1.3 தமிழில் அகப்பொருள் இலக்கியங்கள்

அகப்பொருள் என்ற பாடுபொருளும் அது பற்றிய இலக்கண வரையறைகளும் தமிழில் தனித்தன்மையும் முதன்மையும் பெற்றிருப்பதைப் பல சான்றுகள் கொண்டு உணர்ந்தோம். அந்த முதன்மையை மேலும் வலியுறுத்துவது போல் தமிழ் இலக்கிய நூல்களும் அமைந்துள்ளன.

  • எட்டுத்தொகை
  • சங்க இலக்கியங்களில் பெரும்பான்மை இடம் பெற்றிருப்பவை அகப்பாடல்களே ஆகும். எட்டுத்தொகையில் உள்ள நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு என்னும் ஐம்பெருந் தொகுப்புகளும் அகப்பொருள் பற்றியன. பரிபாடலிலும் அகச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.

  • பத்துப்பாட்டு
  • பத்துப்பாட்டில் உள்ள முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை ஆகிய நூல்களும், ஒரு வகையில் நெடுநல்வாடையும் அகத்துறை சார்ந்தவை. சங்கத் தமிழ்ப் பாடல்கள் மொத்தம் 2381; அவற்றுள் அகம் சார்ந்தவை 1862 என்றொரு கணக்கீடும் கருதற்கு உரியது.

  • கீழ்க்கணக்கு நூல்கள்
  • சங்க காலத்திற்குப் பின் எழுந்த கீழ்க்கணக்கு நூல்களில் கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது ஆகியவையும் திருக்குறளின் ஒரு பிரிவாகிய காமத்துப் பாலும் அகப்பொருள் பற்றியன.

  • அகப்பாடல்கள் பெருகக் காரணம்
  • பழந்தமிழகத்தில் தம் உரிமையைக் காப்பதற்காக அன்றிப் பிறர் உரிமையைப் பறிப்பதற்காகவும் மன்னர்கள் போரிட்டனர். வேறு சிலர் புகழ் கருதியும் போர் நிகழ்த்தினர். இவற்றை உற்று நோக்கிய சங்கத் தமிழ்ச் சான்றோர் பகையை மிகுவிக்கும் புற வாழ்க்கையைப் பெரிதும் பாடாது, அன்பினை மிகுவிக்கும் அகவாழ்வை மிகப் பாடினர் எனக் கருதலாம். அகமே, கல்லான நெஞ்சையும் கனிவிக்கும் வல்லமை மிக்கது.