6.8 வெற்றிக்குப் 
 பின் நிகழ்வுகள்  
 
 வெற்றி 
 பெற்ற உழிஞை மன்னன், நொச்சி மன்னனும்
 அவன் நண்பரும் தன்னிடம் அடி பணிவதற்காகப் பாசறையில் 
 
 தங்கியிருக்கிறான். வெற்றியை நிலைநாட்டவும் வெளிப்படுத்தவும் 
 
 மேற்கொள்ளும் செயல்களை இனிக் காண்போம். 
  
 6.8.1 உழுது வித்திடுதல்  
 
 
 பகைவரது அரணை இடித்து, இடித்த அவ்விடத்தை 
 உழுது
 அதன்கண் கொள்ளினை வித்தும் செயல் பேசப்படுதலின் உழுது 
 
 வித்திடுதல் என்னும் பெயர்த்தாயிற்று. 
 
  
கொளுப் 
 பொருளும் கொளுவும்
 
 
தாம் 
 அழிதலை எண்ணாதவர்கள் பகைவரான நொச்சியர்கள். 
 அவர்களது பல அரண்களையும் உழிஞை மறவர்கள் இடித்தனர். 
 கழுதை பூட்டிய ஏரால் இடித்த இடத்தை உழுதனர். உழுதபின் 
 
 கவடியும் (வரகு)  கொள்ளும் வித்தினர். இவற்றைப் பற்றிப் பேசுவது  உழுது வித்திடுதல் 
 என்னும் துறை.  
 
             எண்ணார் பல்எயில் கழுதை 
            ஏர் உழுவித்து 
            உண்ணா வரகொடு கொள்வித் தன்று. 
 (வரகொடு கொள்
 = வரகும் கொள்ளும்) 
 
 எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
 
 உழிஞை வேந்தனின் சினம், 
 அழகிய மாடத்தின், 
 மாளிகையின் எல்லா இடங்களையும் துகள் உண்டாக 
 இடித்து, 
 தனது கை வேலினை ஏரடிக்கும் 
 கோலாகவும் கழுதையை 
 ஏராகவும் கொண்டு இடித்த இடத்தை உழுது, 
 உழுத பின்பு 
 கவடியும் கொள்ளும் விதைத்த பின்னும் தணியாததாயிற்று எனக் 
 கண்டோர் இயம்புகின்றனர். 
 
 துறையமைதி
 
 
 அரணைக் கைப்பற்றி மாடத்தை இடித்து, 
 உழுது, விதைத்த 
 பின்னரும் உழிஞையான் சினம் நீங்கியபாடில்லை என்றதனில், 
 
 கொளுவின் கருத்து நிரம்புதல் காண்க. துறைப் பொருத்தமும் 
 
 புலனாகும். 
 
 
 6.8.2 வாள்மண்ணுநிலை  
 
 
 மண்ணுதல் - கழுவுதல். வாளை 
 மண்ணும் நிலையைப் 
 பற்றிய துறையாகலின்  வாள் 
 மண்ணு நிலை என்ற பெயரைப் 
 பெற்றது.
  
 
  
 கொளுப் 
 பொருளும் கொளுவும்
 
 
 உயர்ந்தவர்கள் 
 வாழ்த்தி நிற்க, தூய நீரால் முழுக்காட்டிய 
 வாளின் மறப்பண்பினைச் சொல்லியது  வாள் 
 மண்ணு நிலை 
 என்னும் துறையாம். 
 
             புண்ணிய நீரில் புரையோர் 
            ஏத்த 
            மண்ணிய வாளின் மறம்கிளந் தன்று.எடுத்துக்காட்டு 
            வெண்பாவின் கருத்து  
              உழிஞை வேந்தன், இரண்டாவது முறையும், நொச்சியரது இந்த மதிலின் உள்ளே 
              இடியைப் போன்ற முரசு முழங்கப் பண்ணி, சூழ்ந்துள்ள மன்னர் எல்லாரும் 
              தனது புகழைச் சொல்லும்படியாகக் கூர்மையான கொற்ற வாளைப் புனித நீரால் 
              கழுவினான்; மலர்களொடு நறுமணப் பொருள்கள் பிறவும் சொரிந்தான்; திசைகள் 
              தோறும் தன்புகழே விளங்கக் களவேள்வியை விரும்பினான். 
 
 துறையமைதி
 
 
 முன்னரும் களவேள்வியை 
 நடத்திய உழிஞை வேந்தன், 
 இரண்டாவது முறையாகத் தனது கொற்ற வாளைப் புனித நீரில் 
 
 ஆட்டினான் என்றதால், வாள் மண்ணப்பட்ட 
 செய்தி இடம் 
 பெற்றுத் துறைக் கருத்தும் பொருந்தி வந்தது. 
 
 
 6.8.3 மண்ணு மங்கலம்  
 
 
 நொச்சியாரது மதில் கன்னியை 
 உழிஞை மன்னன் மணந்த 
 மங்கலத்தைச் சொல்வது காரணமாக  மண்ணு 
 மங்கலம்
 எனப்பட்டது. மதிலைக் கைப்பற்றியதை உருவகமாகச் சொன்னது 
 இது.
  
 
  
கொளுப் 
 பொருளும் கொளுவும்
 
 
உழிஞை 
 மன்னன், தன்னைப் பணியாத நொச்சியாரது மதில் 
 கன்னியொடு திருமணம் கூடிய (கொண்ட) சிறப்பை உரைப்பது 
 
 மண்ணு மங்கலம் 
 என்னும் துறையாகும். 
 
             வணங்காதார் மதில்குமரியொடு 
            மணம்கூடிய மலிபுஉரைத்தன்று.எடுத்துக்காட்டு 
            வெண்பாவின் கருத்து  
             உழிஞை வேந்தன், நொச்சி வேந்தனது எயிலாகிய 
 குமரியை, 
 நல் ஓரை கூடிய மங்கல நாளில் நாங்கள் மகிழ்வு கொள்ளத் தேன் 
 பொருந்திய மலர் மாலையும் ஒளி பொருந்திய அணிகலன்களும் 
 அணிந்து மணந்தான். அணிந்து மணந்த உழிஞை மன்னனுடைய 
 சேவடிக்கீழ், நொச்சி மன்னனும் துணைப்படையாக வந்த வேற்று 
 மன்னனும் ஆகிய மன்னர்களுடைய தலையும், தலையில் பூண்ட 
 முடியும் தங்கின. 
 
 துறையமைதி
 
 
 இவ்வெண்பாவில் இருவேறு மன்னர்களின் 
 தலைகளும், 
 கிரீடமும் உழிஞை வேந்தனின் சேவடிக் கீழ் 
 தங்கின என 
 வந்தமையால், நொச்சி மன்னனும் துணையென வந்த மன்னனும் 
 
 தோற்றுப் பணிந்ததும், உழிஞை வேந்தன் மதிலைக் கொண்டதும் 
 பெறப்படுகின்றன. இதனால் துறைப் பொருளும் நிரம்புகின்றது. 
 
 
 6.8.4 மகட்பால் இகல்  
 
 
 பால் - பகுதி, பக்கம். மகள் 
 பக்கல் (மகள் காரணமாக) 
 மிகும் முரணாகலின், மகட்பால் இகல் 
 எனப் பெற்றது.
  
 
  
கொளுப் 
 பொருளும் கொளுவும்
 
 
மயில் 
 போன்ற சாயலையுடையவள் நொச்சி மன்னனுடைய 
 மகள். அவளை விரும்பிய உழிஞையானது நிலைமையை நவில்வது 
 மகட்பால் இகல் என்னும் துறையாம். 
 
             மயில்சாயல் 
            மகள்வேண்டிய 
            கயில்கழலோன் நிலைஉரைத்தன்று. 
             (கயில்
              = பூட்டுவாய். (Clasp) 
 
 எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
 
 
 நொச்சி மன்னனுடைய மகள் 
 தன் மெல்லிய தோள், 
 மாந்தளிர் நிறமுடைய மேனி ஆகியவற்றால், தன் 
 தந்தையின் 
 மதிலின் புறத்தே வைகும் உழிஞை வேந்தனுக்கு, தனிமை என்னும் 
 ஏக்கத்தை உண்டாக்குவாள். 
 
 துறையமைதி
 
 
 
 உழிஞை வேந்தன், 
 நொச்சியான் மகளது அழகைப் 
 பாராட்டிக் கொண்டு, நொச்சியானது மதில் புறத்தில் - தனிமைத் 
 
 துயரத்தில் - வருந்தும் நிலையைச் சுட்டி 
 வருவதால் கயில் 
 கழலோன் நிலை 
   உரைக்கும் துறைப் 
 பொருள் 
 பொருந்துவதாகின்றது.  
 
 
 6.8.5 திறை கொண்டு பெயர்தல் 
  
 
 பகை மன்னன் செலுத்தும் 
 கப்பத்தை ஏற்றுக் கொண்டு 
 மதில் உள்ளே தங்கியிருந்த உழிஞை 
 மன்னன் மீள்வதைக் 
 கூறுவதாகலின் இத்துறை திறைகொண்டு பெயர்தல் 
 எனப் பெயர் 
 பெற்றது.
  
 
  
கொளுப் 
 பொருளும் கொளுவும்
 
 
நொச்சி 
 மன்னன் பணிந்து செலுத்திய கப்பத்தை ஏற்றுக் 
 கொண்டு, அவனது நகரினின்றும் உழிஞை வேந்தன் தன்நகர்க்கு 
 மீண்டது திறை கொண்டு 
 பெயர்தல் என்னும் துறையாம். 
 
             அடுதிறல், அரணத்து 
            அரசுவழி மொழியப் 
            படுதிறை கொண்டு பதிபெயர்ந் தன்று.எடுத்துக்காட்டு 
            வெண்பாவின் கருத்து 
             உழிஞை வேந்தன், சங்கும் 
 கொம்பும் முழங்கக் காவற்
 காட்டினை நெருப்புத் தழுவும்படியாக வெகுண்டு உலாவினான். 
 
 பிறகு, அரணகத்து இருந்த பகைவர் தாழ்வு (தனக்குப் பணிவாகச்) 
 சொல்லி வாழ்த்த, தனது பாடி வீட்டினின்றும் 
 நீங்கித் 
 தன்னகர்க்குப் புறப்பட்டான். 
 
 துறையமைதி
 
 
 உழிஞையான், திறையைப் 
 பெற்றுப் பாடியினின்றும் 
 பெயர்ந்தான் என்பதனுள், உழிஞையானின் பதிப் 
 பெயர்வும் 
 நொச்சியானின் பணிவும் வெளிப்படையாயின; திறை செலுத்தப் 
 
 பெற்றமை குறிப்பினால் பெறப்பட்டது. 
 இங்ஙனம், 
 வெளிப்படையாகவும் குறிப்பினாலும் பெறப்பட்ட செய்திகளால், 
 
 கொளுவின் கருத்து நிரம்புதல் காணலாம். 
 
             6.8.6 
              அடிப்பட இருத்தல்  
 
 
 அடிப்படல் பொருட்டு 
 நீள்நாள் இருத்தல் என்பது 
 
 அடிப்பட இருத்தல் எனக் 
 குறுகிற்று போலும். பகைமன்னரும், 
 பகை மன்னர்க்குத் துணையென வந்த மன்னர் பிறரும் அஞ்சி, 
 
 தன் அடிக்கண் தாழ்தல் பொருட்டு 
 உழிஞை மன்னவன் 
 பாடியிடத்து நீண்டநாள் தங்கி இருத்தல் காரணமாக இத்துறை 
 
 அடிப்பட இருத்தல் என இப்பெயர் பெற்றது. 
 
  
கொளுப் 
 பொருளும் கொளுவும்
 
 
பகைவர்கள், 
 அவர்களது மறப்பண்பைத் தங்களிடமிருந்து 
 விலக்கி விடும்படியாகவும், தனது ஆணையை ஏற்றுக் கொண்டு 
 
 தனது காலடியில் பணியும்படியாகவும், உழிஞை மன்னன் தன் 
 
 பாடியினின்றும் பெயராதவனாய் நீண்ட காலம் இருந்தது அடிப்பட 
 
 இருத்தல் என்னும் துறையாம். 
 
             பேணாதார் மறம்கால 
            ஆணைகொண்டு அடிப்படஇருந்தன்று. 
 
            (கால 
              = அழிய) 
 
 எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து
 
 
 உழிஞை வேந்தன், 
 இவனுடைய முற்றுகைப் போருக்கு
 முன்பு தம்முள் ஒத்துப் போகாத பகை 
 நாட்டார்கள்கூட, 
 முற்றுகைக்குப் பின்னர் ஒன்றிப் போனார்கள். 
 ஒன்றிப் போன 
 இப்பகைவர்கள் நாடு ஒருவழிப்பட்டு இவனது ஏவலைக் கேட்கும் 
 பொருட்டும், வெற்றி பெறாத நொச்சியார், மீண்டும் 
 போரிட 
 முயற்சி செய்தால், அதனைத் தடுத்துப் போரிடும் பொருட்டும் 
 
 உழிஞை மன்னவன் தான் தங்கியிருந்த 
 பாடியினின்றும் 
 பெயராதவனாய் இருந்தான். அஃதாவது, முற்றுகைப் போரில் 
 
 வென்றும் அவன் தன் நகருக்கு மீளாது பாடியில் தங்கினான் 
 
 என்பது கருத்து. 
 
 
 துறையமைதி
 
 
 பகைவர் மீண்டும் போரிட 
 முயலாதவாறு தடுக்கவும், தன் 
 ஆணைக்குக் கட்டுப்பட்டு வாழச் செய்யவும் 
 உழிஞையான் 
 பாடியிலேயே தங்கியிருந்தான் என்பது அடிப்பட 
 இருத்தல் 
 என்னும் துறைப் பொருளை முற்றிலும் நிறைவு செய்கிறது.  
 
 
 6.8.7 தொகைநிலை  
 
 
 மதிலகத்துள்ள மன்னர் 
 கூட்டம், அஞ்சி வந்து 
 அடிபணிந்தமையை  இயம்பும் துறையாகலின் தொகை நிலை 
 எனப் 
 பெற்றது. 
 
             கொளுப் பொருளும் கொளுவும் 
            
 
மதில்களை 
 உடைய பகை மன்னர்கள் அனைவரும் தோற்ற
 நொச்சியானின் மதிலிடத்தே வந்து, உழிஞை வேந்தனின் 
 அடிகளை 
 அடைந்தது தொகை நிலை என்னும் துறையாம். 
 
             எம்மதிலின் 
            இகல்வேந்தரும்  
            அம்மதிலின் அடிஅடைந்தன்று. 
            எடுத்துக்காட்டு வெண்பாவின் கருத்து 
			  
              இவ்வுலகத்துள், உழிஞை மன்னனோடு மாறுபாடு கொண்டு போர் விரும்பிய காவலர்கள் 
              எல்லாரும், வீழ்ந்துபட்ட நொச்சி மன்னனின் மதிலின் முன்னே நின்று அவனுடைய 
              (உழிஞை வேந்தனுடைய) அடிபணிந்து தத்தம் பகைமையை விட்டனர். 
 
 துறையமைதி
 
 
 உழிஞை மன்னனது ஆணையை ஏற்காது முரண்பட்ட 
 காவலர் எல்லாரும், நொச்சி மன்னன்
 வீழ்ந்த பாட்டை நினைந்து, 
 உழிஞை மன்னனால் வென்று கைப்பற்றப்பட்ட மதிலைச் சார்ந்து, 
 தங்கள் முரணைத் துறந்து தாழ்வு சொல்லி வழிப்பட்டனர் என்றதில், 
 கூட்டமாக அடிமைப்பட்டது அறியக் கிடக்கிறது. இதனால் துறைப் 
 பொருத்தம் புலனாகின்றது. 
  |