3.4 கற்பு என்னும் கைகோள்

அகத்திணை இயலில் வகுக்கப்பட்ட கைகோள்கள் இரண்டு; அவற்றுள் இரண்டாவதாக அமைவது கற்பு.

இல்வாழ்க்கைக்குரிய நெறிகளைக் கற்பித்துக் கொண்டு, அவற்றுக்கு ஏற்ப வாழத் தொடங்கும் இல்லற வாழ்வே கற்பு எனப்படும்.

3.4.1 கற்பு - இருவகைகள்

வரைவு எனும் திருமணத்தின் பின் தொடங்கி நிகழும் கற்பு வாழ்வை, அதன் முந்தைய சூழலை வைத்து இரண்டாக வகைப்படுத்துவர்.

  1. களவின் வழி வந்த கற்பு
  2. களவின் வழி வராத கற்பு
  • களவின் வழி வந்த கற்பு (காதல் திருமணம்)
  • தலைமக்கள் களவு என்னும் காதல் வாழ்க்கை வாழ்வர். பின்னர் அறத்தொடு நிற்பதன் வாயிலாகத் திருமணம் நடைபெறும். இவ்வாறு காதல் வாழ்க்கை வாழ்ந்தபின் கற்பு வாழ்க்கைக்கு வருவதைக் களவின் வழிவந்த கற்பு என்பர். இது உடன்போக்காகச் சென்ற போதும் நடைபெறும். எனவே, சுற்றத்தினரால் ஏற்கப்படாத தன்மையும் இதற்கு உண்டு.

  • களவின் வழி வாராக் கற்பு (பெற்றோர் நிச்சயித்த திருமணம்)
  • காதல் வாழ்க்கைக்கு வாய்ப்பு இல்லாமல் தலைவனின் பெற்றோரும், தலைவியின் பெற்றோரும் பேசி முடிக்கும் திருமணம் களவின் வழி வாராக் கற்பு எனப்படும்.

    3.4.2 கற்பில் புணர்ச்சி - சில வகைப்பாடுகள்

    கற்பு வாழ்க்கையில் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சி (கூடி மகிழும்) வகைகள் சில உள்ளன. அவையாவன :-

  • குரவரில் புணர்ச்சி
  • பெற்றோர் முன்நின்று திருமணம் செய்விக்க அதன் மூலம் தலைவியோடு கூடி மகிழுதல்.

  • வாயிலிற் கூட்டம்
  • வாயில்களாக வருபவர் மூலம், தலைவியின் ஊடல் தீர்த்து, கூடி மகிழுதல்.

  • மறையிற் புணர்ச்சி
  • காதல் பரத்தையர் எனப்படும் மகளிரோடு, கற்புக் காலத்தும் மனைவி அறியாது தலைவன் கூடி மகிழுதல்.

  • மன்றல் புணர்ச்சி (மண உறவு மூலம் மகிழ்தல்)
  • காமக்கிழத்தியர், பின்முறை வதுவைப் பெருங்குலக் கிழத்தியர் முதலானவருடன் உரிமையும், மண உறவும் கொண்டு தலைவன் கூடி மகிழுதல்.