2.3 உறழ்ச்சி வெற்றி - 1

உறழ்தல் என்றால் போட்டி என்று பொருள். பிறருடன் போட்டியிட்டுப் பெறும் வெற்றியை வாகை என்று கூறுவதும் போட்டியின்றி இயல்பாக ஒழுக்கத்தால் பெற்ற மேம்பாடான வெற்றியை முல்லை என்று கூறுவதும் மரபு. எடுத்துக் காட்டாக அரச வாகை என்பது உறழ்ந்து பெறும் வெற்றியையும் அரச முல்லை என்பது இயல்பாகப் பெற்ற மேம்பாட்டையும் குறிக்கின்றன எனலாம். உறழ்ச்சி வெற்றி - 1 என்னும் இப்பகுதியில் அரசன் உறழ்ந்து பெற்ற வெற்றி பற்றிய துறைகளான வாகை அரவம், அரச வாகை, முரச வாகை, மறக்கள வேள்வி, கள வேள்வி, முன் தேர்க்குரவை, பின் தேர்க்குரவை ஆகியன விளக்கப்படுகின்றன.

2.3.1 வாகை அரவம்

வாகை மாலை சூடி ஆரவாரித்தல் என்பது இதன் பொருள். இதனைக் கொளு,

வெண்கண்ணியும் கருங்கழலும்
செங்கச்சும் தகைபுனைந்தன்று         - (கொளு-2)

(கண்ணி = மாலை, தகை = அழகு)

எனப் புலப்படுத்துகிறது. ‘வெண்ணிற வாகை மாலையையும் வலிய கழலையும் சிவந்த கச்சினையும் அழகுற அணிதல்’ என்பது பொருள். அரசனும் வீரரும் வெற்றியைக் குறிக்கும் வகையில் அணிவர். வெண்பா, வெற்றி மகிழ்ச்சியினால் பட்ட புண்களையும் மறந்து மகிழ்வார்கள் என்று குறிப்பிடுகிறது.

அனைய அமருள் அயில்போழ் விழுப்புண்
இனைய இனிக்கவலை இல்லை - புனைக
அழலோ(டு) இமைக்கும் அணங்குடைவாள் மைந்தர்
கழலோடு பூங்கண்ணி கச்சு.

2.3.2 அரச வாகை

வெற்றி பெற்ற அரசனின் சிறப்பைக் கூறுதல் என்பது இதன் பொருள். அரசனது செங்கோன்மையை வீரர்களும் பிறரும் பாராட்டுவதைக் கொளு,

பகலன்ன வாய்மொழி
இகல்வேந்தன் இயல்புரைத்தன்று.            - (கொளு-3)

எனக் காட்டுகிறது. ‘நுகத்தடியின் பகலாணி போன்ற நடுநிலைமையான சொல்லைக் கொண்டவனும் பகையை வென்றவனுமாகிய அரசனின் தன்மையைச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா, அரசனின் தகுதிகளை எடுத்துக் காட்டுகிறது.

காவல் அமைந்தான் கடலுலகம் காவலால்
ஓவல் அறியாது உயிர்க்குவகை - மேவருஞ்சீர்
ஐந்தொழில் நான்மறை முத்தீ இருபிறப்பு
வெந்திறல் தண்ணளிஎம் வேந்து

‘ஓதல், வேட்டல், ஈதல், படைக்கலம் பயிலுதல், பல்லுயிர் ஓம்புதல் என்னும் ஐந்து வகைத் தொழில்களையும் குறைவின்றிச் செய்பவன் எம் அரசன். நான்கு மறைகளைக் கற்றவன்; முத்தீ வளர்த்து வழிபடுபவன்; பூணூல் அணிதலின் முன், அணிந்த பின் என இரு பிறப்பினை உடையவன்; கருணை மிக்கவன். அவன் நடுவு நிலைமை தவறாது காத்தலால் நாட்டு உயிர்கள் மகிழ்வோடிருகின்றன’. இவ்வாறு வெற்றி பெற்ற அரசனைப் பாராட்டுவர்.

2.3.3 முரச வாகை

அரசனது வெற்றி முரசின் தன்மையைக் கூறுதல் என்பது இதன் பொருள்.

ஒலிகழலான் அகல் நகருள்
பலிபெறுமுரசின் பண்புஉரைத்தன்று              - (கொளு-4)

‘ஒலிக்கின்ற சூழல் அணிந்த அரசனின் அகன்ற அரண்மனையில் உள்ள வீரரிடத்துப் பலியைப் பெறும் முரசின் தன்மையைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, முரசு அரண்மனையில் இனிதாக முழங்குவதாகச் சுட்டுகிறது.

2.3.4 மறக்கள வழி

போர்க்களத்தைச் சிறப்பித்தல் என்பது பொருள். போர்க்களத்தை ஏர்க்களம் என்று உருவகித்து அரசனின் வெற்றியைக் கூறுதல். களவழி என்றால் களத்தில் நிகழும் செயல்கள் என்று பொருள். களவழி நாற்பது என்னும் இலக்கியம் இத்தன்மையில் அமைந்தது.

முழவு உறழ் திணிதோளானை
உழவனாக உரைமலிந்தன்று              - (கொளு-5)

‘முழவு போன்று திரண்ட தோளினை உடைய அரசனை, உழும் வேளாளனாகப் புகழ்ந்து பேசுதல்’ என்பது இதன் பொருள்.

வெண்பா, அரசனையும் உழவனையும் ஒப்பிட்டுச் சிறப்பிக்கிறது.

அஞ்சுவரு தானை அமர்என்னும் நீள்வயலுள்
வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்-செஞ்சுடர்வேல்
பைங்கண் பணைத்தாள் பகட்டுழவன் நல்கலான்
எங்கட்கு அடையா இடர்.

மன்னனாகிய உழவன் போர்க்களம் என்னும் வயலிலே வேலாகிய கோலினை ஓச்சி, யானையாகிய காளையைக் கொண்டு உழுது, சினம் என்கிற வித்தினை விதைத்து வளர்த்து, புகழ் என்னும் விளைச்சலை எடுக்கிறான். இவன் காத்தலால் எம் நாட்டு மக்களுக்கு வறுமை என்பது இல்லை.’ புறநானூறு 373ஆம் பாடல் இத்துறை சார்ந்தது.

2.3.5 களவேள்வி

போர்க்களத்தில் வேள்வி செய்தல் என்பது இதன் பொருள். வெற்றி பெற்ற மன்னன் பேய்களுக்கு ஊன் விருந்தளித்தான் என்று கூறும் மரபு இது.

அடுதிறல் அணங்குஆர
விடுதிறலான் களம்வேட்டன்று                    - (கொளு-6)

‘கொல்லும் வலிமை மிக்க பேய்கள் வயிறார உண்ணுமாறு மிக்க வலிமையுடைய வேந்தன் களவேள்வி செய்தல்’ என்பது பொருள். வேந்தன் களவேள்வி செய்த திறத்தினை வெண்பா விளக்குகிறது.

பிடித்தாடி அன்ன பிறழ்பல்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான்-முடித்தலைத்
தோளொடு வீழ்ந்த தொடிக்கை துடுப்பாக
மூளையஞ் சோற்றை முகந்து

‘பிறழ்ந்த பற்களையுடைய பேய் உண்ணுமாறு, மகுடம் அணிந்த தலையாகிய மிடாவில், தோளோடு வெட்டப்பட்டு வீழ்ந்த தொடிக்கையைத் துடுப்பாகக் கொண்டு மூளையாகிய சோற்றை முகந்து மன்னன் வழங்கினான்.

2.3.6 முன் தேர்க்குரவை

அரசனது தேரின் முன் குரவையாடுதல் என்பது இதன் பொருள். தும்பையில் இடம் பெற்ற முன் தேர்க் குரவையில் தேர் முன் வீரர் ஆடுதல் குறிப்பிடப்படுகிறது; வாகைப் படலத்தின் முன் தேர்க்குரவைத் துறையில் தேர் முன் பேய் ஆடுதல் குறிப்பிடப்படுகிறது. தும்பையில் போரில் ஈடுபட்டிருக்கும் தேர் குறிப்பிடப்படுகிறது; வாகையில் வெற்றி விளைத்த தேர் குறிப்பிடப்படுகிறது.

வென்றுஏந்திய விறல்படையோன்
முன்தேர்க்கண் அணங்குஆடின்று            - (கொளு-7)

பகைவரை வென்ற சிறப்பைக் கொண்ட படையினையுடைய மன்னனது தேரின் முன் பேய் ஆடுதல் என்பது பொருள். வெண்பா, பேய்கள் தங்களுக்கு உணவு கிடைக்க வகை செய்த மன்னனை வாழ்த்தி ஆடுவதாகக் குறிப்பிடுகிறது. ‘புலவாய புன்தலைப்பேய்’ என்று ‘புலால் நாறும் வாயினையும் சிவந்த தலை மயிரினையும் உடைய பேய்’ என வெண்பா பேயைக் காட்டுகிறது.

2.3.7 பின் தேர்க்குரவை

தேரின் பின் குரவையாடுதல் என்பது இதன் பொருள். இது தும்பையிலும் இடம் பெற்றுள்ளது.

பெய்கழலான் தேரின்பின்
மொய்வகைவிறலியர் வயவரொடுஆடின்று           - (கொளு-8)

‘வீரக்கழலை அணிந்த மன்னனது தேரின் பின், வளையல்கள் அணிந்த விறலியர் வீரரொடு ஆடுதல்’ என்பது பொருள். ஆடும் விறலியர் வீரர் ஆகியோருக்கு வெண்பா, ‘குன்றோர் மழகன்றும் கூந்தல் பிடியும் போல்’ என்று உவமை காட்டுகிறது.