2.0 பாட முன்னுரை புறப்பொருள் வெண்பா மாலையின் எட்டாவது பகுதி வாகைத் திணை. வாகைத் துறைகளைத் தொகுத்துக் கூறும் சூத்திரம், 32 துறைகளின் கருத்தை விளக்கும் கொளுக்கள், அவற்றுக்கு இலக்கியமான வெண்பாக்கள் ஆகியவற்றைக் கொண்டது இப்படலம். வாகை என்பது வெற்றியைக் குறிக்கும் சொல். இவ் வெற்றி இரண்டு வகையாக அமைகிறது. பிறரோடு முரணி அதில் வெற்றிபெறுதல் ஒருவகை. இது உறழ்வு வெற்றி எனலாம். உறழாது இயல்பாகவே அடையும் வெற்றி இன்னொரு வகை. இதை இயல்பு வெற்றி எனலாம். பொதுவாக வாழ்வில் நாம் பெற வேண்டிய தெளிவு இருக்கிறது. அது உண்மை வெற்றி எனலாம். இவற்றை எல்லாம் வாகைத் துறைகள் எடுத்துரைக்கின்றன. வாகைப் படலமும் துறைகளும் முதலில் விளக்கப்படுகின்றன. அடுத்து வாகைத் திணை விளக்கப்படுகிறது. அரசன் உறழ்ந்து பெறுகிற வெற்றி உறழ்ச்சி வெற்றி - 1 என்ற பகுதியில் கூறப்படுகிறது. பார்ப்பனர், வணிகர், வேளாளர், பொருநர், அறிவர், தாபதர் ஆகியோர் பிறரோடு உறழ்ந்து பெறுகிற வெற்றி உறழ்ச்சி வெற்றி - 2 என்ற பகுதியில் சொல்லப்படுகிறது. வெற்றி பெறும் நோக்கில் காரணமாக அரசன் உறுதியுடன் பாசறையில் இருந்த நிலை பாசறை இருப்பு என்ற பகுதியில் சொல்லப்படுகிறது. அரசரும் பிறரும் பெற்ற இயல்பான வெற்றி இயல்பு வெற்றி என்ற பகுதியில் சொல்லப்படுகிறது. பிற செய்திகள் பிற என்ற பகுதியில் காட்டப்படுகின்றன. வாழ்க்கையில் அடைய வேண்டிய தெளிவு உண்மையான வெற்றி என்ற பகுதியில் காட்டப்படுகிறது. |