தலைவி, தலைவன் மீது கொள்ளும் பிணக்கு ஊடல்
எனப்படும். கற்பு வாழ்வின் போது, பரத்தையிற் பிரிவு
நிகழ்த்தும் தலைவன் அயல்மனை, அயற்சேரி, புறநகர் என்ற
மூன்று இடங்களுக்கும் சென்று தங்கிவிடுவான். அப்போது
தலைவிக்கு ஊடல் ஏற்படும்.
தலைவிக்கு
ஏற்படும் ஊடலைத் தீர்த்து மீண்டும் தலைவன், தலைவியின் கற்பு
வாழ்வை (இல்லற வாழ்வை) இணைத்து வைக்கும் இனிய பணியை ஆற்றுபவர்கள்
ஊடல் தீர்க்கும் வாயில்கள் எனப்படுவர்.
கொளைவல்
பாணன் பாடினி கூத்தர்
இளையர் கண்டோர் இருவகைப் பாங்கர்
பாகன் பாங்கி செவிலி அறிவர்
காமக் கிழத்தி காதற் புதல்வன்
விருந்து ஆற்றாமை என்றுஇவை ஊடல்
மருந்தாய்த் தீர்க்கும் வாயில்கள் ஆகும்
என்ற நம்பி அகப்பொருள் நூற்பா(68)
ஊடல் தீர்க்கும் வாயில்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.
பாணன், விறலி, கூத்தர், ஏவலர், (தலைவி ஊடியுள்ள நிலையைக்)
காண்பவர்கள் (இவர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களாக இருப்பர்)
பாங்கன், பாங்கி, தேர்ப்பாகன், செவிலி, சான்றோர், காமக்கிழத்தி,
புதல்வர், விருந்தினர், தலைவியின் ஆற்றாமை (பொறுத்துக் கொள்ள
முடியாத தனிமையும் வருத்தமும்) ஆகியவை ஊடல் தீர்க்கும் வாயில்களாகக்
கூறப்பட்டிருக்கின்றனர். இனி, வாயில்களாகத் திகழும் சிலரது
செயல்பாடுகளைக் காண்போம்.
பாணர் செயல்கள்
ஊடல் தீர்க்க வந்த வாயிலாகத் தன்னை ஏற்க
வேண்டுதல், இசைவு பெறுதல், தலைவியின் ஊடல் தீர்த்தல்,
அவள் அழகு அழிந்தமை கண்டு கலங்குதல், தலைவனிடம்
சென்று தலைவி சொல்லிய செய்தியை உரைத்தல், தலைவன்
மீண்டு வருவதைத் தலைவிக்குச் சொல்லுதல், தலைவன் வரவு
அறிந்த தலைவி அழகு பெற்றதை அறியார்போல வினவுதல்
முதலியன பாணரின் செயல்களாகும்.
விறலிக்குரிய செயல்கள்
பிரிவின் போது தலைவிக்கு ஆறுதல் கூறுதல், ஊடல்
தீர்த்தல், தலைவனோடு சேர்த்தல் முதலியன விறலிக்குரிய
செயல்களாகும். (விறலி - ஆடல் மகள்)
கூத்தர் செயல்கள்
தலைவியின் செல்வச் செழிப்பை வாழ்த்துதல், நல்லறிவு
புகட்டுதல், ஆறுதல் மொழி கூறுதல், தலைவனுக்கும்
தலைவிக்கும் இடையே ஏற்பட்டு விட்ட இடைவெளியைச்
சுட்டிக் காட்டுதல், பாசறைக்குச் சென்று தலைவனிடம் செய்தி
கூறுதல், தலைவன் திரும்பி வருவதைத் தலைவிக்கு
உரைத்தல் முதலானவை கூத்தர் செயல்களாகும்.
இளையோர் செயல்கள்
(இளையோர் = ஏவலர்)
வாயில் வேண்டி உடன்படச் செய்தல், தலைவியின்
ஊடல் தீர்த்தல், அதனைத் தலைவனுக்கு உணர்த்துதல்,
தலைவனுக்கும் தலைவிக்கும் பணிவிடை செய்தல், தலைவன்
வருவதைத் தலைவிக்கு உரைத்தல், தலைவனின் ஆற்றலைத்
தலைவிக்கு உணர்த்தல் முதலானவை இளையோர்க்குரிய செயல்களாகும்.
கண்டோர்க்குரிய செயல்கள்
ஊடல் தீர்த்தல், தலைவன் வரவைத் தலைவிக்கு
உணர்த்துதல் முதலானவை கண்டோர்க்குரிய செயல்களாகும்.
பாங்கர் செயல்கள்
இளமை, செல்வம், வாழ்க்கை முதலான எதுவுமே
நிலையற்றது என்ற நிலையாமைத் தத்துவத்தை உணர்த்துதல்,
தலைவன் பிரிவைத் தடுத்தல், பின்னர் பிரிவுக்கு உடன்படுதல்
முதலானவையும் நன்மை தரும் வழியில் தலைவனை
நிலைநிறுத்துதலும், தீமையிலிருந்து விலக்குதலும் பாங்கரின்
செயல்களாகும்.
பாகன் செயல்கள்
தலைவியிடம் வாயில் ஏற்க வேண்டுதல், ஊடல்
தீர்த்தல், நெடுந்தூரம் சென்ற தலைவன் விரைவில் வருவான்
எனக் கூறித் தலைவியை ஆற்றுதல் முதலானவை
பாகன் செயல்களாகும்.
பாங்கியின் செயல்கள்
பிரிவை விலக்குதல், பிரிவைத் தாமதிக்கச் செய்தல்,
பிரிவை ஏற்றுக்கொள்ளுதல், நோற்றல் முதலானவை
பாங்கியின் செயல்களாகும்.
செவிலி, அறிவர் செயல்கள்
நீதிமுறை, உலகியல் முறைகளை வெளிப்படையாகக்
கூறுதல் செவிலிக்கும் அறிவர்க்கும் உரிய செயல்களாகும்.
|