2.6 இயல்பு வெற்றி

போட்டியிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாட்டையும் வெற்றி எனலாம். இவ்வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர். அரசன் முதலானோர் பெறும் மேம்பாட்டினை இப்பகுதியிலுள்ள துறைகள் காட்டுகின்றன. அரச முல்லை, பார்ப்பன முல்லை, அவைய முல்லை, கணிவன் முல்லை, மூதின் முல்லை, ஏறுஆண் முல்லை, வல்லஆண் முல்லை, காவல் முல்லை, பேர்ஆண் முல்லை, மற முல்லை, குடை முல்லை ஆகிய துறைகள் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.

2.6.1 அரச முல்லை

அரசனது மேம்பாடு என்பது இதன் பொருள். கொளு,

செருமுனை உடற்றும் செஞ்சுடர் நெடுவேல்
இருநிலங் காவலன் இயல்பு உரைத்தன்று          -(கொளு-17)

எனக் காட்டுகிறது.

போர்க்களத்தில் பகைவரை வருத்தும் நெடிய வேலைக் கொண்டவனும் பெரிய நிலவுலகத்தைக் காவல் செய்கிறவனும் ஆகிய அரசனின் தன்மையைக் கூறுதல் என்பது பொருள். இயல்பாக வெற்றி பெறுபவனுக்குரிய தன்மைகளை வெண்பா விளக்குகிறது.

செயிர்க்கண் நிகழாது செங்கோல் உயரி
மயிர்க்கண் முரசு முழங்க - உயிர்க்கெல்லாம்
நாவல் அகலிடத்து ஞாயி(று) அனையனாய்க்
காவலன் சேறல் கடன்.

அரசன், குற்றம் அற்றவனாகி இருக்க வேண்டும். வெற்றி முரசினை முழங்கும் வண்ணம் திகழ வேண்டும். எல்லா உயிர்க்கும் செங்கோன்மை காட்ட வேண்டும். எல்லா உயிர்க்கும் நன்மை செய்யும் கதிரவன்போல் நடக்க வேண்டும். இதுவே அரசன் கடமை.

2.6.2 பார்ப்பன முல்லை

பார்ப்பனரின் மேம்பாடு என்று பொருள். கொளு,

கான்மலியும் நறுந்தெரியல் கழல்வேந்தர் இகல்அவிக்கும்
நான்மறையோன் நலம்பெருகு நடுவுநிலை உரைத்தன்று.                                                  - (கொளு-18)

என்று விளக்குகிறது.

மணம் மிக்க மாலையையும் வீரக்கழலையும் அணிந்த அரசர்கள் இருவரின் பகையை ஒழித்து அவர்கள் நண்பராகும் வண்ணம் நடுவுநிலையில் சமாதானம் பேசும் பார்ப்பனது இயல்பைக் கூறும் பகுதி. அந்தணரின் செம்மையை இது உணர்த்துகிறது. பார்ப்பனன் சந்து செய்விக்கும் தன்மையை வெண்பா கூறுகிறது.

ஒல்லென்நீர் ஞாலத்து உணர்வோ விழுமிதே
நல்லிசை முச்செந்தீ நான்மறையோன் - செல்லவும்
வென்றன்றி மீளா விறல்வேந்தர் வெம்பகை
என்றன்றி மீண்ட திலர்.

நல்ல புகழும் முத்தீ வளர்த்தலும் நான்மறை ஓதலும் உடைய அந்தணன், சந்து செய்விக்கச் சென்ற அளவில், படையெடுத்தால் வெற்றி பெறாமல் நாடு திரும்பாத கொள்கையை உடைய வேந்தர் இருவரும் போரினை நிறுத்தித் தத்தம் நாடுகளுக்குத் திரும்பினர் என்ற கண்டோர் கூறும் வகையில் சந்து செய்விக்க வேண்டும்.

2.6.3 அவைய முல்லை

அவைக்களத்துச் சான்றோர் மேம்பாடு என்பது இதன் பொருள். கொளு,

நவைநீங்க நடுவுகூறும்
அவைமாந்தர் இயல்புஉரைத்தன்று              - (கொளு-19)

என்று காட்டுகிறது.

குற்றம் நீங்கும் வண்ணம் நடுநிலையோடு பேசும் அவைக்களத்துச் சான்றோர் இயல்பைக் கூறுதல் என்பது பொருள். அவை மாந்தர் என்பது அறங்கூறவையத்தாரைக் குறிக்கிறது. அவர்கள் தீர்ப்பு வழங்கும் பொறுப்பு உடையவர்கள். இது பற்றிய வெண்பா:

தொடைவிடை ஊழாத் தொடைவிடை துன்னித்
தொடைவிடை ஊழ்இவை தோலாத் - தொடை வேட்(டு)
அழிபடல் ஆற்றால் அறிமுறையேன்று எட்டின்
வழிபடர்தல் வல்ல(து) அவை.

குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், வாய்மை, தூய்மை, நடுவுநிலைமை, அழுக்காறு இன்மை, அவா இன்மை என்னும் எட்டுப் பண்புகளும் தம்மிடம் ஒருங்கே அமையப் பெற்ற அறங்கூறவையத்தார், வழக்கிடுவோரை ஆராய்ந்து வினவி, அவர் கூறும் விடையை நன்கு ஆராய்ந்து, அவ்வினா விடை வாயிலாக உண்மையை உணர்ந்து துணிந்து தீர்ப்பு வழங்குதல் கடமை.

2.6.4 கணிவன் முல்லை

சோதிட நூல் வல்லவனின் மேம்பாடு என்று பொருள். காலக் கணிதன் எனவும் கணிவன் குறிப்பிடப்படுகிறான். கொளு,

துணிபுணரும் தொல்கேள்விக்
கணிவனது புகழ்கிளந்தன்று                 - (கொளு-20)

என்று காட்டுகிறது.

‘பலவற்றையும் முற்ற அறிந்தவனும் கேள்வி அறிவுமிக்கவனும் ஆன கணிவனின் மேம்பாட்டைச் சொல்லுதல்’ என்பது பொருள்.

புரிவின்றி யாக்கைபோல் போற்றுவ போற்றிப்
பரிவின்றிப் பட்டாங்(கு) அறியத் - திரிவின்றி
விண் இவ் உலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி.

தன் உடலைப் பேணுவதைப் போலக் கல்வி அறிவைத் தவறாது பேணி, மக்கள் வருந்தாமல் உண்மையை உணரும் வாகையால் தவறு ஏதும் இன்றி வானமும் நிலவுலகும் விளைவிக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் எண்ணிக் கூறுவான் கணிவன்.

2.6.5 மூதின் முல்லை

பழைய மரக்குடியில் பிறந்தோரது மேம்பாடு என்பது மூதில் முல்லை. குறிப்பாகப் பெண்களின் மறப்பண்பினைக் கூறுவது.

அடல்மேல் ஆடவர்க்(கு) அன்றியும் அவ்வில்
மடவரல் மகளிர்க்கும் மறம் மிகுத்தன்று              - (கொளு-21)

என்பது கொளு.

‘வேலையுடைய ஆடவர்க்கு மட்டுமன்றி வீரக்குடியில் பிறந்த பெண்டிர்க்கும் வீரப் பெருமிதம் உண்டு எனக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா,

வந்த படைநோனாள் வாயில் முலைபறித்து
வெந்திறல் எஃகம் இறைக்கொளீஇ - முந்தை
முதல்வர்கல் தான்காட்டி மூதில் வடவாள்
புதல்வனைச் செல்கஎன்றாள் போர்க்கு.

என வீரச்சிறப்பை உணர்த்துகிறது. பகைப்படை தன்நாட்டின்மீது எதிர்த்து வருதலைப் பொறாதவளாய்ப் பாலுண்ணும் தன் பிள்ளையிடம், வீட்டிலிருந்த வேலினை வளைவு நிமிர்த்திக் கையில் கொடுத்து, தன் முன்னோர் வீரமரணம் எய்தி நடுகல்லில் தெய்வமாக நிற்கும் மாட்சியை அவனுக்குக் காட்டி, அவனைப் போர்க்களம் நோக்கிச் செல்ல விடுப்பாள் வீரத்தாய்.

2.6.6 ஏறாண் முல்லை, வல்லாண் முல்லை

மேன்மேல் உயருகின்ற ஆண்மைத் தன்மையுடைய குடியின் மேம்பாடு என்பது ஏறுஆண் முல்லையின் பொருள். வல் ஆண் முல்லை என்பது வல்லமை மிக்க ஆணின் மேம்பாடு என்று பொருள். இரண்டு துறைகளும் வீரத்தைச் சிறப்பிப்பவை.

  • ஏறுஆண் முல்லை
  • மாறு இன்றி மறம்கனலும்
    ஏறு ஆண்குடி எடுத்துஉரைத்தன்று              - (கொளு-22)

    என்பது கொளு.

    பகைவரைச் சந்திக்காத பொழுதிலும் சினம் மிகுந்து காணப்படுகின்ற மேன்மேல் உயர்கின்ற ஆண்மைத் தன்மையுள்ள குடியின் சிறப்பைக் கூறுதல் என்பது பொருள். வெண்பா இத்தகைய குடியின் சிறப்பை நன்கு எடுத்துக்காட்டுகிறது.

    கல்நின்றான் எந்தை கணவன் களப்பட்டான்
    முன்நின்று மொய்அவிந்தார் என்ஐயர் - பின்நின்று
    கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேலோடி
    உய்போல் கிடந்தான்என் ஏறு.

    ‘என் தந்தை முன்நாள் போரிலே இறந்து நடுகல்லில் பொறிக்கப்பட்டான். என் கணவனும் போர்க்களத்தில் இறந்தான். என் தமையன்கள் பகைவர் முன் ஓயும்வரை போரிட்டு இறந்தனர். என் மகன் பின்வாங்கி ஓடும் படையைத் தாங்குபவன் போல நின்று, பகைவர் அம்புகள் தைக்க முள்ளம்பன்றிபோல் கிடந்தான். இவ்வாறு மறத்தாய் கூற்றாக வெண்பா, வீரக்குடியின் சிறப்பைக் கூறுகிறது.

  • வல்ஆண் முல்லை
  • இல்லும் பதியும் இயல்பும் கூறி
    நல்ஆண் மையை நலம்மிகுத் தன்று              - (கொளு-23)

    எனக் கொளு காட்டுகிறது.

    ‘ஒரு மறவனது குடிச்சிறப்பையும், ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது மேதக்க ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது’ என்பது பொருள். வெண்பா, ‘போர்க்களத்தில் தன் அரசன் முன் அவனுக்குத் துணையாக நின்று மார்பில் வேல் மூழ்க விழுப்புண்பட்டுப் புகழ் மாலை சூடியவன் இவன்’ என உயர்த்திக் கூறுகிறது.

    2.6.7 காவல் முல்லை, பேர்ஆண் முல்லை

    காவல் சிறப்பு என்பது காவல் முல்லை. பெரும் ஆண் தன்மையின் சிறப்பு என்பது பேர் ஆண் முல்லை. இவையிரண்டும் அரசனது மேம்பாடுகளைக் கூறும் துறைகள்.

  • காவல் முல்லை
  • இதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன.

    தவழ்திரை முழங்கும் தண்கடல் வேலிக்
    கமழ்தார் மன்னவன் காவல் மிகுத்தன்று             - (கொளு-24)

    கடல் சூழ்ந்த உலகத்தை காக்கும் அரசனின் காவல் சிறப்பைக் கூறுவது என்பது பொருள். ஒருநாள் அவன் காவல் தொழில் தவறினாலும் அறங்கூறு அவையத்தார் செயல்பட முடியாது என்று வெண்பா, அரசாட்சிச் சிறப்பைப் போற்றுகிறது.

    தக்காங்குப் பிறர் செறினும்
    அத்துறைக்(கு) உரித்தாகும் - (கொளு-25)

    காவல் இயல்பை மன்னனுக்கு எடுத்துக் கூறுவதும் இத்துறையில் அடங்குகிறது என்பது பொருள். ‘தந்தை போன்றே ஆறில் ஒருபங்கு வரி வாங்கி அதனைப் பிறர்க்குக் கொடுத்துத் தானும் நுகர்ந்து தன் ஆளுகைக்கு உட்பட்ட உயிர்கள் தீதின்றி நல்வாழ்வு வாழுமாறு பாதுகாக்க வேண்டும்’ எனச் சான்றோர் கூறுவது இதில் அடங்குமென வெண்பா விளக்குகிறது.

  • பேர்ஆண் முல்லை
  • உளம்புகல மறவேந்தன்
    களம்கொண்ட சிறப்புரைத்தன்று                - (கொளு-26)

    என்பது கொளு.

    ‘வீரம் மிக்க அரசன், மறவர்கள் விரும்பும்படி போர்க்களத்தில் வென்ற சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். ‘பகைவருடைய போர்க்களத்தை அடைந்து தன் வாளால் பகைவரின் யானைப்படை ஓடும் வண்ணம் போரிட்டுப் போர்க்களத்தைத் தனக்கு உரிமையாகக் கொண்டு வென்றான்’ என்று வெண்பா எடுத்துக் காட்டுகிறது.

    2.6.8 மற முல்லை

    மறவனது வீர மேம்பாடு என்று பொருள். கொளு,

    வெள்வாள் வேந்தன் வேண்டிய(து) ஈயவும்
    கொள்ளா மறவன் கொதிப்புஉரைத் தன்று          - (கொளு-27)

    என விளக்குகிறது.

    ‘வாள் வேந்தன், விரும்பிய பொருளைக் கொடுப்பினும் அதை ஏற்றுக் கொள்ளாத வீரன் பகைவரை வெல்லுதலையே குறிக்கோளாகக் கொண்டு சினக்கும் மறவனது சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். ‘தன் கடமைக்கு எந்தப் பரிசிலையும் விரும்பாத வீரத்தின் உயர்நிலையை இது காட்டுகிறது.’ ‘அரசன் பொருள் கொடுக்கவும் அதை வாங்காது தனது வாளைக் கையில் ஏந்தி வீரவுரைகள் கூறி நின்றான் வீரன்’ என்று வெண்பா காட்டுகிறது.

    2.6.9 குடை முல்லை

    வெண்கொற்றக் குடையினது மேம்பாடு என்பது பொருள். மன்னனது குடையைப் புகழ்வது. கொளு,

    மொய்தாங்கிய முழுவலித்தோள்
    கொய்தாரான் குடைபுகழ்ந்தன்று             - (கொளு-28)

    என விளக்குகிறது.

    ‘போரினைத் தடுத்த மிகுந்த வலிமையினைக் கொண்ட தோள்களில் மாலையணிந்த அரசனின் கொற்றக் குடையின் சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள். இதுவும் அரசனின் சிறப்பைக் கூறுவதாகும். வெண்பா இதனை நயம்பட விளக்குகிறது.

    வேயுள் விசும்பு விளங்கு கதிர்வட்டம்
    தாய புகழான் தனிக்குடைக்குத் - தோயம்
    எதிர்வழங்கு கொண்மூ இடைபோழ்ந்த சுற்றுக்
    கதிர்வழங்கு மாமலை காம்பு

    இவ்வெண் கொற்றக் குடைக்கு வானமே மேல்துணியாம்; கதிரவனே மேலே உள்ள வட்டமாம்; நீர்த்தாரை சொரியும் மேகமே சுற்று மாலையாம்; திங்களும் ஞாயிறும் திரியும் மேரு மலையே காம்பாம்’ எனப் புகழ்தலை வெண்பா காட்டுகிறது.