2.2 நூற்று ஏழு, நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டுகள்

நூற்று ஏழாம் பாட்டு பாரி பாரி என்று பல ஏத்தி எனத் தொடங்குவது. இப்பாடலைப் பாடியவர் கபிலர். இப்பாடல் பாரி என்னும் குறுநில மன்னனைக் குறித்தது.

நூற்றுப் பன்னிரண்டாம் பாட்டு அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின் எனத் தொடங்குவது. இப்பாடலைப் பாடியவர்கள் பாரி மகளிர் ஆவர்.

2.2.1 பாரியும் கபிலரும் (107ஆம் பாட்டு)

பாரி பறம்பு நாட்டை ஆண்டவன்; குறுநில மன்னன்; கடையெழு வள்ளல்களில் ஒருவன்; முல்லைக்கொடி ஒன்று பற்றிக் கொள்ளக் கொம்பு இல்லாது வாடுவது கண்டு தன் தேரை அதற்குக் கொடுத்தவன். கபிலர் சங்கப் புலவருள் புகழ் மிக்கவர். பாரியோடு நீண்ட காலம் உடன் வாழ்ந்து நட்புச் செய்தவர். பாரி இறந்தபின், பாரியின் மகளிரை அழைத்துக் கொண்டு வேறு நாடு சென்றார் கபிலர். பின் நண்பனை எண்ணி உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் என்பது வரலாறு.

மாரியும் உண்டு

பாரியின் புகழ் பெருகியது. அது மூவேந்தரையும் வருத்தியது; பொறாமை கொள்ளச் செய்தது. பாரியின் பறம்பு நாடு வளமிக்கது. உழவர் உழாமலே வளங்கள் மிகுந்து காணப்பெறுவது. இவ்வளமிக்க நாட்டின் தலைவனாகிய பாரி போர்க்களத்தில் யாருடைய மார்பில் வேலை எறிவது வாளை வீசுவது என ஆராய்ந்து செயல்படுவான். ஆனால் உதவி வேண்டி வந்து நிற்போரில் இன்னாருக்குக் கொடுக்கலாம் இன்னாருக்குக் கொடுக்கக் கூடாது என்று பாகுபாடு செய்ய அறியாதவன். இந்த அறியாமையை அறிஞர் உலகம் கொடைமடம் என்று போற்றியது. பாரி படைமடம் கொண்டவன் அல்லன்; கொடைமடம் கொண்டவன் எனப் புகழ்ந்தது. ”பாரி ஒருவன்தானா உலகைக் காப்பாற்றுகின்றவன். மாரி (மழை) இல்லையா?” எனப் பாரியைக் குறைத்துக் கூறுவதைப்போல உயர்த்திப் பேசுகின்றார் கபிலர்.

பாட்டும் கருத்தும்

பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே

என்பது நான்கடிப் பாட்டு. இதன் பொருள் வருமாறு:

“பாரி பாரி என்று கூறி அவனுடைய பலவகைப்பட்ட புகழையும் வாழ்த்திச் சிறந்த புலமை மிக்க புலவர் அவன் ஒருவனையே போற்றுவர். பாரி ஒருவனே பெரிய வள்ளல் தன்மை உடையவன் அல்லன்; இவ்வுலகைப் பாதுகாப்பதற்கு மாரியும் இருக்கின்றது.”

மேகத்தைப் போன்றவன் பாரி என நேராகக் கூறாமல், மறைமுகமாகக் கூறிய உத்தி நினைதற்குரியது.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பாடாண். பாரியின் கொடை மேம்பாட்டைக் கூறியமையின் இது பாடாணாயிற்று. இதன் துறை இயன்மொழி. மாரியின் இயல்பு போலப் பாரியும் கொடை சுரந்து உலகு உயிர் பேணும் இயல்பினன் என்றமையின் இயன்மொழித் துறை ஆயிற்று.

2.2.2 பாரி மகளிர் (112ஆம் பாட்டு)

பாரி மகளிர் இருவர் என்று கூறுவர். பிற்கால நூல்கள் இவர்கள் அங்கவை, சங்கவை என்ற பெயருடையவர்கள் எனக் கூறும். தந்தையோடு வாழ்ந்த காலத்தில் செல்வச் செழி்ப்போடு வாழ்ந்த பாரி மகளிர், பாரி இறந்தபின் துன்பம் அடைந்தனர். கபிலர் அவர்களைத் திருமணத்தின் பொருட்டாக அழைத்துக் கொண்டு பறம்பு மலையை நீங்கினார். ஊர் ஊராகச் சென்று அம்மகளிரை மணப்பதற்குரிய அரசக் குடியினரிடம் மணம் செய்து கொள்ள வேண்டினார். விச்சிக்கோன் என்பானிடம் சென்று “இவர்கள், முல்லைக் கொடி வாடியது பொறுக்காமல் தேரீந்த பாரியின் மகளிர்; நான் அந்தணன்; புலவன்; இவரை நான் கொடுப்ப நீ கொள்க” என்று கூறினார். பயனில்லை. இருங்கோ வேள் என்பானிடம் சென்று இவ்வாறே வேண்டினார். அங்கும் பயன் விளையவில்லை. இறுதியில் அம்மகளிரைப் பார்ப்பனரிடம் சேர்த்துவிட்டு வடக்கிருந்து உயிர் விட்டார். (வடக்கிருத்தல் - உண்ணா நோன்பு கொண்டு வடக்கு நோக்கியிருந்து உயிர் விடுதல்)

பாட்டும் கருத்தும்

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே.

என்பது அப்பாட்டு. இதன் கருத்து வருமாறு:

“மூவேந்தரும் முற்றுகை இட்டிருந்த அந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் எங்கள் தந்தையை நாங்கள் பெற்றிருந்தோம். எங்களுடைய மலையையும் பிறர் கொள்ளவில்லை; எங்களிடமே இருந்தது. இந்த நிலாக் காலத்தின் வெண்மையான நிலா ஒளியில் வென்று ஒலிக்கும் முரசினைக் கொண்ட வேந்தர்கள் எம்முடைய மலையைக் கொண்டார். நாங்கள் எங்கள் தந்தையையும் இழந்தோம்”.

மூவேந்தர் ஒன்று கூடித் தம் தந்தையை வஞ்சித்துக் கொன்றதை உணர்த்த வென்றெறி முரசின் வேந்தர் என இகழ்ச்சியாற் குறித்தனர்.

பாட்டின் திணை, துறை விளக்கம்

இப்பாட்டின் திணை பொதுவியல். முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலை, பின்பு தோன்றிய அவலம் எனத் தம் வாழ்வியலை உரைக்கும் இப்பாட்டு ஏழு திணைகளிலும் காணாத பொதுச் செய்தியை உரைப்பதால் இது பொதுவியலாயிற்று. மாந்தர் அனைவர் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் பொதுவாக நிகழக் கூடியன ஆதலாலும் பொதுவியல் திணை சார்ந்தது எனலாம்.

இப்பாட்டின் துறை கையறு நிலை. தம்மைச் சேர்ந்தோர் மாய்ந்த நிலையில் மனம் வெதும்பிப் புலம்புவது கையறு நிலையாகும். பாரி இறந்தபின் தமக்குற்ற அவலத்தை (துன்பத்தை) அவன் மகளிர் கூறியதால் கையறு நிலை ஆயிற்று இப்பாட்டு.