்ணாகப் (நில மடந்தை) புலவர் உருவகம் செய்கிறார். அவள் மூங்கில் ஆகிய தோள்களை உடையவள். மலையில் இருந்து வீழும் அருவியே அவள் மார்பகத்தின் மேல் கிடக்கும் முத்துமாலை. அருவி, மலையைவிட்டு இறங்கி அருகில் உள்ள காட்டிற்குள் நுழைகிறது. பிறகு காட்டாறாக மாறுகின்றது.

மணிமலைப் பணைத்தோள் மாநில மடந்தை

அணிமுலைத் துயல்வரூஉம் ஆரம் போல

செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாற்று (அடிகள்: 1-3)

வேனில் காலம்

காட்டாற்றின் நீர், கரையை மோதித் தாக்குகிறது. அதனால் அங்கு உள்ள பூம்பொழில் வருந்துகிறது. இவ்வாறு குறிஞ்சி மற்றும் முல்லை நிலங்கள் கார் (மழை) காலத்தில் உள்ளன.

ஆனால், இப்பொழுது கார் காலம் முடிந்து விட்டது. வேனில் (வெயில்) காலம் தொடங்கி விட்டது. இக்காலத்தில் குறிஞ்சி மற்றும் முல்லை நிலக்காட்சி மாறுகிறது. மலையில் அருவிகள் இல்லை. காட்டாற்றில் நீர் இல்லை. அதனால் குயில்கள் பூம்பொழிலில் நுழைந்து விளையாடுகின்றன. தம் அலகால் பூக்களைக் குடைகின்றன (கொத்துகின்றன). பூக்கள் உதிர்ந்து கரிய நிறத்தில் உள்ள ஆற்று மணற் பரப்பில் கிடக்கின்றன.

இத்தகைய மணல் பரப்பு வெப்பத்தால் சூடாகிக் கிடக்கிறது. அம்மணலில் கிடக்கும் பரல் கற்களும் (பருக்கைக் கற்கள் - சிறிய கற்கள்) வெப்பத்தால் சூடாகிக் கிடக்கின்றன. வெப்பம் மிகுந்த மணலும், பரல் கற்களும் அவ்வழியாக நடந்து செல்லும் பாணர்களின் கால்களுக்கு மிகுந்த துன்பத்தைத் தருகின்றன.

வெயில் உருப்புற்ற வெம்பரல் கிழிப்ப (அடி, 8)

வேனில் காலத்து வெயிலின் கொடுமை

இங்ஙனம், வறுமைத் துன்பம் வாட்ட, வழிநடைப் பயணமாகப் பாணர்கள் செல்கின்றனர். அவர்களது துன்பத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அவர்கள் செல்லும் பாலைநில வழி வெப்பம் மிகுந்து உள்ளது. பாலை நிலத்து வேனில் கால வெப்பம் கடுமையாக இருப்பதை,

காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்ப (அடி, 10)

என்று புலவர் குறிப்பிடுகிறார்.

வழக்கமாக ஒரு நாளில் வெப்பம் நண்பகல் வேளையில் மிகுதியாக இருக்கும். காலை, மாலை வேளைகளில் வெப்பம் குறைந்து இருக்கும். ஆனால், வேனில் காலத்தில் பாலை நிலத்தில் காலை, மாலை நேரங்களில் கூடச் சூரியனின் வெப்பம் நண்பகல் வெப்பத்தைப் போல இருப்பதாகப் புலவர் கூறுவது அறிந்து இன்புறத்தக்கதாகும்.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - I

1.

'பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇ' என்று குறிப்பிடும் நூல் எது?

விடை

2.

பாணர்களின் பரந்த உள்ளத்தைக் காட்டுவது எது?

விடை

3.

தமிழகத்தில் பாலைவனம் உள்ளதா?

விடை

4.

பாலைக்கு உரிய சிறுபொழுது யாது?

விடை