6.1 உவமை

புலவர்கள் தாம் கண்ட காட்சிகளைப் படிப்பவர் உள்ளத்தைக் கவரும் வகையில் படைத்தளிக்கும் முறைகளுள் தலைசிறந்ததாக உவமையைக் கூறலாம். உவமை நான்கு அடிப்படைகளில் பிறக்கும். அவை:

(1) வினை

(2) பயன்

(3) வடிவம்

(4) வண்ணம்

சிறுபாணாற்றுப்படையிலும் இந்நான்கு வகை உவமைகள் அமைந்துள்ளன.

6.1.1 வினை உவமம்

மன்னன் நல்லியக்கோடனைப் புலவர் நத்தத்தனார், உறுபுலித் துப்பின் ஓவியர் பெருமகன் என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரிய புலி போலும் வலிமை பொருந்தியவன் நல்லியக்கோடன் என்பது இதன் பொருள் ஆகும். இங்கு நல்லியக்கோடனின் செயல் வலிமைக்குப் புலியின் செயல் வலிமை உவமையாகக் கூறப்பட்டது. ஆகையால் இது வினை உவமம் ஆயிற்று.

6.1.2 பயன் உவமம்

பாணர்களுக்கு விருந்தோம்புவதில் சிறந்தவன் நல்லியக்கோடன். இவன் பாணர்களுக்கு உணவுடன் நல்ல தேறலையும் (கள்) கொடுத்துக் குடிக்கச் செய்தான். இத்தேறலை உண்ட பாணர்களுக்குப் போதை மயக்கம் உண்டாயிற்று. இது பாம்பு கடித்த உடன் அதன் நஞ்சு தலைக்கு ஏறி மயக்குவது போன்று இருந்ததாம். இதனை, பாம்பு வெகுண்டன்ன தேறல் என்று நத்தத்தனார் கூறுவதன் மூலம் அறியலாம். இது தேறல் உண்டதன் பயன். ஆதலால் இது பயன் உவமம் ஆயிற்று.

6.1.3 வடிவ உவமம்

யானையின் துதிக்கையைப் போன்று பெண்களின் சடைப்பின்னல் இருந்ததாம். உவமையின் அழகைப் பாருங்கள். தும்பிக்கையானது தொடக்கத்தில் பெருத்தும் போகப் போகச் சிறுத்தும் காணப்படும். அதுபோல் பெண்களின் சடையும் தொடக்கத்தில் பெருத்தும் போகப் போகச் சிறுத்தும் காணப்படுகிறதாம்.

பெண்கள் சடையின் வடிவத்திற்கு யானையின் தும்பிக்கை ஒப்புமை கூறப்பட்டமையால் இது வடிவ உவமம் ஆயிற்று. இதனை மெய் உவமம் என்றும் கூறுவர். இவ்வுவமையைக் கூறும் வரிகள் இவை:

உரன்கெழு நோன்பகட்டு உழவர் தங்கை
பிடிக்கை அன்ன பின்னுவீழ் சிறுபுறத்துத்
தொடிக்கை மகடூஉ. . . .

(அடிகள், 190-192)

6.1.4 வண்ண உவமம்

சீறியாழில் பத்தரின் மேல் செந்நிறத் தோல் மூடியிருந்தது. இது குமிழம் பழத்தின் நிறம்போல் இருந்தது என்பதை,

கானக் குமிழின் கனிநிறம் கடுப்பப்
புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு

(அடிகள் 225-6)

என்னும் அடிகள் கூறுகின்றன. இவ்வுவமை நிறத்தின் அடிப்படையில் அமைந்தது ஆகும்.

அதுபோல், நல்லியக்கோடன் பரிசிலர்க்கு வழங்கும் ஆடை தூய்மையான வெள்ளை நிறம் உடையது. இந்த ஆடைக்கு மூங்கிலின் உள்ளே இருக்கும் வெள்ளிய தோல் உவமை ஆக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டு உவமைகளும் வண்ணத்தின் அடிப்படையில் அமைந்தமையால் வண்ண உவமை (உரு உவமை) ஆயிற்று.