6.3 மூன்றாம் பாட்டும் நான்காம் பாட்டும்

மூன்றாம், நான்காம் பாடல்களாக அருவி ஆம்பல், உரைசால் வேள்வி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

6.3.1 அருவி ஆம்பல் (மூன்றாம் பாட்டு)

இப்பாட்டின் பெயர் அருவி ஆம்பல். ‘அடையடுபு அறியா அருவி ஆம்பல்’ என்ற அடிக்கு உரையாசிரியர். ‘இலை அடுத்தலை அறியாத பூவல்லாத ஆம்பல்’ என்று எழுதுவதால் இஃது ஆம்பல் மலரைக் குறிக்காது. இங்கு ஆம்பல் என்பது (இலட்சம், கோடி போல) ஒரு பேரெண்.

பாட்டின் கருத்து

''அந்தணரைத் தவிர மற்ற எவர்க்கும் பணிந்து அறியாதவன் நீ. நட்பின் நிலையில் தாழ்வுபடாத உள்ளத்தால் நண்பர்க்குத் தவிர வேறெவர்க்கும் அஞ்சாதவன் நீ. வில் உரசும் உன் மணம் பொருந்திய மார்பினை உனக்கு உரிய மகளிர்க்குத் தவிர வேறு எவருக்கும் விரித்துத் தராதவன் நீ. இந்த நிலமே தன் நிலையிலிருந்து மாறுபட்டாலும் உன் வாயால் சொல்லிய சொல் பொய்ப்பதை அறியாதவன் நீ.

சிறிய இலைகளை உடைய உழிஞைப் பூமாலையை அணிந்து பகைப் புலத்தில் கொள்ளத் தக்க பொருள்மிக உண்டாகுமாறு குளிர்ந்த தமிழ் நாட்டை வென்று இணைத்தவன் நீ. மலைகள் நிலை கலங்க இடி ஒலிப்பது போலச் சினந்து சென்று, ஒரு முற்றுகையில் சோழனையும் பாண்டியனையும் வென்று புறங்கண்டவன் நீ. வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும், எப்போரிலும் வெற்றியையும் உடையவனே! உன்னால் வெற்றி கொள்ளப்பட்ட வீரர் பகைவரிடமிருந்து மாறி உன்னிடம் வந்தனர். உன் தாள் நிழல் அடைந்து உன்வழி நிற்போம் எனக் கூறினர். உன் குலத்தவர்க்கு உரிய வீரத்தால் மேலும் பல போர்களில் நீ வென்றாய். அதனால் சேரர் குடித்தோன்றலே! செல்வக் கடுங்கோவே! காற்றால் சுருட்டப்படும் அலைகள் எறிய முழங்கும் கடலை வேலியாகக் கொண்ட இப்பெரிய உலகில் வாழும் நன் மக்கள் செய்த அறம் இருக்கிறது என்றால் நீ நெடுங்காலம் வாழ வேண்டும். இலைகளால் சூழப்படாத பூக்கள் அல்லாத பல ஆம்பல் என்னும் பேரெண்ணும், அதனை ஆயிரத்தால் பெருக்கிய வெள்ளம் என்னும் பேரெண்ணும் சேர்ந்த எண்ணிக்கை கொண்ட பல ஊழிக்காலம் நீ வாழ்வாயாக!" இவ்வாறு வாழ்த்துகிறார் கபிலர்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை, வண்ணம், தூக்கு என்பன முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் அருவி ஆம்பல். ஆம்பல் என்ற சொல் அல்லி என்னும் நீர்ப்பூ; பல ஆயிரம் அடங்கிய பேரெண் என்னும் இரு பொருள்களைக் குறிக்கும். பூவைக் குறிக்காமல் எண்ணிக்கையைக் குறிக்கும் ஆம்பல் என்று அதனை வேறுபடுத்திக் காட்டக் கபிலர் இலைகளுக்கிடையே மலராத ஆம்பல் என்று நயமாகக் கூறினார். 'அடையடுத்து அறியா அருவி ஆம்பல்' என்னும் அடியின் அருமை கருதி இப்பாட்டு அருவி ஆம்பல் என்று பெயரிடப் பெற்றது.

6.3.2 உரைசால் வேள்வி (நான்காம் பாட்டு)

உரைசால் வேள்வி என்பது இப்பாட்டின் பெயர். உயர்ந்த புகழமைந்த வேள்வி என்பது இதன் பொருள். அந்தணர் அத்தகைய வேள்விகளைச் செய்தனர் என இப்பாட்டுக் கூறுகின்றது.

பாட்டின் கருத்து

''வெற்றி உண்டாக முழங்கும் முரசினையும், தவறாத வாளினால் பெறும் வெற்றியினையும், அரசு உரிமையையும், பொன்னாற் செய்த அணிகலன்களையும் உடைய வேந்தர்கள் பலர் இருக்கின்றனர். அவர்களால் என்ன பயன்?

அறநூல்களை ஓதிப் பயின்ற நாவினையும், உயர்ந்த புகழமைந்த வேள்விகள் செய்தற்கேற்ற அறிவினையும் உடைய அந்தணர்களுக்குப் பெறுவதற்கு அரிய அணிகலன்களை நீ அளித்தாய். அவற்றை நீர்வார்த்துக் கொடுத்தலால் அரண்மனை முற்றம் சேறாயிற்று. களிறுகள் ஈரத்தில் நிற்பதை வெறுத்தன. மண் நிறைந்த அந்த முற்றத்தையும்; புலவர், கலைஞர் ஆகிய பரிசிலர் அல்லாத பிறர் செல்ல முடியாத காவலையும் உடையது உன் அரண்மனையின் அவ்விடம். அவ்விடத்தே கூத்தர்கள் வந்து நிற்பதைக் கண்டாலும், வேலையுடைய படைவீரர்கள் வென்று கொண்டு வந்தனவும் கத்தரித்து அழகு செய்யப்பட்ட பிடரியினையுடையனவும் ஆகிய குதிரைகளையும், அசைகின்ற காளைகள் பூட்டிய தேர்களையும் அவற்றுக்குரிய அணிகலன்களைப் பூட்டிக் கொடுப்பீராக என்று ஆட்களை ஏவி விரைந்து கொடுக்கும் கொள்கையை உடையவன் நீ. ஆதலால் உன்னைக் காணவந்தேன் நான்.

கரிய பெரிய வானத்தே ஞாயிறு தோன்றிப் பல விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தது போலச் சேரர் குடியில் நீ தோன்றிப் பகைவரின் புகழைக் கெடுத்தாய். உப்பங்கழியில் தோன்றி மலர்ந்த கருமையான நெய்தற் பூவைப் போன்ற அழகிய மேகத்தைக் காட்டிலும் நீ மிக்க பயனை வழங்குகின்றாய். அதனால் எப்போதும் பசிமிக்க இரவலரின் சுற்றம் பசி நீங்கியது. புகழ்மிக்கவனே! இப்பெருமையால் உன் வலிய தாள்களை வாழ்த்தி உன்னைக் காண உனது பாசறைக்கு வந்தேன்.'' சேரனின் கொடைச் சிறப்பை இவ்வாறு கபிலர் புகழ்கிறார்.

பாட்டின் துறை முதலியன

இப்பாட்டின் துறை காட்சி வாழ்த்து. அரசனை நேரே கண்டு வாழ்த்தினமையான் இது காட்சி வாழ்த்தாயிற்று. வண்ணமும் தூக்கும் முந்திய பாட்டுக்குரியன. பாட்டின் பெயர் உரைசால் வேள்வி. 'இரவலர் பசி தீர்க்கும் சேரனின் ஈகையாகிய வேள்வி இனிய தமிழால் பாடப்பெறுதற்கு உரியது' என்னும் குறிப்பைத் தருவதால் இத்தொடர் பாட்டின் பெயராக அமைந்தது.