இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி ஆவார். இவர்
புளிங்குடி என்ற ஊரினர். உய்யவந்தான் என்பாரின் மைந்தர்.
சமண சமயத்தவர். தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர்.
ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி - வித்தாரக்கவி என்னும்
நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அது
கருதியே ‘நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டவர். நம்பி,
என்பதே இவரது இயற்பெயர்.
நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு “அகப்பொருள்
விளக்கம்” என்று பெயரிட்டுள்ளார். இவரே நூலுக்கு
உரையும் எழுதியுள்ளார். தமது உரையில் பொய்யாமொழிப்
புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்களை
உதாரணம் காட்டியுள்ளார். தம் நூலைப்
பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றியுள்ளார்.
தொல்காப்பியர்
வகுத்துரைத்த அகப்பொருள் இலக்கணத்தை மனத்தில் கொண்டு, சங்கப்
புலவர் செய்யுட்களில் காணப்பட்ட கூற்றுகளையும் சேர்த்துச்
சிந்தித்துச் சூத்திரம் யாத்து உரையும் வகுத்தார் நாற்கவிராச
நம்பி என்று, இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.
|